அமெரிக்கா ரிட்டர்ன் கிராமத்தான்!





புகழ்பெற்ற அமெரிக்க சாஃப்ட்வேர் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் வேலை. வருடச் சம்பளம், ரூபாய் 70 லட்சம். டெட்ராய்டு நகரத்தில் வீடு. கார். ஆறு மாதத்துக்கு ஒருமுறை இந்தியா வந்து செல்ல விமான டிக்கெட். எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பெட்டி, படுக்கையோடு வீட்டுக்கு வந்து நின்ற செந்திலைப் பார்த்து தேனூரே திகைத்து விட்டது. ‘‘நீ என்ன பைத்தியமா?’’ என்று திட்டித் தீர்த்தார்கள் உறவினர்கள். ‘‘அவசரப்பட்டுட்டியேடா’’ என்று கண்கலங்கினார் அப்பா. ‘‘இனி என்னதாண்டா பண்ணப்போறே..?’’ எனக் கலவரத்தோடு கேட்டார் அம்மா.
‘‘எந்த வேலைக்கும் போகப்போறதில்லை... கிராமத்துல தங்கி சேவை செய்யப் போறேன்..!’’ - தீர்மானமாகச் சொன்னார் செந்தில்.

அரியலூருக்கு அருகிலுள்ள தேனூரில்தான் இருக்கிறார் இந்த அதிசய மனிதர். இந்த 30 வயது இளைஞரை ‘அய்யா’ என்று அன்பொழுக அழைக்கிறது ஊர். சம்பாதித்த பணத்தை வைத்து இவர் கட்டிய மருத்துவமனை, சுற்றுப்பட்டு கிராமங்களுக்கு உயிர் நம்பிக்கை ஊட்டியிருக்கிறது. ‘பயிர் டிரஸ்ட்’ என்ற அமைப்பின் மூலம் கள்ளச்சாராய ஒழிப்பு, மது அடிமைகள் மறுவாழ்வு, மாற்றுப் பள்ளிக்கூடம், சத்துணவு மேம்பாடு, சுகாதாரம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் செந்தில், தன் கிராமத்திலேயே ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
அழுக்கு தோய்ந்த வேட்டி, சைக்கிளில் சாப்பாட்டுப் பை, கேரியரில் புத்தகங்கள், மஞ்சள் பையில் கம்ப்யூட்டர் என இவர் காஸ்ட்யூமில் உள்ள காம்பினேஷன்களை நம்பவே கொஞ்சம் நேரம் பிடிக்கிறது.

“படிக்கிற காலத்துலேயே முடிவு பண்ணிட்டேன். அதிகபட்சம் 10 வருஷம் நமக்காக வேலை செய்யணும்... அதுக்கப்புறம் கிராமத்துல தங்கி மக்களுக்காக வேலை செய்யணும். வீட்ல கொஞ்சம் வருத்தப்பட்டாங்க. ஆனா, இப்ப சந்தோஷப்படுறாங்க. இன்னைக்கு, பல பெற்றோர்கள் என்னை அவங்க பிள்ளையா நினைக்கிறாங்க.


நம் சமூகத்துல ஏற்றத்தாழ்வு, நகரங்களை விட கிராமங்களைத் தான் அதிகம் பாதிக்குது. ஏழைகள் ஏழைகளாவே வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. இது நம்ம நாட்டோட வளர்ச்சியையே பாதிக்குது. எங்க அப்பாவும், அம்மாவும் படிச்சவங்க. அதனால எனக்கும், என் சகோதரர்களுக்கும் நல்ல கல்வி தந்தாங்க. ஆனா, எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்குது? என் ஊர்ல எத்தனை பேர் எஞ்சினியர் ஆகியிருக்காங்க, எத்தனை பேருக்கு வேலை கிடைச்சிருக்குன்னு எண்ணிப் பார்த்தா ரெண்டு டிஜிட் கூட தொடலே. நான் படிச்சவன். என் கிராமத்துல இருக்கிற என் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் நான் வழிகாட்டலைன்னா யாரு காட்டுவாங்க?’’ - உணர்வுபூர்வமாக கேள்வி எழுப்புகிறார் செந்தில்.

‘‘எல்லாத்தையும் விட்டுட்டு மக்கள்கிட்ட போன்னு என்னை விரட்டினது விவேகானந்தரோட புத்தகங்கள்தான். அவர் அழைச்ச 100 இளைஞர்கள்ல ஒருத்தனா இருக்கணும்னு நினைச்சுதான் வளர்ந்தேன். நான் படிச்சு முடிக்கிறதுக்குள்ள அப்பா ரிடையர் ஆகிட்டார். குடும்பத்துக்கு என்னோட பங்களிப்பு அவசியமா இருந்துச்சு. பெங்களூரு போய் கிரெடிட் கார்டு வித்தேன். ஒரு சுகர்மில்லுல வேலை செஞ்சேன். ரொம்ப காத்திருந்த பிறகுதான் மும்பையில ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை கிடைச்சுச்சு. சொந்தமா ஒரு வீடு கட்டணும்ங்கிறது அப்பா, அம்மாவோட கனவு. அதுக்காக என்னோட பங்களிப்பை திருப்தியா செஞ்சேன்.

மும்பை எனக்கு நல்ல பயிற்சிக்களமா இருந்துச்சு. டிரெயின்ல பிச்சை எடுக்கிறவங்க, பாலியல் தொழிலாளிகள்னு பாவப்பட்ட மக்களுக்காக அங்கே ஒரு வழக்கறிஞர் வேலை செஞ்சார். அவர்கூட சேந்து நானும் களத்துக்குப் போவேன். 5 வருஷம் அங்கே வேலை செஞ்சேன். அங்கிருந்து யு.எஸ். போனேன். கடுமையா உழைச்சேன். தினமும் 18 மணி நேரம் வேலை செய்வேன். அங்கேதான் பாலா, செந்தில்குமரன், டாக்டர் சுபாஷ், ராம், ராஜ்குமார், ராமநாதன், சுரேஷ்பிரபு, முத்துக்குமார் எல்லாம் அறிமுகமானாங்க. நம்மால முடிஞ்ச அளவுக்கு நம் கிராமங்களுக்கு ஏதாவது செய்யணும்னு கூடிப் பேசினோம். யார் முன்னெடுத்துச் செய்யிறதுன்னு கேள்வி வந்தப்போ, ‘நான் செய்யறேன்’னு முன்னாடி நின்னேன். அஞ்சாவது வருஷம் ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு ஊருக்கு வந்துட்டேன். தேனூர் வந்ததும் முதல் வேலையா ‘பயிர்’ அமைப்பைத் தொடங்குனேன்.

கிராமத்துல நிறைய பிரச்னைகள் இருந்துச்சு. ஓடு உடஞ்ச பள்ளிக்கூடம், சுவர் பெயர்ந்த வகுப்பறைகள்... கிராமத்தில ஒரு ஹெல்த் சென்டர் இல்லை. பாம்பு கடிச்சாக்கூட 10 கி.மீ தாண்டிப் போகணும். பிரசவத்துல சிக்கலாயிட்டா 35 கி.மீ தாண்டி திருச்சிக்கு ஓடணும். பல உயிர்கள் வழியிலேயே பறிபோயிருக்கு. கள்ளச்சாராயம் ஆறா ஓடுச்சு. ஜாதிய பிரச்னைகள் வேற...


செயல்திட்டங்களைத் தொடங்குறதுக்கு முன்னாடி, காந்தி கிராமம் மாதிரி பல சேவை மையங்களுக்குப் போய் அவங்களோட வேலைகளை கவனிச்சேன். யாரெல்லாம் என் திட்டங்களுக்கு உதவி செய்ய முடியும்னு பட்டியல் தயாரிச்சேன். என் கிராமம் மட்டுமில்லாம, சுத்தியுள்ள தொட்டியப்பட்டி, கண்ணாப்பாடி, வரதராஜபுரம், நத்தர்காடுன்னு 8 கிராமங்களைத் தேர்வு செஞ்சேன். என் பெரியப்பா சேதுரத்தினம் தேனூர்ல இருந்த அவரோட ஆறரை ஏக்கர் நிலத்தை ‘பயிர்’ அமைப்புக்கு தானமா கொடுத்தார். என் கையில 35 லட்ச ரூபாய் இருந்துச்சு. அதை வச்சு ஒரு மருத்துவமனை கட்டுனேன். டாக்டர்கள் ஸ்ரீதரன், ஸ்ரீஹரி மாதிரி சமூக நோக்குடைய மருத்துவர்களை அணுகுனேன். சில மருத்துவ மாணவர்களும் வந்து சிகிச்சை கொடுத்தாங்க. கிராமத்துல இருந்து 5 பேரைத் தேர்வு பண்ணி, பயிற்சி கொடுத்து, ஹெல்த் ஒர்க்கரா நியமிச்சேன். கிராமம், கிராமமா போய் அவங்க சேவை செய்றாங்க. அவங்களே மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைச்சுக் கிட்டு வருவாங்க. மனபேதங்களைக் கடந்து எல்லாரும் ஒண்ணு கூடி பேசுறதுக்கு வசதியா ஒரு சமுதாயக்கூடம் கட்டினேன். என் திட்டங்கள் பத்தி மக்கள்கிட்ட பேசினேன். எல்லாரும் சேர்ந்து கள்ளச்
சாராயத்தை ஒழிச்சோம். மக்கள் என்னை நம்பத் தொடங்கினாங்க.

என் தொடர்புகளை வச்சு கிராமத்துலேயே ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்குனேன். பல இளைஞர்களுக்கு வேலை கிடைச்சுச்சு. திருப்பூர்ல இருந்து வேஸ்ட் பனியன்களை வாங்கி நூலா மாத்திக் கொடுக்கிற தொழிற்சாலை ஒண்ணும் தொடங்குனோம். இந்தப் பகுதியில வேப்பங்கொட்டை அதிகம் கிடைக்கும். அதை வாங்கி வேப்பெண்ணெய் தயாரிச்சு விற்பனை செய்யிறோம். துணிப்பைகள் தயாரிக்கிறோம்...’’ - ஆர்வமாகப் பேசுகிறார் செந்தில்.

தலைமைப்பண்பு, கிராமத் தொழில்கள், சமூகக்கடமை போன்ற தனித்துவமான பாடத்திட்டங்களோடு செயல்படுகிறது பயிர் மாற்றுப்பள்ளி. இது தவிர 8 அரசுப்பள்ளிகளையும் தத்தெடுத்து மேம்படுத்துகிறது இந்த டிரஸ்ட். மருத்துவமனையில் தன்னார்வலராகப் பணியாற்ற வந்த ஆயுர்வேத மருத்துவர் பிரீத்தியைக் காதலித்து, சில மாதங்களுக்கு முன்புதான் இரு வீட்டார் சம்மதத்தோடு கரம் பிடித்திருக்கிறார் செந்தில். ‘‘டிரஸ்ட்டுக்கு அமெரிக்காவில இருந்து நண்பர்கள் பணம் அனுப்புறாங்க. இதுதவிர, தொழில்கள் மூலமா நாங்களே ஒரு தொகையை சம்பாதிக்கிறோம். தொடக்கத்துல நிறைய பிரச்னைகள் வந்துச்சு. எல்லாத்தையும் புன்னகையால எதிர்கொண்டேன். மக்கள் புரிஞ்சுக்கிட்ட பிறகு அவங்களே எங்களுக்கு பாதுகாப்பா நிக்கிறாங்க. இன்னும் நிறைய செயல்திட்டங்கள் இருக்கு. பிரீத்தியும் வந்துட்டதால தைரியம் அதிகமாயிருக்கு. இன்னும் சில கிராமங்களுக்கு எங்க திட்டங்களை எடுத்துட்டுப் போக பிளான் பண்ணியிருக்கோம்’’ என தன் காதல் மனைவியின் தோள்சாய்ந்து சிரிக்கிறார் செந்தில். இப்படி கிராமத்துக்கு ஒரு செந்தில்... இல்லை இல்லை, மாவட்டத்துக்கு ஒரு செந்தில் இருந்தால் போதுமே!
- வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்