நிகழகள் நடந்த பாதைகள்



சாவு எனும் சாகசம்


மனித வாழ்வின் தீர்க்க முடியாத புதிர் தற்கொலைதான் என்று தோன்றுகிறது. சுய அழிப்பிற்கான முடிவை மனிதன் எப்படி எடுக்கிறான் என்பதும், அதை எவ்வாறு கச்சிதமாக நிறைவேற்றுகிறான் என்பதும் மனித இயல்பு பற்றிய ஒரு கடுமையான சவால். மனிதன் வாழ்நாளெல்லாம் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான். மரணத்திற்கு எதிராகப் போராடுகிறான். அதுதான் நமது ஆன்மிக பிரச்னை; தத்துவார்த்த பிரச்னை; வாழ்வின் கவித்துவமான பிரச்னையும்கூட! தன்னை அழிப்பது என்பது எவ்வளவு உறுதியான முடிவு... எவ்வளவு தீர்க்கமான திட்டம்... இந்த மனவலிமையில் பாதி இருந்தால்கூட 100 வருஷம்

எல்லாவற்றையும் தாங்கி வாழலாம்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற மருத்துவ இதழான ‘லான்செட்’ அண்மையில் இந்தியர்களின் தற்கொலை தொடர்பாக வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம், முதுகுத்தண்டை சில்லிட வைக்கிறது. 2010ல் மட்டும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் இந்தியர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 80 ஆயிரத்து 100 பேர் தென்னிந்தியர்கள். தென்னிந்தியாவில் தமிழகம் தற்கொலையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தற்கொலை செய்துகொள்பவர்களில் 40 சதவீதம் பேர் 15 வயதிலிருந்து 29 வயதிற்கு உட்பட்டவர்கள். நகரங்களைவிட கிராமங்களிலேயே தற்கொலை விகிதம் அதிகமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான உண்மையை அந்த ஆய்வு சொல்கிறது... படிக்காதவர்களைவிட படித்தவர்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள்!

பதிவுசெய்யப்பட்ட தற்கொலைகளைப் பற்றித்தான் இந்தப் புள்ளிவிவரம் பேசுகிறது. மறைக்கப்படும் தற்கொலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிவிடும். இது ஏதோ ஒரு மிகப்பெரிய படுகொலைக்களம் போல இருக்கிறது. ஒரு பெரிய யுத்தத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட உண்மையில் இது அதிகம். இது யாருக்கு எதிராக யார் நடத்துகிற யுத்தம்? சமூகம் தனி மனிதனுக்கு எதிராக நடத்தும் யுத்தமா... அல்லது



மனிதன் தனக்கு எதிராக தானே நடத்தும் யுத்தமா?
தற்கொலை என்பது ஒரு வசீகரமான அழைப்பு. அந்தக் குரலை வாழ்வின் எந்த கணத்தில் நீங்கள் கேட்கத் தொடங்குவீர்கள் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. சில சமயம் அது தொலைவில் எங்கோ மங்கலாகக் கேட்கிறது. திடீரென ஒருநாள் நம் காதோடு காதாக அந்தரங்கமாக பேசத் தொடங்கிவிடுகிறது. அது முதலில் சின்ன குழப்பமாகத் தொடங்குகிறது. பிறகு தன்னை திட்டவட்டமாக அறிவித்துக் கொள்கிறது. அது உங்களுக்கு விடுதலையைக் கொண்டுவருவதாக உங்களை நம்ப வைக்கிறது. உங்களின் எல்லாக் காயங்களுக்கும் மருந்தையும், எல்லாக் கண்ணீருக்கும் ஆறுதலையும் கொண்டுவருவதாகச் சொல்லி உங்களை வற்புறுத்துகிறது.

ஒரு பலவீனமான தருணத்தில் நீங்கள் அதற்கு இணங்கத் தொடங்குகிறீர்கள். உங்கள் வாழ்க்கையிலிருந்து எல்லாக் குரல்களும் விலகிப் போய்விட, அந்தக் குரலை மட்டுமே திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள். அது உங்களை புன்னகையுடன் வழிநடத்தத் தொடங்குகிறது. ஒரு சிறிய காயத்திற்காக துடித்துப்போகும் இயல்புள்ள நீங்கள், எந்தக் குழப்பமும் இல்லாமல் உங்கள் மணிக்கட்டின் நரம்பை துண்டித்துக் கொள்ள ஆயத்தமாகிறீர்கள். கரப்பான் பூச்சியைக் கண்டு மிரளும் ஒரு சிறுபெண், மின்விசிறியில் தன் துப்பட்டாவில் இறுதி முடிச்சை எந்த சஞ்சலமும் இல்லாமல் உறுதியாகப் போடுகிறாள். இதுதான் அந்த மாயக் குரலின் விசித்திரம். அது உங்களை அடிமைப்படுத்துகிறது. அந்தக் குரலை நீங்கள் வெல்லவேண்டும் என்றால், அசுரபலத்துடன் மேலே வரவேண்டும். மூழ்கிக்கொண்டிருக்கும் நீரின் ஆழத்திலிருந்து மேலே வருவதுபோல!

தற்கொலைக்கான காரணங்கள் முக்கியமல்ல. அதே காரணங்களுடன் ஏராளமான மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மனிதனிடம் தாங்கும் சக்திக்கான ஒரு ரகசிய அச்சு இருக்கிறது. ஏதோ ஒரு தருணத்தில் அந்த அச்சு முறிந்து விழுகிறது. ஒரு மனிதன் பிரச்னைகளால் இறப்பதில்லை; அந்த பிரச்னைகளை சந்திக்கும் அவனது தர்க்கத்தின் பலமும் ஆன்மிக பலமும் பலவீனமடையும் தருணத்தில்தான் அவன் அந்த முடிவை நோக்கிச் செல்கிறான். அப்போது எல்லாமே முடிவற்றதாகத் தோன்றுகிறது. முடிவற்ற ஒன்றின்மீது எழுதும் ஒரு முடிவாக அது மாறுகிறது.

இந்த உலகத்தை பழிவாங்குவதற்காக தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டவர்கள், இந்த உலகத்தின் குற்ற உணர்வு ஏதுமற்ற மறதியை அறிவதில்லை. வாழ்வில் நெருக்கடிகள் எவ்வாறு தானாகக் கடந்து போய்விடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளும்போது, அவர்கள் திரும்ப வரமுடியாத ஒரு இடத்திற்குச் சென்றுவிடுகிறார்கள்.

ஏன் படித்தவர்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதற்கு தெளிவான சமூக காரணங்கள் இருக்கின்றன. நமது கல்வியும் நவீன வாழ்க்கை முறையும் நம்மை சமூகத்தோடு தொடர்பற்ற உதிரிகளாக மாற்றிவிட்டன. செவிசாய்க்க யாருமற்ற தனியறைகளில் நாம் பூட்டப்பட்டுவிட்டோம். அதிகம் படித்தவர்கள் உள்ள கேரளாவில் அதிக அளவில் தற்கொலைகள் நடக்கின்றன. நமது கிராமங்களில் மரபான பிடிமானங்கள் சிதைகின்றன. வறுமையும் பண்பாட்டு ஒடுக்குமுறையும் மனிதர்களை சுய அழிவை நோக்கித் துரத்துகிறது. நகரங்களைவிட கிராமங்களில் தற்கொலை செய்துகொள்வது சுலபமாக இருக்கிறது.

தற்கொலை செய்துகொள்ள விரும்பும் ஒவ்வொரு மனிதனிடமும் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது... அவன் இறந்துபோனதற்கு அடுத்த நாள் வரும் சூரியோதயம் பற்றியது அது.
எவவளவு கஷ்டம்

தெரியுமா?
எனக்கு ஒரு அத்தை இருந்தாள். சரியான சினிமாப் பைத்தியம். அவளிடம் ஒரு நல்ல குணம் உண்டு. பாரபட்சம் இல்லாமல் தியேட்டருக்கு வரும் எல்லாப் படத்தையும் பார்ப்பாள். அவளுக்கு எல்லாப் படமுமே பிடிக்கும். அதற்கு அவள் சொல்லும் ஒரு காரணம் மிகவும் முக்கியமானது. ‘‘எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு படத்தை எடுக்கிறான்... அதைக் குறை சொல்லலாமா?’’

சமீபத்தில் ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது, என் அத்தையின் மறுபிறப்பை கவிஞர் அறிவுமதி வடிவத்தில் பார்த்தேன். ‘வழக்கு எண் 18/9’ படத்தை நான் ‘குங்குமம்’ இதழில் லேசாக கிண்டல் செய்து எழுதியதற்காக என்னைக் கடுமையாகத் தாக்கினார். ‘‘எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மாதிரி சினிமா எடுக்கிறோம் தெரியுமா... இப்படி எழுதினால் எப்படி நல்ல சினிமா எடுக்க முடியும்?’’ என்று கொதித்தார். ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன் வந்து, ‘‘உங்க மாதிரி ஆளுங்களால எங்க வசூல் பாதிக்கப்படுது’’ என்றார். ‘‘தமிழ் சினிமா குப்பைக் கூளங்களின் களமாக இருக்கிறது. இங்கு நல்ல படம் எடுப்பவருடன்தான் ஒரு எழுத்தாளன் விவாதிக்க முடியும். கமல்ஹாசனுடனும் மணிரத்னத்துடனும் பாலாவுடனும் வசந்தபாலனுடனும் பாலாஜி சக்திவேலுடனும்தான் நான் சண்டை போட முடியும். முட்டாள்களுடன் அல்ல’’ என்றேன் நான். அவர்கள் அன்று கொதித்ததைப் பார்த்தால், ஏதோ கார்கில் யுத்தத்தில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தாரை நான் அவமதித்தால் எப்படி கொதிப்பார்களோ, அப்படியிருந்தது.

அசோகமித்திரன் என்ற தமிழ் எழுத்தாளர், சர்வதேசத் தரத்தில் 50 வருடங்களாக எழுதி வருகிறார். 80 வயதில் ஒரு மஞ்சள் பையைக் கையில் பிடித்துக்கொண்டு தட்டுத் தடுமாறி இன்றும் டவுன் பஸ்ஸில்தான் இலக்கியக் கூட்டங்களுக்கு வருகிறார். ஆனால் அசோகமித்திரன் ஒருநாளும் தன்னை தியாகி என்று அழைத்துக்கொள்வதில்லை.

ஒரு எழுத்தாளன் தன் முழு வாழ்க்கையையும் எந்தப் பிரதி பலனும் இல்லாமல் இந்த சமூகத்திற்கு ஒப்புக்கொடுத்ததைப் பற்றி நமக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால் ஒரு சினிமா எடுப்பவர், ‘ஒரு படத்தின் மூலம் தான் ஒரு சமூகப்போராளியாக வேண்டும்’ என்று கனவு காண்கிறார். அவரது தியாகத்தை இந்த சமூகம் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறார்.
பல சமயங்களில் படம் எடுப்பவர்களின் தியாகத்தைவிட படம் பார்ப்பவர்களின் தியாகம் அளப்பரியதாக இருக்கிறது.

கருணையே உன் விலை என்ன?
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தான் பதவியை விட்டுப்
போகும்முன் 35 பேரின் மரண
தண்டனையை ரத்து செய்திருக்கிறார். மரண தண்டணைக்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்திருப்பவன் என்ற முறையில் இந்த முடிவு மகிழ்ச்சி தந்தது. மரண தண்டனை என்பது குற்றத்தின் அளவோடு சம்பந்தப்பட்டதல்ல, மாறாக சட்டபூர்வமாக ஒருவரைக் கொலை செய்வதன் தார்மீக நெறிகள் பற்றியது அது.

ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கருணைக்காகக் காத்திருக்கும் மூவரின் கோரிக்கைகள் குடியரசுத் தலைவரால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மூவரும் நேரடியாக குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல. குற்றத்திற்கு உதவியவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள். அதற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் சிறைவாசத்தை அனுபவித்து விட்டார்கள். குழந்தைகளைக் கற்பழித்து கொலை செய்தவர்களையெல்லாம் மன்னிக்க முடிந்தவர்களால், குற்றத்தோடு நேரடி சம்பந்தமில்லாத இவர்களை ஏன் மன்னிக்க முடியவில்லை? நீதி என்பது வேறு; ராஜ நீதி என்பது வேறு.
(இன்னும் நடக்கலாம்...)