வதங்காத பூக்களும் வற்றாத எழுத்தும்





வே.பாபுவின் கவிதைகளைப் படிக்கிறபோது, தக்கையைப் போல மனம் லேசாகி, இருளானதொரு வெளியில் மௌனித்துக் கொள்கிறது. சேலம் அம்மாபேட்டை, முருகன் கோயில் முகப்பில் பூக்கடைக்காரராக அறியப்படுகிறார் வே.பாபு. இவரது முதல் தொகுப்பான ‘மதுக்குவளை மலர்’ மிகவும் கவனம் பெற்ற இலக்கியப் பிரதி. குழந்தைகளின் இயல்பைக் கொல்லும் கொடுமைகளை முன்வைத்து ‘கருகும் அரும்புகள்’ என்றொரு நூலையும் வெளியிட்டுள்ளார்.

‘‘தற்கொலை செஞ்சுக்கணும்... இல்லைன்னா எழுதணும்... இந்த ரெண்டே முடிவுகளோட சுயசார்பான வாழ்க்கையைத் தொடங்கின ஆளு நான். தற்கொலை செஞ்சுக்கறதை விட எழுதுறது வசதி. அதனாலதான் எழுதுறேன். சமூகத்தில நடக்கிற கொடுமைகளை எதுத்துக் கேட்கமுடியாத கையறு நிலை. கண் முன்னாடி நடக்கிற தவறுகளை திருத்த முடியாத குற்ற உணர்வு. இதையெல்லாம் எழுத்தால வெளிப்படுத்துறேன்’’ என்கிற பாபுவின் பூர்வீகம், சேலத்தை அடுத்துள்ள மாசிநாயக்கன்பட்டி. வழிவழியாக அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பூஜை செய்யும் உரிமை பெற்ற குடும்பம்.

‘‘கோயில்ல கிடைக்கிற தட்டுக்காசு போதாத சூழல்ல, துணைத்தொழிலா பூ வியாபாரத்தைத் தொடங்குனார் தாத்தா. அவருக்குப் பிறகு பெரியப்பா கோயிலைப் பாத்துக்கிட்டார். அப்பா, பூ வியாபாரத்தை ஏத்துக்கிட்டார். கிராமத்துல பூக்கட்டி குடும்பத்தை ஓட்டமுடியாது. அதனால சேலம் வந்துட்டார். நாங்க மூணு பிள்ளைங்க. அதிகாலையில கடைக்கு வந்தா, ராத்திரி 11 மணிக்கு மேல தூங்க மட்டும்தான் வீடு. நல்லாப் படிச்சு அரசாங்க வேலைக்குப் போகணும்னு அப்பாவுக்கு ஆசை. ஆனா குடும்பச்சூழல் அவரை பூக்கடைக்குள்ள முடக்கிடுச்சு. அதனால எங்களை நல்லா படிக்க வைக்க நினைச்சார்.

இப்போ மாதிரியில்லை. அப்போ, வேலை நிறைய வரும். கல்யாண வீடுகள்ல பூ அலங்காரம் பண்ணக் கூப்பிடுவாங்க. மூங்கில் குச்சியை வளைச்சுக் கட்டி, மேல வாழைமட்டையை வச்சு முடைஞ்சு, பூக்களைக் குத்தி அலங்கரிப்போம். இறுதி ஊர் வலத்துக்கு தேரலங்காரம் செய்ற வேலைகள் வரும். இதுதவிர கிரகப்பிரவேச மாலை, கல்யாண மாலைன்னு எப்பவும் பரபரப்பா வேலை இருக்கும்.  


பத்து வயசுலயே மாலை கட்டப் பழகிட்டேன். பள்ளிக்கூடம் போறதுக்கு முன்னாடி, சைக்கிள்ல கூடையைக் கட்டிக்கிட்டு தெருத்தெருவா பூ விப்பேன். சாயங்காலம் கடையில உக்கார்ந்திருவேன். பூக்கட்ட வாங்குற பழைய பேப்பர்கள், இதழ்களை படிப்பேன். பாடப்புத்தகங்கள்ல இல்லாத வேறு ஏதோ அந்த இதழ்கள்ல இருந்துச்சு.

எட்டாம் வகுப்புல வையாபுரின்னு ஒரு தமிழாசிரியர். புத்தகத்தை மூடி வச்சுட்டு, கதை சொல்ற மாதிரி பாடம் நடத்துவார். கதைகள்ல எங்களையும் ஒரு பாத்திரமாக்கி உலவவிடுவார். ஆண்டாளைப் பத்தி அவர் நடத்திய பாடங்கள் இன்னைக்கு வரைக்கும் நெஞ்சுக்குள்ள இருந்து இனிக்குது. அது, கிளர்ச்சியான விடலைப்பருவம். காதலுக்காக கசிந்துருகி வாழ்க்கையை அர்ப்பணிச்ச ஒரு பெண்ணா அவர் ஆண்டாளை வர்ணிச்சது அற்புதம். ஆண்டாளைப் பத்தி கூடுதலா தெரிஞ்சுக்கத்தான் முதன் முதலா நூலகத்துக்குள்ள நுழைஞ்சேன்.

வையாபுரி வாத்தியார் மாதிரி ஆசிரியராகணும்ங்கிறது என் ஆசை. ஆனா என் மாமா என்னை டெக்ஸ்டைல் டெக்னாலஜில சேத்து விட்டுட்டார். ஒட்டாத படிப்பு. பாடப்புத்தகங்களை விட பாலகுமாரன் புத்தகங்களைத்தான் நிறையப் படிச்சேன். அந்த இளம் வயசுல வாழ்க்கையோட இன்னொரு தரிசனத்தை பாலகுமாரன் காட்டினார். அவர் மூலமாவே எனக்கு தி.ஜா. அறிமுகமானார். அவர் வேறொரு எதார்த்த உலகத்துக்கு தள்ளிக்கிட்டுப் போனார்.

ஒரு வழியா படிப்பை முடிச்சேன். மாமா சொன்னமாதிரி சூபர்வைசரா வேலை கிடைச்சுச்சு. ஆனா அந்த வேலை மனசுக்கும், உடம்புக்கும் ஒத்து வரல. எல்லாரும் குழந்தைத் தொழிலாளர்கள். இரவுப்பணி செய்கிற நேரத்துல அவங்க படுற கஷ்டத்தை கண்ணால பாக்கமுடியாது. மத்த ஆட்கள் அவங்களை அதட்டி, அடிச்சு, மிரட்டியெல்லாம் வேலை வாங்குவாங்க. என்னால முடியலே. வேலையை விட்டுட்டு வந்துட்டேன். அதுக்குப்பிறகு மூணு வருஷம் வீடுதான். நினைச்சா பூக்கடைக்குப் போய், ரெண்டு முழம் பூக்கட்டுவேன். இல்லைன்னா வாசிப்பு... எழுத்து... காதல்..!


கார்த்திகேயன், தூரன்குணா, பிருந்தா, பெரியசாமி, ஷாகிப்கிரான்னு எழுத்துவெறி கொண்ட நண்பர்கள் கிடைச்சது என் வாழ்க்கையில ஒரு திருப்புமுனை. நூல்களைப் பரிமாறிக்கிட்டோம். எழுதி எழுதி விவாதிச்சோம். பாராட்டிக்கிட்டோம். சிற்றிதழ்களோட தொடர்பை வளர்த்துக்கிட்டேன். நிறைய எழுத ஆரம்பிச்சேன். வீட்ல அம்மாவோ, அப்பாவோ எதுவும் கேட்டுக்க மாட்டாங்க. ஒரு கட்டத்துல எனக்கே என் போக்கு சரியாப் படலே. அஞ்சுக்கும், பத்துக்கும் மத்தவங்களை எதிர்பார்த்துக் கிடக்கறது என்ன பிழைப்பு..? அப்பாவுக்கு முன்னாடி எழுந்து பூக்கடைக்குப் போகத் தொடங்குனேன். கடையையே எனக்கான களமா மாத்திக்கிட்டேன். ‘தக்கை’ன்னு ஒரு இலக்கிய அமைப்பைத் தொடங்குனோம். ‘தக்கை’ங்கிற பேர்லயே ஒரு சிற்றிதழும் தொடங்கினோம்.


தீவிர இலக்கியவாதிகளோட தொடர்பு கிடைச்சபிறகு ஓரளவுக்கு எனக்கு நவீன கவிதை வடிவம் வாய்ச்சுச்சு. ஆனா இன்னும் முழுமை அடையலே. நவீனத்தை உள்ளடக்கி புதிய விஷயங்களை செஞ்சு பாக்க முயற்சிக்கிறேன். இப்போ பூக்கடையை நான்தான் நிர்வகிக்கிறேன். அதிகாலையில பூ கொள்முதல் பண்ணணும். சாமந்தி தர்மபுரியில இருந்து வருது. மல்லிகை, அரளியெல்லாம் இங்கேயே விளையுது. நாளும், நேரமும் சரியா இருக்கணும். இல்லைன்னா கையைக் கடிச்சிடும். வீதிக்கு வீதி பூக்கடை திறந்துட்டாங்க. கல்யாண வீடுகள்ல டிஸ்கோ பேப்பரையும், குரோட்டன்ஸ் செடியையும் வச்சு அலங்காரம் செய்யிறாங்க. இறப்பு வீடுகள்ல தேர்கூட கட்டுறதில்லை. வாகனத்துல வச்சு கொண்டு போயிடுறாங்க.

சாயங்காலம் கட்டுன பூவை மறுநாள் மதியத்துக்குள்ள வித்துடணும். இல்லைன்னா முதலீடு வதங்கிப் போகும். உரம், பூச்சிமருந்துன்னு கொட்டிக்கொட்டி பூக்களோட தன்மையும், வி¢லையும் ஏறிப்போச்சு. அடுத்த தலைமுறையெல்லாம் இந்தத் தொழிலை நம்பி பிழைக்க முடியுமான்னு தெரியலே. வேறு தொழிலுக்கு மாறியாகணும். நண்பர்களோட சேர்ந்து ஒரு டிராவல்ஸ் ஆரம்பிக்கலாமான்னு யோசனை இருக்கு. அதுக்குப் பணம் திரட்டணும். என் ‘மதுக்குவளை மலர்’ எனக்கும், ‘குள்ளி’ன்னு நான் செல்லமா அழைச்ச ‘அம்மு’வுக்குமான உரையாடல். அம்மு என்னைப் புடம் போட்டவ. வாழ்க்கை மேல நம்பிக்கையை விதைச்சவ. சிதிலமடைஞ்சு கிடந்த என்னை சீர் பண்ணி ஒழுங்குபடுத்தினவ. இன்னைக்கு அவ இல்லை. பளீர்னு வந்து மறையுற மின்னல் போல வாழ்க்கையில வந்துட்டு மறைஞ்சுட்டா. அவளை மனசுக்குள்ள வச்சுக்கிட்டு வாழறேன். வாழ்க்கை அதன்போக்குல ஓடிக்கிட்டிருக்கு..!’’
படங்கள்: ஜெரோம், அந்தோணி