நிழல்கள் நடந்த பாதை



கிராமங்கள் தரும் கொடுங்கனவுகள்


சமீபத்தில் நான் கலந்துகொண்ட இரண்டு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து நெடுநேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். இன்றைய இளைஞர்கள் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்களா, துவண்டு போகிறார்களா என்பது பற்றி ஒரு நிகழ்ச்சி. விவாதத்தின் நடுவில் ஒருவர் எழுந்து கேட்டார், ‘‘நீங்கள் நகர்ப்புற இளைஞர்களை மையமாக வைத்துத்தான் பேசுவீர்களா? கிராமப்புற இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? பாவங்க அவங்க... அவங்களுக்கு தரமான கல்வி கிடையாது. ஒழுங்கான சாப்பாடு கிடையாது. படிச்சாலும் வேலை கிடைக்காது. இங்கிலீஷ் பேச வராது. அவங்கள்லாம் இந்த நவீன உலகத்தோட சவால்களை எப்படீங்க சந்திப்பாங்க..?’’

எனக்கு சவுக்கால் அடிபட்டது போலிருந்தது. இன்றைய இளைஞர்கள் பிரச்னை பற்றி பேசுகிற பெரும்பாலானவர்கள், இந்த கிராமப்புற இளைஞர்களை கணக்கில் எடுத்துக்கொள்கிறார்களா? அப்படி எடுத்துக்கொண்டால் இளைஞர்களுக்கு அது பொத்தாம் பொதுவான தன்னம்பிக்கையூட்டும் கருத்துக்களை பேசுவதோடு நிற்காது. மாறாக நமது விவசாயப் பொருளாதாரம், சாதி அமைப்பு, கல்வி முறையின் பாரபட்சம், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் என பல பிரச்னைகளில் போய் நிற்கும். நகர்ப்புற இளைஞர்களை மையமாக வைத்து ஆளுமை சிக்கல், அன்னிய கலாசாரம் என்று பேசுவதில் அத்தனை சிரமங்கள் இல்லை. நமது மனசாட்சியை துன்புறுத்தும் சங்கடமான பல கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லவும் வேண்டியதில்லை.

இன்று ஒரே படிப்பை படிக்கும் கிராமப்புற மாணவனும் நகர்ப்புற மாணவனும் ஒரே வாய்ப்பைப் பெறுவதில்லை. நவீன உலகம் நிர்ப்பந்திக்கும் மொழி, தன்னம்பிக்கை, ஆளுமை எல்லாமே அவனுக்குத் தடையாக இருக்கிறது. இட ஒதுக்கீட்டின் மூலமாக ஏதோ எல்லா கிராமப்புற மாணவர்களும் முன்னேறிவிட்டது போன்ற பீதியை உருவாக்குபவர்கள், இன்று கிராமத்திலிருந்து படித்து நகரத்திற்கு வரும் இளைஞர்களின் சோகங்களை அறிவதில்லை. பெரும்பாலான போட்டிகளில் அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

இன்னொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி, காதல் திருமணங்களால் ஏற்படும் வன்முறை பற்றியது. கலப்புத் திருமணங்களை எதிர்க்கும் ஒரு ஜாதி அமைப்பின் தலைவருடன் கடுமையாக வாக்குவாதம் செய்துகொண்டிருந்தேன். அவர் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். ‘‘ஊர்ல ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்கயே இருந்தாங்கன்னா அம்மா அப்பாவுக்கு தலைகுனிவா இருக்கும்ல... வெளியூர்லயோ, வெளிநாட்டுலயோ போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா பிரச்னையில்ல...’’

அவர் நேர்மையான மனிதர். உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார் என்று தோன்றுகிறது. கிராமங்கள் சாதியை உற்பத்தி செய்யும் விளைநிலங்களாக இருக்கின்றன. சாதியை பாதுகாக்கும் கோட்டைகளாக இருக்கின்றன. சாதியை மீறுகிறவர்களை அவை ஊரைவிட்டுப் போகச் சொல்கின்றன. சில சமயம் உலகத்தைவிட்டே கூட! தமிழக கிராமங்களில் காதல் காரணமாக செய்யப்படும் கொலைகளும், குடும்பங்களில் நிகழும் கௌரவக் கொலைகளும் தெரிய வந்த எண்ணிக்கையை விட மிகவும் அதிகம்.  

இளைஞர்களுக்கும் காதலர்களுக்கும் நமது கிராமங்கள் உண்மையில் மிகப்பெரிய சிறைச்சாலையாக இருக்கின்றனவோ என்று தோன்றுகிறது. அவர்களது திறன்களும் ஆசைகளும் பொருளாதாரரீதியாகவும் சாதிய ரீதியாகவும் தொடர்ந்து முடக்கப்படுகின்றன. கிராமங்களில் சுவாசிக்க நல்ல காற்று இருக்கிறது; ஆனால் நமக்கு மூச்சு முட்டுகிறது.

சமீபத்தில் புகழ்பெற்ற சமூகவியலாளர் காஞ்சா இலையாவின் கட்டுரை ஒன்று படித்தேன். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரித்து எழுதியிருந்தார். நான் இதைக் கடுமையாக எதிர்ப்பவன். கோடிக்கணக்கான கிராமப்புற சிறு வர்த்தகர்களை அது நடுத் தெருவுக்கு கொண்டு வந்துவிடும் என்று ஆழமாக நம்புகிறவன். ஆனால் அவர் முன்வைக்கும் வாதம் மிகவும் முக்கியமானது.
‘இந்தியாவில் குறிப்பிட்ட சில சாதியினரே சில்லரை வர்த்தகத்தில் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். அவர்களது வர்த்தக நிறுவனங்களிலும் அந்த சாதியினரே பெரும்பாலும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். தலித்துகள் உணவுப் பொருள் விற்பனை போன்ற சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டால், உயர்சாதிக்காரர்கள் அங்கே பொருட்கள் வாங்க மாட்டார்கள். சில்லரை வர்த்தகத்தில் இருக்கும் இந்த சாதிய ஆதிக்கம் உடைக்கப்பட வேண்டும். அதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வருவது நல்லதுதான். அதன் ஊழியர்களில் 50 சதவீதத்தினராவது தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்’ என்கிறார் காஞ்சா இலையா.

இந்தக் கூற்றில் பல உண்மைகள் இருக்கின்றன. கிராமங்களை விட்டு வெளியேறிய தலித்துகள்தான் ஓரளவு மனிதர்களுக்கான சம உரிமையுடன் சாதிய சமூகத்தின் அவமானங்கள் இல்லாமல் வாழ முடிகிறது. சாதிய அமைப்பை உடைக்கும் விஷயத்தில், பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் சாதிக்க முடியாததை நகர்மயமாதலும் உலகமயமாதலும் சாதித்தன. சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் வணிகர்கள் சொந்த சாதிக்காரர்களையே ஏன் பெரும்பாலும் பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள் என்றால், சில காரணங்கள் தெளிவாகத் தெரிகின்றன. சொந்த சாதி உணர்வை வெளிப்படுத்தி குறைவான விலைக்கு அவர்கள் உழைப்பைச் சுரண்டுவது, சொந்த சாதி அபிமானத்தால் அவர்களை நம்புவது, தங்கள் சமூகத்தைச் சார்ந்தவனுக்குத்தான் வேலை தர வேண்டும் என்ற குறுகிய எண்ணம், எல்லாவற்றையும்விட தனது சாதிக்காரன் தனக்கு எதிராகப் போராட மாட்டான் என்ற நம்பிக்கை.

நமது கிராமப் பண்பாடு, நமது சுதேசி பொருளாதாரம் - இவற்றில் ஒளிந்திருக்கும் சாதிப் பண்புகளை உதறாமல் நாம் அவற்றைப் பாதுகாக்க நினைப்பது வீண் என்றே தோன்றுகிறது.

கேலிச் சித்திரமாகும் ஏழ்மை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவரும்போதெல்லாம் என் மனதை உறுத்தும் ஒரு விஷயம், யாராவது வறுமையான குடும்பப் பின்னணியில் உள்ள மாணவனோ, மாணவியோ சிறந்த மதிப்பெண் பெற்றுவிட்டால், அந்த வறுமை ஊடகங்களில் கொண்டாடப்படும். அந்த மாணவரின் அப்பா கூலித்தொழிலாளி, அம்மா வீட்டு வேலைக்காரி என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதி ஏதோ ஒரு அரிதினும் அரிதான காரியம் இந்த உலகில் நடந்துவிட்டதுபோல ஆர்ப்பாட்டம் செய்வார்கள். வறுமைக்கும் ஒரு குழந்தையின் திறமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குழந்தைகள் மூளையால்தான் படிக்கிறார்கள்; பணத்தால் அல்ல.

ஒரு மாணவி குழந்தைத் தொழிலாளியாக இருந்து, சிறப்பாகப் படித்து மெரிட்டில் எம்.பி.பி.எஸ் சேர்ந்துவிட்டாள். ஒரு ஆங்கிலப் பத்திரிகை இந்தச் செய்தியை அவளது புகைப்படத்துடன் வெளியிட்டது. அவர்களது இணைய தளத்திலும் அந்தச் செய்தி வெளிவந்தது. செய்தியைப் படித்த சக மாணவர்கள், அவள் குழந்தைப் தொழிலாளியாக இருந்தது பற்றி கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கினர். அந்த மாணவி மனமுடைந்து போனாள். மருத்துவம் படிக்கும் வசதியான மாணவர்களிடையே அவளது போராட்டமும் வெற்றியும் ஒரு கேலிப் பொருளாகிவிட்டது. கண்ணீருடன் எனது நண்பர் ஒருவரிடம் அவள் இதைக் கூறினாள். நான் அந்தப் பத்திரிகையை எனது நண்பர் ஒருவர் மூலம் தொடர்பு கொண்டு, அந்தச் செய்தியை அவர்களது இணையதளத்திலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டேன். இது மிகவும் குரூரமான சமூகம். ஒருவரது வெற்றிகளோ, திறன்களோ இங்கு மதிக்கப்படுவதில்லை. தோற்றம், பணம், அதிகாரம், சாதி என சில காரணிகள்தான் மனிதர்களின் உயர்வுக்கான தகுதிகளாக எப்போதும் இருக்கின்றன. இதையெல்லாம் மீறி வருபவர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனமுடைந்து போகத்தான் செய்கிறார்கள்.



நாம் எங்கே வந்திருக்கிறோம் என்பதை மட்டும் பேசுவோம்; எங்கிருந்து வந்தோம் என்பதை ஒருபோதும் பேசவேண்டாம்.  கொல்லப்படும் சத்தியம் ஆமீர்கானின் ‘சத்யமேவ ஜெயதே’ பற்றி இதே தொடரில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதில் பேசிய, கலப்புத் திருமணம் செய்துகொண்ட உ. பியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்பவர், தாங்கள் கௌரவக் கொலை செய்யப்படலாம் என்று அச்சம் தெரிவித்திருந்தார். கடந்த வாரம் அவர் சில மர்ம நபர்களால் நடுத் தெருவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார். ‘தான் கொல்லப்படுவேன்’ என்று இந்த தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் முன் ஒருவன் முறையிட்ட பிறகும் அவன் அதேபோல கொல்லப்படுகிறான். ‘சத்யமேவ ஜெயதே’ உண்மையில் ஒரு குரூர நாடகத்தின் ஒரு அங்கம்; அவ்வளவே!
(இன்னும் நடக்கலாம்)


[நான் படித்த புத்தகம்]

தமிழ்நாடு

(நூறாண்டுகளுக்கு முந்தையபயணக் கட்டுரைகள்)
திரட்டித்தொகுத்தவர்:ஏ.கே.செட்டியார்

தமிழில் பயண இலக்கியத்தின் அடையாளமாக இன்று நிலைத்திருக்கும் பெயர், ‘உலகம் சுற்றிய தமிழன்’ ஏ.கே.செட்டியார். அவர் எழுதிய புகழ்பெற்ற பயண இலக்கிய நூல்கள், பல நாடுகளைப் பற்றிய அரிதான பழங்கால சித்திரங்களைத் தருபவை. ஏ.கே.செட்டியார் மற்றவர்கள் எழுதிய பயணக் கட்டுரைகளை இந்த நூலில் தொகுத்துள்ளார். தமிழகத்திற்குள் பலரும் மேற்கொண்ட பயணத்தைப்பற்றிய குறிப்புகள், நாம் கடந்து வந்துவிட்ட மிகப்பெரிய பண்பாட்டு வெளியை நெஞ்சில் கொண்டு வந்து நிறுத்துகின்றன. சென்னப்பட்டணத்தின் ஜட்கா வண்டிக்காரர்களின் தந்திரங்களைப் பேசும் கட்டுரையில் அப்படியே இன்றைய ஆட்டோக்காரர்களைப் பார்க்க முடிகிறது. ட்ராம் வண்டிகளைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும்போது, ஒரு மிகப்பெரிய காலம் நம் முன் கடந்து போகிறது. சென்னை முதல் நீலகிரி வரை பல ஊர்களைப் பற்றிய மனப் பதிவுகள் இந்த நூலை அரிய ஒரு ஆவணமாக்குகிறது. இதே ஊர்களைப் பற்றிய இன்றைய காட்சிகளையும் மனப்பதிவுகளையும் தொகுக்கும் நூல் ஒன்று வரவேண்டும்.
(விலை: ரூ.180/-, வெளியீடு: சந்தியா பதிப்பகம், 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600083.)


[எனக்குப் பிடித்த கவிதை]

பூனை
பூனை ஒரு விலங்கு
அதற்கு தெரிந்திருக்கிறது
பிரியமானவர்களைக் கடிக்கும் முன்னே
பற்களை எப்படி உதிர்த்துக் கொள்வதென
ஸ்பரிசிக்கும்போது
நகங்களை எவ்வாறு மழுக்கிக்கொள்வதென
- இசை

மனுஷ்ய புத்திரனின் ஃபேஸ்புக் பக்கம்

மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கு அரசியல்வாதி என்பதற்காக அரசு மரியாதை கொடுக்கவில்லை. ஆர்ட்டிஸ்ட், கார்ட்டூனிஸ்ட் என்ற அடிப்படையில் அரசு மரியாதை கொடுக்கப்பட்டது
- மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவா.
அசீம் திரிவேதியும் ஒரு கார்ட்டூனிஸ்ட்தான். அவருக்கு வேறுவிதமான அரசு மரியாதையைக் கொடுத்ததும் இதே மும்பை போலீஸ்தான். உங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா?