வங்கி வேலை இனி கிராமப்புற இளைஞர்களுக்கு இல்லையா





அதிர்ச்சி... பேரதிர்ச்சி... சினிமாவில் இடி மின்னல்களுக்கிடையே கோபுரம் ஒன்று தலைகீழாக சுற்றுமே... அதே மாதிரி தலைசுற்றிக் கிடக்கிறார்கள் கிராமப்புற இளைஞர்கள். ஏற்கனவே வங்கிப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில், இனி தேர்வையே ஆன்லைனில்தான் எழுத வேண்டும் என்று ஷாக் கொடுத்திருக்கிறது தேர்வாணையம். அது மட்டுமல்ல, தேர்வில் வெற்றி பெற்றாலும் கம்ப்யூட்டர் படித்த சான்றிதழ் ஒன்று இருந்தால்தான் இனி வேலை. ‘பிளஸ் 2 படித்திருந்தால் போதும்’ என்றிருந்த கிளார்க் வேலைக்கு இனி டிகிரி முடித்திருக்க வேண்டும் என்று தொடர்கிறது தேர்வாணையத்தின் தடாலடி!

‘‘இதுக்கு, கிராமத்துல பொறந்தவனெல்லாம் பக்கத்துல வராதேன்னு சிம்பிளா சொல்லியிருக்கலாம்’’ என்று புலம்பல்கள் ஆங்காங்கே புகைய ஆரம்பித்திருக்க, இனி கிராமத்து மாணவர்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியோடு கல்வியாளர்கள் சிலரைச் சந்தித்தோம்.
முதலில் வங்கி வேலைக்கான பயிற்சி கொடுக்கும் சென்னை சக்தி அகாடமியின் இயக்குனர் பாலாஜி.
‘‘கிளார்க் வேலைக்கு பிளஸ் 2 படித்திருந்தால் போதும்னு விதி இருந்தாலும், பல வங்கிகள்ல டிகிரி முடிச்சவங்களைத்தான் வேலைக்கு எடுக்கறாங்க. அப்புறம் சும்மா ஒப்புக்கு அந்த விதி எதற்கு என்றுதான் எடுத்திருப்பாங்க. அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க!’’ என்று நம்பிக்கை தந்த அவர், கம்ப்யூட்டர் வழி தேர்வையும் தகுதியையும் கூட பாஸிட்டிவாகத்தான் பார்க்கிறார்.

‘‘டிகிரிதான் தகுதின்னு வந்துட்ட பிறகு கம்ப்யூட்டர் தெரியாத மாணவன்னு கிராமத்துல கூட இருப்பார்களா என்ன? ஸ்கூல், காலேஜ்ல மட்டுமில்லாம, தனியார் கல்வி நிறுவனங்கள்ல படிச்சு வாங்குற சர்டிபிகேட்டைக் கூட ஏத்துக்கறதா அறிவிச்சிருக்காங்க. அடிப்படையான கம்ப்யூட்டர் அறிவை 15 நாட்கள்ல பெற்றிடலாம்ங்கறதுதான் நிஜம். வங்கித் தேர்வாணையமான ஐ.பி.பி.எஸ் தகுதித் தேர்வுகளை நடத்த ஆரம்பிச்ச பிறகு, இந்தத் தேர்வுக்கு அப்ளை பண்றதே ஆன்லைன்லதான். கம்ப்யூட்டர்ல அப்ளை பண்ணத் தெரிஞ்ச மாணவனுக்கு ஆன்லைன்ல பரீட்சை எழுதுறது கஷ்டமா இருக்காது.
அதுலயும் இந்தத் தேர்வை எழுத பெரிய அளவுல கம்ப்யூட்டர் அறிவெல்லாம் தேவையில்லை, மவுஸை அசைக்கத் தெரிஞ்சாலே போதும். கேள்விகள் எல்லாமே ஆப்ஜெக்டிவ் டைப். பேப்பர்ல சரியான விடையை டிக் செய்யிற மாதிரி, ஆன்லைன்ல டிக் பண்ண வேண்டியிருக்கும்... அவ்வளவுதான்! கீ போர்டுல கை வைக்க வேண்டியதே இல்லை. அதுமட்டுமில்லாம, பரீட்சை ஹால்லயும் ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர், நெட்வொர்க் எஞ்சினியர் இருப்பாங்க. ஏதாவது இயந்திரக் கோளாறோ அல்லது புரோகிராம் பிரச்னையோ வந்தா, அவங்க சரி செஞ்சு கொடுப்பாங்க’’ என்கிறார் பாலாஜி.
ஆனால், மாணவர்கள் தரப்பு இதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. ‘‘ஆன்லைன்ல அப்ளை பண்ணணும்ங்கிற விதி வந்ததும், எல்லோருமே அவங்களாவே அப்ளை செய்யறதில்லை. எங்க ஊர்ல எல்லாம் கம்ப்யூட்டர் சென்டர்காரங்கதான் இதுல சம்பாதிச்சு எங்கயோ போயிட்டாங்க. இத வச்சு எங்களையெல்லாம் கம்ப்யூட்டர்ல புலின்னு நீங்களா நினைச்சுக்கறீங்க. எந்த கிராமத்துப் பள்ளிக்கூடத்துல கம்ப்யூட்டர் இயங்கற கண்டிஷன்ல இருக்கு? அது ஒரு மூலையில கிடந்தா எங்களுக்கு எப்படி கம்ப்யூட்டர் அறிவு வரும்?’’ என்று குமுறினார் ஒரு கிராமத்து மாணவர்.

‘‘சிலருக்கு இந்த அறிவிப்புகள் அதிருப்தியாதான் இருக்கும். ஆனா, இன்னைக்கு எல்லா வங்கிகளுமே கணினிமயமாகியாச்சு. அதனால கொஞ்சம் அதிக தகுதியுள்ளவர்களை வேலைக்கு எடுக்க நினைக்கிறது தவிர்க்க முடியாதது’’ என்று ஆரம்பித்தார் சங்கம் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனர் வாவூசி.

‘‘வங்கிகளின் பணியிடங்களுக்காகத் தேர்வு நடத்துவதுதான் ஐ.பி.பி.எஸ்ஸின் வேலையே தவிர, ‘யாரைத் தேர்ந்தெடுத்தாலும் நீங்கள் வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று வங்கிகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது. இன்றைய வங்கிகளுக்கு இதெல்லாம் தேவை என்பதால்தான் தகுதிகளையும் தேர்வு முறையையும் மாற்றுகிறார்கள். வங்கி வேலைகளைப் பெற நினைப்பவர்கள் இந்தத் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்’’ என்கிறார் அவர்.

ஆனால் இதைக் கடுமையாக எதிர்க்கிறார் தேனா வங்கியின் எஸ்.சி-எஸ்.டி பிரிவு பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜெய்சன். ‘‘கிளார்க் வேலைக்கு பிளஸ் 2 தகுதி போதாதுன்னு இப்போ சொல்றாங்க. ஏற்கனவே ‘கடைநிலைப் பணியாளர் வேலைக்கு எட்டாம் வகுப்பு ஃபெயில் ஆகியிருந்தா போதும்; ஆனால், பிளஸ் 2 பாஸாகி இருக்கக் கூடாது’ன்னு விதி இருக்கு. இப்போ பிளஸ் 2 பாஸ் பண்ணினவங்க கிளார்க் வேலைக்கும் போக முடியாது; பியூன் வேலைக்கும் தகுதி அதிகம்ங்கற நிலைக்கு வந்து நிக்கிறாங்க.

வங்கிப் பணியாளர் தேர்வுங்கறது ஒரு போட்டித் தேர்வு. அதுல போட்டி போடுறவங்களோட தகுதியை தேர்வு மூலமே நிர்ணயிக்கலாமே. அதை விட்டுட்டு இப்படி பிளஸ் 2, டிகிரின்னு விண்ணப்பிக்கிற தகுதியை மாத்தி ஏன் குழப்புறாங்கன்னு தெரியல. இன்னைக்கு எல்லா வங்கிகளும் கணினிமயமாகிடுச்சுன்னு சொல்றாங்க. அதுக்காக பழைய ஸ்டாப்களை எல்லாம் தூக்கிட்டாங்களா? இருக்கறவங்களுக்கே பயிற்சி கொடுத்து நடத்த முடியுதில்ல? அப்படி கிராமத்து மாணவர்களுக்கும் ஒரு பயிற்சி கொடுத்து எடுத்துக்கிட்டா என்ன?’’ என்று வாதிட்டார் அவர்.
முன்னேற்றம் என்பது வங்கிகள் கணினிமயமாவது மட்டுமல்ல... அடித்தள கிராம மக்கள் சமூக அந்தஸ்து பெறுவதும்தான் என்பதை உணருமா தேர்வாணையம்..?
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ், தமிழ்