கட்ச் ஒர்க்கில் கச்சித லாபம்!





சங்கிலித் தையலும், சாதாரண எம்பிராய்டரி வேலைப்பாடுகளும் மெல்ல மவுசு இழக்க, அடுத்து ஃபேஷனாகப் போகிற வரிசையில் முதலில் நிற்கிறது கட்ச் வேலைப்பாடு. அடுத்த சில வருடங்களுக்கு காணும் இடங்களில் எல்லாம் கட்ச் வேலைப்பாடுதான் பேச்சே!

‘‘இது இன்னிக்கு, நேத்திக்கு அறிமுகமானதில்லை. குஜராத்தி மக்கள் மத்தியில காலங்காலமா பிரபலமா இருக்கிற ஒரு விஷயம்தான். பிளவுஸ்லயோ, சேலையிலயோ சிம்பிளா கட்ச் ஒர்க் பண்ணிப் போட்டுப் பாருங்க... அப்புறம் அது எவ்வளவு ஆடம்பரத் தோற்றம் தருதுன்னு தெரியும். புடவையோட டிசைனை அச்சு பிசகாம, அப்படியே ஜாக்கெட்ல கொண்டு வர முடியும். சல்வாரோட டிசைனை துப்பட்டாவுல கொண்டு வர முடியும். அதுதான் இதோட ஸ்பெஷாலிட்டி’’ என்கிறார் பவானி சங்கர். கைவினைக் கலைகள் மீதுள்ள காதலால், வங்கி வேலையிலிருந்து வி.ஆர்.எஸ் வாங்கிக் கொண்டவர்.

‘‘பொதுவா அடிப்படை தையல் கலை தெரிஞ்சவங்களுக்குத்தான் எம்பிராய்டரி போட வரும். அதுலயும் இப்ப பிரபலமா இருக்கிற ஆரி ஒர்க், ஸர்தோசி ஒர்க் மாதிரி நுணுக்கமான தையல் வேலைகளைக் கத்துக்கிட்டு, எக்ஸ்பர்ட் ஆக சில மாசங்கள் ஆகும். வேற சில வகையான எம்பிராய்டரி வேலைகளுக்கு எண்ணிக்கை கணக்கு தெரியணும். ஒரு தையல் மாறினாலும், வடிவம் மாறிப் போகும். ஆனா கட்ச் ஒர்க்ல இப்படி எந்தக் குழப்பங்களும் இல்லை. கத்துக்கிட்ட உடனேயே பிசினஸா ஆரம்பிக்கலாம். அவ்வளவு சுலபம்’’ என்கிறார் பவானி.

ஜாக்கெட், சேலை, சுடிதார் மட்டுமின்றி, சோபா கவர், ஹேண்ட் பேக், டேபிள் கிளாத், தலையணை உறை, திரைச்சீலை என எல்லாவற்றிலும் இதைச் செய்ய முடியும். ‘‘யானை, மயில், மனித முகங்கள்னு உருவங்கள்தான் இந்த வேலைப்பாட்டுக்கு அழகே... அதையே எத்தனை பெரிசாவும் பண்ண முடியும். பட்டுப்புடவையிலகூட போடலாம். சிம்பிளா இருக்கணும்னு விரும்பறவங்க வெறுமனே கட்ச் தையலோட நிறுத்திக்கலாம். கொஞ்சம் ஆடம்பரமா வேணும்னு நினைச்சா, கண்ணாடி, சமிக்கி ஒட்டி, அழகுபடுத்திக்கலாம். ஊசியும் நூலும்தான் மூலதனம். ஒரு ஜாக்கெட்டுக்கு கட்ச் ஒர்க் செய்து கொடுத்தாலே 200 ரூபாய் சம்பாதிக்கலாம். சேலைக்கு குறைஞ்சது ஆயிரம் ரூபாய். வேலையோட நுணுக்கங்களையும், அளவையும் பொறுத்து, இதுல லாபம் கூடும்’’ என்கிறார் அவர். முதலீடின்றி முதலாளியாகலாம்!
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்