கணக்கு





மணமான ஒரு மாதத்திலேயே பெற்றோரின் சம்மதத்துடன் தனி வீட்டில் செட்டிலானான் முகுந்தன். புதிதாய் அவனுக்கென ஒரு பலசரக்குக் கடையை அப்பா ஆரம்பித்துக் கொடுத்திருந்தார்.

அன்று காலை கடைக்குக் கிளம்பியவனிடம், வீட்டுக்குத் தேவையான மளிகை லிஸ்ட்டை நீட்டினாள் மனைவி சரளா. மதியமே அவற்றையெல்லாம் கடைப் பையன் மூலம் கொடுத்தனுப்பினான் முகுந்தன். கூடவே, ‘‘பணம் தர்றீங்களாம்மா...’’ என்று பில்லையும் நீட்டினான் பையன்.

சரளா திடுக்கிட்டாள். ‘வீட்டுக்குத் தரும் பொருட்களுக்குக் கூட பணமா?’ என்று குழம்பினாலும், கடைப் பையனிடம் இந்தக் கதை எதற்கு என நினைத்து பணத்தைக் கொடுத்தனுப்பினாள்.
இரவு வீடு திரும்பிய கணவனிடம் கோபமாகவே கேட்டாள்.

‘‘சரளா, ஒனக்கு இந்த மாச ஆரம்பத்துல பத்தாயிரம் ரூபா குடுத்துருக்கேன். என் மாச சம்பளமே அதான்னு நெனைச்சுக்கோ. கண்டபடி கடையில இருந்து எடுத்தா தொழில் என்னாகறது?’’ என்றான் முகுந்தன்.

‘‘இருந்தாலும்...’’ என்று இழுத்தாள் சரளா.
‘‘இதோ பாரு சரளா! இந்தக் கடைக்கு நான் மட்டுமில்ல... தெருமுனை பிள்ளையாரும் ஒரு பார்ட்னர். கடை ஆரம்பிச்சப்பவே, லாபத்துல ரெண்டு சதவீதம் தர்றேன்னு வேண்டியிருக்கேன். வருஷக் கடைசியில பங்கு பிரிக்க நான் கணக்கை சரியா வச்சுக்கணுமில்ல’’ என்று காரணத்தை மாற்றிச் சொன்னான் முகுந்தன்.
‘‘ஓ... அப்ப சரி’’ என்று திருப்தியாய் தலையாட்டினாள் சரளா!