சுட்ட கதை சுடாத நீதி





அந்த வனவிலங்கு உயிரியல் பூங்காவில் இருக்கும் காவலர்களுக்கு ஒரே பிரச்னை உணவுதான்! தினம் தினம் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு வருகிறார்கள். விலங்குகளைப் பார்ப்பதோடு அவர்கள் சும்மா இல்லை. ‘விலங்குகளுக்கு உதவுகிறோம்’ என நினைத்துக் கொண்டு தாங்கள் விரும்பியதை எல்லாம் அவற்றுக்கு சாப்பிடக் கொடுக்கிறார்கள். சிங்கத்துக்கு சிப்ஸ் போடுவது, புலிக்கு பொறை கொடுப்பது, யானைக்கு பீட்ஸா ஊட்டுவது என இதற்கு எல்லையே இல்லை.

வரும் மக்கள் கூட்டத்தோடு ஒப்பிடும்போது, காவலர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு! அவர்களால் இதைக் கண்காணிக்க முடியவில்லை.
விலங்குகளின் உணவுப் பழக்கம் வேறானது. இப்படி தரும் உணவுகளை சாப்பிடும்போது அவற்றின் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. ஏகப்பட்ட பிரச்னைகள் வரும். இதைக் குறிப்பிட்டு, ‘விலங்குகளுக்கு யாரும் உணவுகள் எதையும் தராதீர்’ என பூங்கா முழுக்க போர்டு வைத்தார்கள். உணவுப் பொருள் எடுத்து வர தடை விதித்துப் பார்த்தார்கள். ஆனால் கேன்டீன் கான்டிராக்ட் எடுத்தவர் சண்டைக்கு வந்ததால், இந்தத் தடை சீக்கிரமே விலகியது.

என்ன செய்வது என ஊழியர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு இருந்தபோது, அந்தப் பூங்காவின் பழைய தலைமை அதிகாரி மாற்றலாகி, புதியவர் வந்தார். அவர் சிம்பிளாக ஒரு வழி சொன்னார். பூங்கா முழுக்க இருந்த போர்டுகளை அகற்றிவிட்டு, அவர் சொன்ன புதிய கட்டளையை போர்டாக வைத்தார்கள். ‘விலங்குகளுக்கு உணவு தர 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்’ என அறிவித்தது அந்த போர்டு.

மறுநாள் பூங்காவுக்கு வந்தவர்கள், ‘‘எங்க சாப்பாட்டை தர்றதுக்கு நாங்க காசு வேற தரணுமா?’’ என சண்டை பிடித்துவிட்டு, எதுவும் தராமலே போனார்கள். ஊழியர்கள் நிம்மதியானார்கள்.
புதுமையாக சிந்திப்பவர்களே ஜெயிக்கிறார்கள்!