தனி சுகம்





‘‘அத்தே... உங்க மண்டையிலே மூளை இருக்கா; இல்ல, களிமண் இருக்கா? ஒரு தடவை சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்களா?’’ ‘‘நான் என்னம்மா பண்ணட்டும்? நீ சொன்ன மாதிரிதான் பக்குவமா சாம்பார் வச்சேன். இந்த உப்புல எனக்கு அளவு தெரியல. இப்படி உறைப்பு அதிகமாகும்னு நான் என்னத்தக் கண்டேன். அடுத்த தடவை ஒழுங்கா வைக்கிறேன்மா!’’

‘‘சரி... சரி... போய்த் தொலைங்க அத்தே... கிணத்தடியிலே அழுக்குத் துணிகளை போட்டிருக்கேன். கரன்ட் இல்லை. அதனால கையால சோப்பு போட்டு துவச்சுப் போடுங்க! துவைச்சு முடிச்சுட்டு சீக்கிரமா ரேஷன் கடைக்குப் போய் சர்க்கரை வாங்கிட்டு வரணும். மறந்துட்டு முழிக்காதீங்க!’’
‘‘சரிம்மா... இதோ போறேன்!’’ என்றபடி பூரணியம்மாள் கிணத்தடிக்குச் சென்றாள்.

அப்போது சுமதியின் கணவன் தினேஷ் வந்தான்.
‘‘என்ன சுமதி, அவங்களை இப்படி விரட்டு விரட்டுன்னு விரட்டுறியே... கொஞ்சம் சாந்தமா பேசக் கூடாதா?’’
‘‘சாந்தமா பேசணுமா? அதுக்குத்தானே வேலைக்காரியா இருந்தாலும் அவங்களை அத்தை... அத்தை...ன்னு வாய் நிறையக் கூப்பிடுறேன்... அது பத்தாதா? இருந்தாலும் வேலைக்காரியை அத்தைன்னு சொல்லி, இப்படி விரட்டி வேலை வாங்குறதுல ஒரு தனி சுகம்தாங்க!’’ - பூரிப்புடன் சொன்னாள் சுமதி.