பிளான்





‘‘மணப்பொண்ணுக்காக அவங்க அப்பா அம்மா 50 பவுன் நகையும் 5 லட்சம் ரூபாயும் சேர்த்து வச்சிருந்தாங்க. ஆனா நீங்க 25 பவுனுக்கும், 2 லட்சத்துக்கும் சம்மதிச்சி இப்படி ஏமாளியாகிட்டீங்களே...’’ - முகூர்த்தத்துக்கு சற்று முன்பு இப்படி ஒரு மர்ம போன் வர, மாப்பிள்ளையின் அம்மா கண்களில் பேராசை படர்ந்தது. விறுவிறுவென்று மணமேடையின் இந்தப் பக்கம் நின்றிருந்த பெண்ணின் பெற்றோரை நெருங்கினார்.

‘‘என்னது... இன்னும் 25 பவுன் நகையும், 3 லட்ச ரூபாயும் கொடுக்கணுமா?’’ - அதிர்ச்சியடைந்த புனிதாவின் பெற்றோர் சம்பந்தியம்மாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.
‘‘இந்த பண வெறிபிடிச்ச குடும்பத்துல வாழ்க்கைப்பட எனக்கு விருப்பமில்லை...’’ என்றபடி, பொங்கி எழுந்தாள் புனிதா.
மண்டபம் ஸ்தம்பித்தது. கலங்கி நின்ற புனிதாவின் பெற்றோரை அந்த இளைஞன் அணுகினான். ‘‘என் பெயர் ரகுராம். புனிதா கூடதான் வேலை பார்க்கறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, புனிதாவுக்கும் என்னைப் பிடிச்சிருந்தா, வரதட்சணையே இல்லாம நான் அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கறேன்’’ என்றான்.

அனைவரின் கண்களுக்கும் அவன் தெய்வமாகத் தெரிந்தான்.
தன் காதலைச் சொல்வதற்கு முன்பே திருமணப் பத்திரிகையை நீட்டிய புனிதாவிடம், ‘இப்படி மர்ம போன் செய்து அவர்களின் பேராசையை உணர்த்தியது நான்தான்’ என பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவன் சொல்லக்கூடும்!