சிம்பு - தனுஷ் கொலவெறி ஃபிரண்ட்ஷிப்!





தென்னிந்திய திரையுலகை சர்வதேச மேடைக்கு எடுத்துச் சென்ற விழா... தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவான 'சிமா அவார்ட்ஸ் விழா’ துபாயில் அமர்க்களமாக நடந்து முடிந்திருக்கிறது. இப்படி ஒரு விழா நடப்பது முதல் முறை என்பதால் தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் அனைவரும் ஆஜர். விழாவின் சில ஹைலைட்ஸ்...


*  சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘ஆடுகளம்’ படத்துக்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதியிடம் விருதைப் பெற்ற தனுஷ், ‘‘எனக்கு வெளிநாட்டில் கிடைக்கும் முதல் விருது இதுதான்’’ என்றார் பூரிப்பாக. ‘‘என் இரண்டாவது மகன் லிங்காவின் பிறந்த நாள் இன்று! இதேநாளில் எனக்கும் விருது கிடைத்துள்ளது. என்னோடு என் மகனையும் சேர்த்து வாழ்த்துங்கள்’’ என்று ரசிகர்களிடம் நெகிழ்ச்சியாகக் கேட்டார்.

*  ‘கொலவெறி’ பாடலை தனுஷ் பாடாத மேடை இல்லை. இங்கும் பாடச் சொன்னார்கள். ‘‘திருப்பித் திருப்பிப் பாடி எனக்கு போரடித்து விட்டது. புதுசாக ஏதாவது செய்யலாம்’’ என்று சொன்ன தனுஷ், தனது விருதை கீழே வைத்து விட்டு, மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்று சிம்புவை மேடைக்கு அழைத்து வந்தார். அப்போதிருந்து அதிர ஆரம்பித்தது அரங்கம்.

*  இருவரும் சேர்ந்து ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடினர். ‘‘டான்ஸ் இல்லாமல் சிம்புவா?’’ என்று தனுஷ் கேட்க, இருவரும் சேர்ந்து நடனமாடினர். ‘‘வெளியிலதான் எங்களை எதிரிகள்னு சொல்றாங்க. நிஜத்துல நாங்க குளோஸ் ஃபிரண்ட்ஸ்’’ என்றார் தனுஷ்.

*  சூப்பர்ஸ்டாரின் மருமகனும் லிட்டில் சூப்பர்ஸ்டாரும் திடீரென இப்படி ஃபிரண்ட்ஸ் ஆனதில் பலருக்கு ஆச்சரியம். விழாவுக்கு சென்னையிலிருந்து கிளம்பும்போது விமானத்தில் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு வந்தவர்கள், விழா அரங்கிலும் அப்படித்தான் பின்னிப் பிணைந்திருந்தார்கள். தனுஷின் இன்னொரு பக்கத்தில் மனைவி ஐஸ்வர்யா இருந்தார். 

*  விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர்கள் நடிகர் மாதவன், நடிகைகள் பார்வதி ஓமனக்குட்டன் மற்றும் லக்ஷ்மி மஞ்சு.

*  தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று 4 மொழிகளில் 13 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுக்கு நாமினேட் ஆகி யிருந்த அனைத்து நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களையும் அழைத்திருந்தார்கள்.


*  இரவு ஒன்பதரைக்கு ஆரம்பித்த விருது விழா அதிகாலை 3 மணி வரை தொடர்ந்தது. நேரத்தைக் குறைக்க, ‘‘பரிசு பெறுபவர்கள் 30 வினாடிகள் மட்டுமே பேச வேண்டும்’’ என்று மாதவன் வேண்டுகோள் விடுத்தார். சிலர் கச்சிதமாகப் பேசி முடித்தனர். ‘‘எனக்கு கூடுதல் நேரம் வேண்டும்’’ என்று கேட்டு வாங்கிய தனுஷ், 3 நிமிடங்கள் பேசினார்..

*  ‘ஆடுகளம்’ படத்துக்கு சிறந்த இயக்குநர் விருது பெற்ற வெற்றிமாறன், மேடையில் பேசாமல் நகர்ந்தார். விருது வழங்கிய ஸ்ரேயா, அவரை இழுத்து நிறுத்தி பேசச் சொன்னார். சிரித்தபடி ‘சாரி’ சொல்லி, இறங்கிப் போனார் வெற்றி மாறன்.

*  ‘கொலவெறி’ பாடலுக்காக சிறந்த பாடகர் விருதும் வாங்கினார் தனுஷ். ‘‘பாடகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்’’ என்றவர், ‘‘இந்த விருது பாத்ரூம் சிங்கர்களுக்கு அர்ப்பணம்’’ என்றார்.


*  நடிகர், நடிகைகளுக்குப் போட்டியாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பாட்டு, டான்ஸ் என்று அரங்கத்தையே அதகளப்படுத்தினார்.


*  ஹன்சிகா மோத்வானிக்கும் இரண்டு விருதுகள். தமிழில் ‘சிறந்த அறிமுக நடிகை’ விருது; தெலுங்கில் சிறந்த நடிகை விருது. குழந்தை போல துள்ளிக் குதித்து உணர்ச்சி வசப்பட்டார் அவர்.

*  கன்னட நடிகர் அம்பரீஷ் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றார்.

*  ‘ஏழாம் அறிவு’ படத்தின் ‘ஏலேலம்மா...’ பாட்டுக்கு ஸ்ருதி ஹாசன் அமர்க்கள டான்ஸ் போட்டார். விழாவின் ஹைலைட்டாக இருந்தது அந்த டான்ஸ்.

*  ப்ரியாமணி, சார்மி, ஹன்சிகா, பார்வதி ஓமனக்குட்டன், சமீரா ரெட்டி, தீக்ஷா சேத் என முன்னணி நடிகைகள் பட்டாளமே டான்ஸ் ஆடியது.

*  அமலா பால் முதல்முறையாக இங்குதான் மேடையில் நடனமாடி னார். ஓகே என்கிற அளவுக்கு இருந்தது டான்ஸ்! அசின் விருது வாங்க மட்டும் மேடைக்கு வந்தார்.

*  நடிகர் மோகன்லாலுக்கு மலையாளத்துக்கான சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அவர் வராததால், மலையாளத் திரையுலகிலிருந்து யாரையாவது வாங்கிக் கொள்ளுமாறு அறிவித்தனர். ஆனால் சரத்குமார் அதை வாங்கினார். ‘‘மோகன்லால் என் நெருங்கிய நண்பர். நான் மலையாளத்திலிருந்து வரவில்லை. நாம் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன் வந்திருக்கிறேன்’’ என்றார் சரத்.

*  விழாவுக்கு முதல்நாள் ஃபேஷன் ஷோ நடந்தது. ஸ்ரேயா, ரிச்சா, அமலா பால், லக்ஷ்மி ராய் என பலரும் கேட்வாக் செய்தனர். இங்கும் விருதுகள் தந்தார்கள்.


*  விழாவுக்கு வந்திருந்த நட்சத்திரங்கள் ஒரே குரலில் கேட்ட விஷயம்... ‘‘ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற விருது விழாவை சிமா நடத்த வேண்டும்’’ என்பதுதான்!

- துபாயிலிருந்து
சுரேஷ் வேதநாயகம்
படங்கள்: சிவா, பரணி