நயம்பட பேசு





மதிப்பிற்குரிய மத்திய சர்க்கார், ரூபாய் நோட்டுகளில் காந்தி தாத்தா படத்தோட வேறு சில தலைவர்கள் படத்தையும் அச்சடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். பாவம், அவரும் எத்தனை நாள்தான் நம்ம கையில கசங்கி சாவாரு? அட்லீஸ்ட் பாக்கெட்டுக்குள்ள பேச்சுத் துணைக்காவது அவருக்கு ஆள் வேணாமா? ‘ஆயிரம், ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை பார்த்தே பல மாசமாயிடுச்சு, இதுல யாரு படம் அச்சடிச்சு இருந்தா என்ன?’ங்கிற உங்க ஆதங்கம் புரியுது. அதுக்காக மத்திய சர்க்காருக்கு ஐடியா சொல்ற வேலைய நாம நிறுத்தலாமா?
அம்மா படத்த போடலாம்தான்; ஆனா கூடவே சின்னம்மா போட்டோவையும் போடணும். அது சரி வராது... ஒரு ஆள்தான் அலவுடாம்! இந்த அமைச்சர்கள் போட்டோவ போடலாம்னு பார்த்தா எல்லாம் குனிஞ்ச போட்டோவா, இல்லாட்டி கை கட்டி வாய் பொத்தின போட்டோவாத்தான் இருக்கு.

அனுஷ்கா போட்டோவ சிபாரிசு பண்ணலாம்னு பார்த்தா, அப்புறம் ஒரு பய பணத்த பர்ஸ விட்டு வெளியே எடுக்க மாட்டான். கேப்டன் போட்டோவ போடலாம், ஆனா எல்லாமே போலீஸ் யூனிபார்ம் மேல முட்டி வரை ரெயின் கோட் போட்ட படமாத்தான் இருக்கு. த்ரிஷா, தமன்னா போட்டோ போட்டா கவர்ச்சியா இருக்கும்... ஆனா எல்லாமே அவங்க பெட்டிகோட் போட்ட காஸ்ட்யூமாதான் இருக்கு. மக்களுக்கு புரட்சி சித்தாந்தம் சொல்ற பிரபு சார் போட்டோ போட இடம் பத்தாது. கமல் சார் படத்த போடலாம்; ஆனா பொண்ணுங்க கிஸ் பண்ணியே நோட்ட ஈரம் பண்ணிடுவாங்க. ரஜினி சார் போட்டோ கிட்டத்தட்ட காந்தி தாத்தா மாதிரிதான்; பெரிய வித்தியாசம் இல்லை. ராமதாஸ் அண்ணன் போட்டோவ போட்டா, ஒயின் ஷாப்ல செல்லாது.

பேசாம, எவன் கைக்கு பணம் போகுதோ அவனோட பொண்டாட்டி போட்டோ தெரியுற மாதிரி ஒரு டெக்னாலஜி கண்டுபிடிச்சுட்டா போதும்... ஒருத்தனுக்கும் பணம் சேர்க்கணும்ங்கற ஆசையே வராது. நாட்டுல பணப்புழக்கமும் குறையாது. அட போங்கப்பா, கள்ளுண்ணாமை போதித்த காந்தி படம் போட்ட நோட்டுகள் அதிகமாய் புழங்குவதே டாஸ்மாக் கல்லாவில்தான். இதுல யாரு படத்த போட்டா என்ன?

நேற்று என் மொபைலில் ஒரு குறுந்தகவல் கூவியது. மாநகரங்களில் வாழும் 73.70 சதவீத இந்தியர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்களாம். அதுபோன்றவர்களை குளுகுளுவிக்க கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் எங்கள் ரிசார்ட்டுகள் இருக்கின்றன என்று புள்ளிவிவர பயமுறுத்தலோடு அழைக்கும் விளம்பரம் அது. அந்த ரிசார்ட்டுகளில் என்ன செய்றாங்கன்னு மூக்க நுழைக்காம, இவங்க எப்படி இந்த புள்ளிவிவரங்களை அள்ளி விடுறாங்கன்னு மண்டைய மட்டும் குழப்பி, சினிமாவுல புள்ளிவிவரங்கள சொல்லிச் சொல்லி அடிக்குற கேப்டன் ரசிகனான என் நண்பன கேட்டேன். அப்போ பல அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் கிடைச்சுது... அப்படியே ஷாக் ஆயிட்டேன்!

*  நாட்டுல 89.56% கணவர்கள் மனைவிகளோடதான் வாழுறாங்களாம் (யாரோட மனைவின்னு நான் கேட்கல!)
*  84.36% நாய்களும் 78.44% இந்தியர்களும் கரன்ட் கம்பம், டிரான்ஸ்பார்மர் அருகேதான் சிறுநீர் கழிக்கிறாங்களாம்.
*  93.27% பானி / பேல் பூரிக்கடைகள் சாக்கடை ஓரமாத்தான் இருக்காம்.
*  98.30% பெண்களின் மொபைல்களில் மிஸ்டு கால் போகும் வசதி மட்டும்தான் இருக்காம்.
*  நாட்டுல 86.66% பேர் டீயோ, காபியோ... டம்ளரில்தான் குடிக்கிறாங்களாம்.
*  பொம்பள புள்ள பேருல ‘சேட்’ பண்ற 65.21% பேரு பொம்பளையே இல்லையாம்.
*  ‘வந்துட்டேன் மச்சான், ஆன் தி வே’ன்னு சொல்ற 94.36% பேரு பாத்ரூம விட்டே வெளியே வராதவங்களாம்.
*  உயிர் வாழ்பவர்களில் 98.25% பேர் மூச்சு விடுறாங்களாம், மீதிப் பேரு கட்டணக் கழிப்பிடத்தில் மூச்சை தம் பிடித்து அடக்கி இருக்காங்களாம்.
*  45.65% அரசாங்க ஊழியர்கள் லேட்டாதான் ஆபீஸ் போறாங்களாம். ஏன்னா, மேலதிகாரியே அப்புறம்தான் வர்றாராம்.
இப்படி நிறைய இருக்காம், ஆனா அவன் கடைசியா சொன்னதுதான் வெரி நைஸ்... இப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள் 78.92% சதவீதம் தவறாம்!

உலகின் இரண்டாவது பெரிய சினிமா துறையான இந்திய சினிமா, தனது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்த அருமையான தருணத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கனவுத் தொழிற்சாலையான கோடம்பாக்கத்து கோலிவுட்டில் நெஞ்சில் நங்கூரம் போட்டு நிலைத்துத் தங்கிய பல நடிப்புத் தூண்களை நன்றியுடன் நினைத்து விருதுகள் கொடுத்து கௌரவிப்போம்.