கெட்டுப்போன மட்டனில் பிரியாணி!





சாலையோரக் கடைகளில் மூக்குமுட்ட பிரியாணியும், மட்டன் ஃபிரையும் சாப்பிடுபவரா நீங்கள்..? நாக்கை சப்புக்கொட்டி நீங்கள் சாப்பிட்டது ரயில் சரக்கு இறைச்சியாக இருக்கலாம். அதென்ன ரயில் சரக்கு? ராஜஸ்தான், ஆந்திர மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் கொண்டு வரப்படும் இறைச்சிக்குப் பெயர்தான் ‘ரயில் சரக்கு’. கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்டு இறந்துபோன கால்நடைகளின் கெட்டுப்போன இறைச்சி தினமும் டன்கணக்கில் ரயில்களில் சென்னைக்கு வருவதாகச் சொல்கிறார்கள் அனுபவம் வாய்ந்த இறைச்சி விற்பனையாளர்கள்.


கடந்த வாரம் திடீரென சென்னை சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களில் சோதனை மேற்கொண்டார்கள் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள். ஆந்திரா மற்றும் ராஜஸ்தானிலிருந்து வந்த சில பார்சல்களில் கடும் நாற்றம் வீச, அவற்றை உடைத்துப் பார்த்த அதிகாரிகள் மிரண்டு விட்டார்கள். பெட்டி நிறைய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி. எப்போது வெட்டியதோ தெரியவில்லை... புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. முகவரி ஏதுமின்றி பெயர் மட்டுமே எழுதப்பட்ட அந்த பெட்டிகளை டெலிவரி எடுக்க வந்தவர்கள், ஆய்வு நடப்பதை அறிந்து கூட்டத்தோடு கலந்து வேடிக்கை பார்த்துவிட்டு நழுவினார்கள். அன்று தொடங்கி, ரயில் சரக்கு பிடிபடுவது தினச்செய்தியாகி விட்டது. இதுவரை சுமார் 10ஆயிரம் கிலோவுக்கு மேல் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
‘‘இன்னாவோ இது இன்னிக்கி, நேத்து நடக்கிறாமாதிரி பேசுறாங்கோ. காலங்காலமா இது நடந்துக்குனுதான் இருக்கு நைனா’’ என்று பம்முகிறார்கள் வடசென்னை கறிக்கடைக்காரர்கள் சிலர். ஒருவரை மட்டும் ஓரங்கட்டி வாயைக் கிளறினோம். ‘‘டன்கணக்கில் வருகிற இந்த Ôரயில் சரக்குÕ எங்கேதான் போகுது..?’’ என்று கேட்டதும், ‘‘ம்... எல்லாம் நம்ப வயித்துக்குள்ளாறதான்’’ என மிரள வைக்கிறார் அவர்.

‘‘ஒரு நாள் சோதனையில மட்டும் 8 ஆயிரம் கிலோ பிடிபட்டிருக்குன்னா மாசத்துக்கு எத்தனை கிலோன்னு நீயே கணக்குப் போட்டுக்கோ. ராஜஸ்தான்ல இது தனித்தொழிலாவே நடக்குது. அங்கிருந்து ஆந்திரா அனுப்பி, அங்கேயிருந்தும் சென்னைக்கு வருது. சென்னையை விட அதிகமா கேரளாவுக்குப் போவுது. இதுக்குன்னு சில ஏஜென்ட்டுகள் இருக்காங்க. திருட்டு கால்நடைகள், நோய் புடிச்ச, கோயிலுக்கு நேர்ந்து விடுற கால்நடைகளை வெட்டி, வாடை தெரியாம இருக்க சில கெமிக்கலை தடவி டிரெயின்ல ஏத்தி விட்டுருவாங்க. பாக்ஸ் மேல அட்ரசெல்லாம் இருக்காது. வெறும் பேருதான் இருக்கும். பார்சலை யார்கிட்ட சேக்கணும்ங்கிறது இங்கே உள்ளவங்களுக்குத் தெரியும். இறங்குற சரக்கை ஒரு குடோனுக்குக் கொண்டு போயி, லேசா சுத்தம் பண்ணி ரெண்டு மணி நேரத்துல பிரிச்சு அனுப்பிருவாங்க.

எந்த இறைச்சியா இருந்தாலும் வெட்டி நாலு மணி நேரத்துக்குள்ள சமைச்சுறணும். இல்லாட்டி அழுக ஆரம்பிச்சிரும். ராஜஸ்தான்ல என்னைக்கு வெட்டுறாங்களோ, அதுதவிர டிரெயின்ல வேற ரெண்டு, மூணு நாள் டிராவல் பண்ணுது. இங்கே வரும்போது புழு நெளியும். சாதாரணமா ஒரு கிலோ ஆட்டுக்கறி 440 ரூபா. ரயில் சரக்கு வெறும் 120 ரூபாதான். இதுக்கு சென்னையில ஏகப்பட்ட கஸ்டமர் இருக்காங்க நைனா...’’ என்று நம் நெஞ்சில் நெருப்பை வைத்துவிட்டு அந்த கறிக்கடைக்காரர் பீடியைப் பற்ற வைக்கிறார்.
‘‘யாருக்கெல்லாம் ரயில் சரக்கு போகுது..?’’

‘‘ரோட்டோரத்துல தள்ளுவண்டி போட்டு 20 ரூவா, 30 ரூவான்னு பிரியாணி விக்கிறாங்களே, அவங்களுக்கெல்லாம் 440 ரூவாய்க்கு இறைச்சி வாங்குனா கட்டுப்படியாகுமா..? பலபேரு ரயில் சரக்கைத்தான் வாங்குறாங்க. சில பெரிய ஹோட்டல்கள்ல கூட ரயில் சரக்குக்கு டிமாண்ட் இருக்கு. இதுல கிடைக்கிற லாபத்தைப் பாத்துட்டு தொழிலுக்கே சம்பந்தமில்லாத பல பேரு புதுசு புதுசா இறைச்சிக்கடை ஆரம்பிக்கிறாங்க. பாரம்பரியமா கடை நடத்துறவங்க யாரும் இதைச் சீண்டுறதே இல்லை...’’ என்று அதிர வைக்கிறார் அவர்.



இந்த குற்றச்சாட்டு குறித்து சென்னை ஹோட்டல்கள் சங்க கௌரவத் தலைவர் ரவியிடம் பேசினோம்.
‘‘வெளிமாநிலங்களில் இருந்து வரும் இறைச்சி குறித்து நாங்கள் விரிவாக விசாரித்துள்ளோம். சென்ட்ரல், எக்மோர், சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளைச் சுற்றியிருக்கும் சில சாலையோர உணவகங்களுக்கு அது சப்ளை செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். ஹோட்டல் தொழில் மிகவும் புனிதமானது. நம்பிக்கையோடு சாப்பிட வரும் மக்களுக்கு துரோகம் செய்வதை மன்னிக்கவே முடியாது. பெரிய உணவகங்களில் இந்த இறைச்சியைப் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. அரசின் தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே உணவகங்களை நடத்துகிறோம். விலை குறைவாகச் சொல்லி ஆபத்தான உணவுகளை விற்கும் சாலையோரக் கடைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்...’’ என்கிறார் ரவி.      

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் இறைச்சிக்கடை நடத்த, மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். பெரம்பூர், சைதாப்பேட்டை, வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் ஆட்டுத்தொட்டிகள் உள்ளன. இங்குதான் ஆடு, மாடுகளை வெட்ட வேண்டும். இறைச்சியின் தரத்தைச் சோதித்து அதிகாரிகள் இறைச்சியின் மீது சீலிடுவார்கள். அதையே விற்கவேண்டும். ஒவ்வொரு மாதமும் இங்கு 62 ஆயிரம் ஆடுகளும், 3500 மாடுகளும் வெட்டப்படுகின்றன. இதுதவிர, சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுபெறாத இறைச்சிக்கடைகள் செயல்படுவதாகச் சொல்கிறார்கள். அவர்களில் சிலரே ரயில் சரக்குகளை கையாள்வதாகச் சொல்கிறார்கள்.



இந்த இறைச்சியைச் சாப்பிடுவதால் என்ன பாதிப்பு ஏற்படும்? குடலியல் நிபுணர் சுரேந்திரனிடம் கேட்டோம்...
‘‘சரியான குளிர்பதன நிலையில் வைக்காவிட்டால், சில மணி நேரங்களிலேயே இறைச்சியில் கிருமிகள் உருவாகிவிடும். கிருமிகள் விஷத்தன்மையை உருவாக்கிக் கொண்டே இருக்கும். நல்ல கொதிநிலையில் சமைக்கும்போது, கிருமிகள் அழிந்துபோகும். ஆனால், விஷத்தன்மை அழியாது. இதைச் சாப்பிடுவதால், காலராவுக்கு இணையான வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இறைச்சியின் மேல் ஈக்கள் அமரும்போது, முட்டைகளை இட்டுவிடும். ஓரிரு நாட்களில் அந்த முட்டைகள் புழுக்களாகி விடும். அதனால் பெரிய தொந்தரவுகள் இருக்காது என்றாலும், இதுபோன்ற இறைச்சியைச் சாப்பிடுவதால் குடல் அழுகிப்போகவும் வாய்ப்புண்டு’’ என்று மிரள வைக்கிறார் சுரேந்திரன்.
லாபத்துக்கு ஆசைப் பட்டு மக்களின் உயிரோடு விளையாடுபவர்களை இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை.
- வெ.நீலகண்டன்

நீங்கள் வாங்குவது நல்ல இறைச்சியா..?


*  தினமும் திறக்கப்படும் கடைகளில் மட்டுமே வாங்குங்கள்.

*  இறைச்சியில் அதிக வாடை வந்தால் அது பழைய இறைச்சியாகவோ, ரயில் சரக்காகவோ இருக்கலாம்.

*  நல்ல இறைச்சி இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதிக சிவப்பாகவோ, அதிக வெளுப்பாகவோ இருந்தால் தவிர்த்து விடுங்கள்.

*  இறைச்சி குளிர்ந்த நிலையில் இருந்தால் யோசிக்காமல் தவிர்த்து விடுங்கள். அது ஐஸில் வைத்த பழைய இறைச்சியாக இருக்கலாம்.

*  சென்னையில் இறைச்சி வாங்கும்போது, இறைச்சியின் மேல் மாநகராட்சி சீல் உள்ளதா என்று கவனியுங்கள்.

*  பதிவு செய்யப்பட்ட கடைகளில் மட்டுமே இறைச்சி வாங்குங்கள்.