என்ன ஆச்சு இந்திய கிரிக்கெட் அணிக்கு





இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி காலடி வைத்ததுமே நமது வீரர்கள், மீடியா, ரசிகர்கள் என எல்லோருமே ‘பழி தீர்க்கும் படல’த்துக்குத் தயாராகி விட்டார்கள். இங்கிலாந்து சென்று 0-4 என்ற கணக்கில் வாங்கிய மரண அடிக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்ற வெறி, வேட்கை. பயிற்சி ஆட்டங்களில் சாம்பிளுக்கு ஒரு தரமான ஸ்பின்னரைக் கூட கண்ணில் காட்டாமல் வெகு சாமர்த்தியமாக வியூகம் வகுத்தார்கள்.

அகமதாபாத் டெஸ்ட்டில் ஓஜாவும் அஷ்வினும் மிரட்டியதில் இங்கிலாந்தும் பெட்டிப் பாம்பாய் ஒடுங்கியது. டோனிக்கு தலைகால் புரியவில்லை. ‘‘இதெல்லாம் ஒரு பிட்ச்சா? மும்பை ஆடுகளம் முதல் நாளில் இருந்தே சுழலுக்கு சாதகமாக இருக்க வேண்டும்’’ என்று கொக்கரித்தார். ஓஜா, அஷ்வின், ஹர்பஜன் என்று சுழல் கூட்டணியின் பலத்தையும் அதிகரித்தார். பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரே டெஸ்ட்டில் இரண்டு ஆப் ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கியது.

பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்கப் போகிறார்கள் என்பது தெளிவாகிவிட, இங்கிலாந்தும் தற்காப்பில் இறங்கியது. வேகத்துக்கு சுத்தமாக வேலையில்லை என்பதால், நாமும் மூன்று ஸ்பின்னர்களை சேர்த்து வைப்போம் என்று பனேசருக்கு இடம் கொடுத்தார்கள்.

டோனியின் ஆணைப்படியே மும்பை ஆடுகளமும் முதல் ஓவரில் இருந்து சுழலுக்கு ஒத்துழைத்தது. அதை எப்படி சமாளிப்பது என்பதைத்தான் இந்திய வீரர்கள் மறந்து போனார்கள். பனேசரின் அசத்தலான சுழலில் டாப் ஆர்டர் மூழ்கினாலும் புஜாரா, அஷ்வின் தயவில் கணிசமான ஸ்கோரை எட்டியதால், ‘‘இதுவே போதும்பா... நம்ம பசங்க ஈசியா சுருட்டிடுவானுங்க’’ என்று ரசிகர்கள் தெம்பாக இருந்தார்கள்.

ஆனால், அலஸ்டர் குக்-பீட்டர்சன் ஜோடியின் பெவிகால் இணைப்பை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் நாக்கு தள்ளினார்கள். இவர்கள் நன்றாக செட்டில் ஆன பிறகே ஹர்பஜனை முயற்சித்தார் டோனி. ஸ்டாக் பவுலர்களான சேவக், யுவராஜை பயன்படுத்தலாம் என்று யோசிக்கும் அளவுக்கு அவரது மூளை அலர்ட்டாக இல்லை. குக்கும், பீட்டர்சனும் அடித்து நொறுக்கிவிட்டார்கள். இருந்தாலும் நம் ரசிகர்களுக்கு ஒரு நப்பாசை. ‘‘அவனுங்களே இப்படி அடிக்கிறானுங்க... இரண்டாவது இன்னிங்சில் நம்ம ஆளுங்களும் ஒரு கை பார்த்துடுவாங்க’’ என்று நம்பினார்கள். கம்பீர், அஷ்வின் தவிர்த்து ஒருவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் உள்பட இந்திய விக்கெட்டுகளை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்ட பனேசரின் எகத்தாள சிரிப்பு அவரது தாடியையும் மீறி பளிச்சிட்டது. சொற்ப இலக்கை விக்கெட் இழப்பின்றி கடந்த இங்கிலாந்து, கணக்கை நேர் செய்தது.


சொந்த மண்ணில் அடைந்த படுதோல்வி, அணியையும் ரசிகர்களையும் நிலைகுலைய வைத்துள்ளது. கடந்த பத்து இன்னிங்சில் சராசரியாக 15 ரன் மட்டுமே எடுத்துள்ள சச்சின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். ‘‘எதிர்காலம் குறித்து தேர்வுக்குழுவினரிடம் அவர் பேச வேண்டும்’’ என்று கபில் ஆலோசனை கூற, ‘‘இதுபோன்ற நெருக்கடியான கட்டத்தில் சச்சினின் அனுபவம் அவசியம். அவர் அணியில் நீடிக்க வேண்டும்’’ என்கிறார் டிராவிட்.

சொதப்பல் காண்டத்தில் சேவக், கம்பீர், கோஹ்லி, யுவராஜ், டோனி என்று மற்ற பேட்ஸ்மேன்களும் சம பங்கு வகிக்கிறார்கள். ஏற்கனவே வெளிநாட்டுத் தொடர்களில் 8 கேவலமான தோல்விகளைச் சந்தித்த டோனி, உள்ளூரில் கிடைத்த இந்த உதையால் கிறுகிறுத்துப் போயிருக்கிறார். எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியைத் தேர்வு செய்வதற்காக கூடியது தேர்வுக் குழு. சாட்டையைக் கையில் எடுப்பார் சந்தீப் பட்டீல் என்று எதிர்பார்த்த நிலையில், ‘அணியில் மாற்றம் இல்லை’ என்று அறிவித்துவிட்டார்கள். இதற்கும் டோனியின் பிடிவாதமே காரணம். இருந்தாலும், இந்த அணி கொல்கத்தா போட்டிக்கு மட்டும்தான் என்று செக் வைத்திருக்கிறார்கள்.

அணியில் இருந்து தூக்க வேண்டிய முதல் ஆள் டோனிதான் என்கின்றனர் பல விமர்சகர்கள். ‘‘கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என எல்லா பொறுப்பிலும் சொதப்பி வருகிறார். டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஒதுங்கிக் கொண்டு பார்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக், சாஹா போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்’’ என்கின்றனர்.

அஷ்வின் மந்திரப் பந்துவீச்சையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்துவிட்டார்கள் இங்கிலாந்து வீரர்கள். ‘‘அவர் டி20 போட்டிக்குத்தான் லாயக்கு. முரளி கார்த்திக், அமித் ஷர்மா அல்லது பியுஷ் சாவ்லாவை சேர்க்கலாம்’’ என்ற ஆலோசனையும் உலா வருகிறது. சமீப காலத்தில் இந்திய அணி இந்த அளவுக்கு நெருக்கடியைச் சந்தித்ததில்லை.

ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டின் மிகச்சிறந்த வீரராக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பெருமைமிகு விருதைப் பெற்ற விராத் கோஹ்லியால், டெஸ்ட் அரங்கில் சாதிக்க முடியவில்லை. எல்லா பந்தையும் அடித்து ஆட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறுதான் காரணம். வாடியிருக்கும் கொக்கின் பொறுமையை அவர் புஜாராவிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த அணிக்குமே இதுதான் கடைசி வாய்ப்பு. ஈடன் தோட்டத்தில் வசந்தம் மலருமா? இல்லை கல்லறை கட்டப்படுமா? என்பது மூன்றாவது சோதனையின் முடிவில் தெரிந்துவிடும்.
- பா.சங்கர்