வந்தாச்சு



புத்தகம்

தொல்லியல் ஆய்வுகள், செப்பேடுகள் பற்றிய நூல்கள் பெரும்பாலும் இருண்மையான மொழி நடை கொண்டு, வாசகனை மிரட்டும் தொனியிலேயே இருக்கும். அந்த கருத்தாக்கத்தை தகர்க்கிறது இந்த நூல். சோழர் காலத்துச் செப்பேடுகளைத் தொகுத்து, அதன் வழியாக வரலாறு, வாழ்க்கை, வளம், ஆட்சித்திறம் அனைத்தையும் தருகிறார் முனைவர் ராஜேந்திரன். புராண கால சோழர்கள் முதல் பிற்காலச் சோழர்கள் வரை 86 சோழ மன்னர்களையும், அவர்களுடைய பங்களிப்பையும் விவரிப்பது சிறப்பு. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக இயங்கும் டாக்டர் மு.ராஜேந்திரன், கடும் பணிச்சூழலுக்கு இடையிலும் களஆய்வு மேற்கொண்டு பிரமிக்க வைக்கும் தொனியில் இந்நூலை எழுதியுள்ளார். 322 பக்கங்கள், விலை: ரூ.200/-, வெளியீடு:

அகநி வெளியீடு, எண்: 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604408, பேச: 94443 60421.சோழர்காலச் செப்பேடுகள் ஸீ டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.

வலை : computertamil
கணினி தொடர்பான எல்லா சந்தேகங்களுக்கும் தெள்ளத் தெளிவாக தெள்ளு தமிழில் விளக்கம் அளிக்கும் தளம் ஷ்ஷ்ஷ்.நீஷீனீஜீutமீக்ஷீtணீனீவீறீ.மீu. ‘மானிட்டரில் பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது?’, ‘பயணத்தில் இருந்தபடியே இணையம் மூலம் உங்கள் வீட்டுக் கணினியை இயக்குவது எப்படி?’ என்றெல்லாம் விதவிதமான தலைப்புகளில் தொழில்நுட்பத்   தகவல்களை தமிழில் தந்து   அசத்துகிறது இதன் முகப்புப் பக்கம். போட்டோஷாப் மென்பொருளை சாமானிய மக்களும் பயன்படுத்தும் விதமாக இதுவரை   31 தலைப்புகளில் ‘தமிழ் டியூடோரியல்ஸ்’   கொண்டு வந்திருக்கும் இந்தத் தளம், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஓர் இலங்கைத் தமிழரால் நடத்தப்படுகிறது.

இசை : கலியுகம்

தாஜ்நூர் இசையில் 5 பாடல்களுடன் வெளிவந்திருக்கிறது ‘கலியுகம்’ ஆடியோ. காதை பஞ்சராக்கும் பேரிரைச்சல் இல்லாமல் வாத்தியங்களை அடக்கி வாசிக்க வைத்து, வரிகளுக்கும் குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஆறுதல்.

‘மரண கானா’ விஜி தானே இயற்றிப் பாடியிருக்கும் ‘அஜாலா உஜாலா’ பாடல், கானா பிரியர்களுக்கு பிரியாணி விருந்தாய் அமைந்திருக்கிறது. நயமான சொற்களால், கவிஞராகவும் கவனிக்க வைக்கிறார் விஜி. ஹரிச்சரணின் குரலில் ‘சிரபுஞ்சி சாலையிலே...’ பாடலில் இதமான சாரல். ‘வெண்ணையில அளவெடுத்து’ பாடல் வரிகள் அடுக்கியதுபோல மெட்டை ஒட்டாமல் செல்கின்றன. ‘ஏடா கூட ஆசை நம் ஜீவன் தந்தது...’ பாடலில் பாப் ஸ்டைல் பளிச்சிடுகிறது.

‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தினைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் பாடலாசிரியர் முகம் காட்டியிருக்கும் மனுஷ்ய புத்திரன், ‘ஏனோ ஏனோ...’ பாடலை எழுதியிருக்கிறார். மெட்டுக்கு வரிகளை பூட்டும் லாவகம் மனுஷ்ய புத்திரனுக்கு நன்றாகவே வருகிறது. ‘வரும் வழியில் தனிமலராய் நீ பூத்துவிட்டாய்... கடல் அலையில் சிறு படகாய் என்னை அலையவிட்டாய்...’ என்ற வரிகள் மிதக்கும் இடம் அதற்குச் சான்று.

இதழ் : சட்டக்கதிர்
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களின் தீர்ப்புகளில், பத்திரிகைகள் தங்கள் செய்திக்குத் தேவையான பகுதிகளை மட்டுமே எடுத்தாள்கின்றன. தீர்ப்பின் முழு வடிவத்தையும் படித்தறிய விரும்பினால் நீதிமன்ற நூலகங்களுக்குத்தான் செல்ல வேண்டும். அந்நிலையை மாற்றி, மிக முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை எளிய தமிழில் அனைத்து விபரங்களையும் சேர்த்துத் தருகிறது இந்த இதழ். சட்ட நிபுணர்களும், இலக்கிய ஆளுமைகளும் நிறைந்த ஆசிரியர் குழு இந்த இதழை வழிநடத்துகிறது. ‘ஒருவர் அரசு ஊழியராவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன’ என்பது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் தமிழாக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நிலம் கையகப்படுத்துதல், சொத்து விற்பனையில் நடக்கும் மோசடிகள் பற்றிய தீர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன.