முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலையென நிலங்களை வகைபிரித்துப் பாடி மகிழ்கின்றன நம் இலக்கியங்கள். இந்த அடையாளங்கள் பழங்கதை ஆகிவிடலாம் போலிருக்கிறது. தமிழகத்து நிலங்கள் வெறும் பாலையாக மாறிக்கொண்டிருக்கின்றன. மண் போட்டால் பொன் விளையும் பூமி வறண்டு தாகத்தில் தவிக்கிறது. ஒப்பந்தங்கள், நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதிக்காமல் தமிழகத்துக்கு நீர்வேலி போடும் கேரள, ஆந்திர, கர்நாடக அரசுகளின் அடாவடித்தனங்களால், ஜீவநதிகளாக அறியப்பட்ட பல நதிகள் காய்ந்து கருகிக் கிடக்கின்றன.
காவிரி1901ம் ஆண்டு நிலவரப்படி காவிரி நீரால் தமிழகத்தில் 13.45 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடந்தது. அப்போது கர்நாடகத்தின் விவசாயப்பரப்பு வெறும் 1.11 லட்சம். 1892ல் பிரிட்டிஷ் அதிகாரி ஷாங்கே முன்னிலையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, காவிரி உள்பட இரு மாநிலத் தொடர்புள்ள நதிகளில் எந்தப்பணி மேற்கொண்டாலும் இரு மாநிலங்களும் கலந்து பேசியே செய்ய வேண்டும். ஆனால் மதிக்காமல் புதிய அணைகளைக் கட்டும் முயற்சியில் இறங்கியது கர்நாடகா. தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, தமிழகத்துக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை வழங்கவேண்டும் என்று பிரிட்டிஷ் கவுன்சில் முன்னிலையில் 1924ம் ஆண்டு மீண்டும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தங்கள் ஒருபுறம் இருக்க... கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, யாகாச்சி, ஹாரங்கி, லட்சுமண தீர்த்தா, கபினி போன்ற அணைகளை கட்டித் தள்ளியது கர்நாடகம். தமிழகத்துக்கு ஒப்பந்தப்படி தண்ணீர் தராமல், நீதிமன்றத் தீர்ப்புகளையும் அவமதித்து, இன்றுவரை உச்ச நீதிமன்றத்தில் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது கர்நாடகா.
‘‘கோடைக் காலத்தில் கர்நாடகம் விவசாயப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது. ஆனால் விஸ்வேஸ்வரய்யா கால்வாய் மூலம் நெடுந்தொலைவுக்கு காவிரி நீரை எடுத்துச் சென்று விவசாயம் செய்கிறார்கள். போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணையைத் திறக்க முடியவில்லை. அதனால் 4 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. காவிரி டெல்டாவில் குடிநீர் பிரச்னையும் தலைதூக்கி வருகிறது’’ என்கிறார் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன்.
முல்லைப் பெரியாறுதென்மாவட்டங்களில் நிலவிய பஞ்சத்தைப் போக்க விவசாயமே வழியென உணர்ந்த ஆங்கிலேயர்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கேரளாவில் வீணாகக் கடலில் கலந்த பெரியாற்று நீரை தமிழகத்துக்கு திருப்பும் நோக்கில் கட்டியதே பெரியாறு அணை. 1895ல் ஜான் பென்னிகுக் என்ற ஆங்கிலேய அதிகாரியின் உழைப்பில் விளைந்தது. உறுதியான இந்த அணையில் 155 அடி வரை தண்ணீர் தேக்க முடியும். இதற்காக 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமே போடப்பட்டது. ஆனால் ‘ஆங்கிலேயர் கால ஒப்பந்தம் இப்போது உதவாது’ என்று அடாவடி செய்யும் கேரளம், அணை பலவீனம் அடைந்து விட்டதாகக் கூறி நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்து விட்டது. அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்டவும் முயற்சிக்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு ‘அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம்’ என்று உத்தரவிட்ட பிறகும் கேரளா இறங்க மறுக்கிறது.

‘‘ அணையின் நீர்மட்டத்தைக் குறைத்ததால் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் வறண்டு விட்டது. இனி மதுரை, உசிலம்பட்டி, தேனி, கம்பம் உள்ளிட்ட பல நகரங்களில் குடிநீர் பிரச்னையும் ஏற்படும். கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் 1200 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதை சேமிக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள்’’ என்று கொதிக்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சின்னசாமி.
பாலாறுகர்நாடகாவில் கிளம்பி, ஆந்திரா வழியாக தமிழகம் வரும் இந்த நதியிலும் ஒப்பந்தத்தை மீறி கர்நாடகா அணைகளைக் கட்டியுள்ளது. பேதமங்கலம் அணை, ராமசாகர் அணை என இந்த அணைகள் நிரம்பி வழிந்து வரும் கொஞ்ச நீரையும் ஆந்திரா பங்கு போட்டுக் கொள்கிறது. தற்போது சிவராமபுரம் வனப்பகுதியில் ரூ.205 கோடி செலவில் ஒரு பிரமாண்டமான அணையைக் கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது ஆந்திரா.
‘‘வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்ல கிணற்று நீர் பாசனம் மூலம்தான் விவசாயம் நடக்குது. பாலாறுல தண்ணீர் வந்தாதான் கிணத்துல தண்ணி ஊறும். 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலாறு பாசனத்தை நம்பியிருக்கு. தண்ணி வராததால மணல் அள்ளியும், தோல் கழிவுகளைக் கொட்டியும் பாலாறை சாகடிச்சுட்டாங்க...’’ என்று வருந்துகிறார் பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன்.
நெய்யாறு 
திருவனந்தபுரத்தை ஒட்டியுள்ள கள்ளிக்காடு என்ற இடத்தில் உருவாகும் நெய்யாறு நதி மீது கட்டப்பட்டதே நெய்யாறு அணை. தமிழகத்தின் எல்லைப் பகுதிகளே இந்த அணையின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதி. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த அணையைச் சுற்றி ஏகப்பட்ட கிளை வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்று, தமிழகத்து இடதுகரைக் கால்வாய். 2004க்குப் பிறகு இந்தக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவே இல்லை. தமிழக அதிகாரிகளும் மெத்தனமாக இருக்கிறார்கள். நெய்யாறு அணையிலிருந்து ஏராளமான உபரிநீர் கடலில் கலக்கிறது. ஆனால் குமரிக்கு தண்ணீர் தர கேரளத்துக்கு மனதில்லை.
‘‘இந்தக் கால்வாய் தண்ணீரை வைத்து வாழை, தென்னை, ரப்பர், காய்கறிகள் பயிரிடப்பட்டு வந்தன. தண்ணீர் வராததால் 8 ஆண்டுகளாக விவசாயம் சுருங்கிவிட்டது. 20 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருகிக் கிடக்கிறது’’ என்று குமுறுகிறார் கோதையாறு பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்டோ.
தென்பெண்ணைகிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 80 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை செழிக்க வைக்கும் இந்நதியை இடைமறித்து கோலார் தங்க வயலுக்கும், மாலூர் வட்டாரத்துக்கும் திருப்புகிறது
கர்நாடகா. ‘‘தென்பெண்ணையின் முக்கிய ஆதாரமான மார்க்கண்டேய நதியை மறித்து எர்க்கோல் என்ற இடத்தில் பெரும் அணை கட்டுவதற்காக ரூ.400 கோடியில் ஒரு திட்டத்தை வகுத்திருக்கிறது கர்நாடக அரசு. இதுதவிர ஆங்காங்கே ராட்சத கிணறுகளையும் தோண்டி வருகிறார்கள். இந்த பணிகள் நிறைவுற்றால் 5 மாவட்டங்கள் வறண்டுவிடும்’’ என்கிறார் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. செங்குட்டுவன்.
அமராவதிஇந்நதியை நம்பி திருப்பூர், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடக்கிறது. இப்போது இதற்கும் தடைபோடுகிறது கேரளா.
‘‘அமராவதி அணைக்கு வருடத்துக்கு 12 டிஎம்சி தண்ணீர் வரும். இதை தடுத்து மின்திட்டங்களுக்குத் திருப்பிவிட முயற்சிக்கிறது கேரளா. இடுக்கி பேக்கேஜ் என்ற பெயரில் புதிய அணைகளைக் கட்டும் திட்டத்தை தொடங்கியுள்ளார்கள்’’ என்கிறார் கரும்பு பயிரிடுவோர் சங்கத் தலைவர் வேலுச்சாமி. இந்நதியும் காவிரி விசாரணை வளையத்துக்குள் இருக்கிறது.
பவானிஇந்நதியின் குறுக்கே கேரள வனப்பகுதியில் உள்ளது சிறுவாணி அணை. இங்குள்ள அகழி சித்தூர் என்ற இடத்தில், 4300 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.500 கோடி செலவில் புதிய அணை கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது கேரளா.
‘‘1976ம் ஆண்டிலிருந்தே சிறுவாணியில் அணைகட்டுவதற்கு முயற்சித்து வருகிறது கேரளா. மத்திய அரசு அனுமதி வழங்காத நிலையில் முறைகேடாக பணிகளைத் தொடங்கியுள்ளார்கள். அந்த அணை கட்டப்பட்டால் ஈரோடு, கோவை மாவட்டத்தில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மேலும், குடிநீர் ஆதாரமான பில்லூர் அணையும் வறண்டுவிடும்’’ என்கிறார் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன். ஈழத்தில் முள்வேலி... தமிழகத்தில் நீர்வேலி... இதுதானா தமிழினத்தில் தலையெழுத்து?
- வெ.நீலகண்டன்