life of ஷ்ரவந்தி





பதினேழு வயதிலேயே ஹாலிவுட் நடிகை! ஹாலிவுட்டின் தூரத்தை எட்டிப் பிடித்த ஒரே தமிழச்சி! - இப்படி பல தளங்களில் முன்னணிக்கு வந்திருக்கிறார் ஷ்ரவந்தி சாய்நாத். சென்னை, அண்ணா நகரில் இருக்கும் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவி. சமீபத்திய பரபரப்பான ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் வரும் அந்த பரதநாட்டிய பட்டாம்பூச்சி இவரேதான். ‘‘இங்கிலீஷ்’ படத்தில் நடிச்சிருக்கிற பொண்ணா? அதோ அந்த லெஃப்ட்ல திரும்புங்க!’’ என ஏரியாவில் ஆளாளுக்கு வழி சொல்கிறார்கள். படித்துக்கொண்டிருந்த பாடப் புத்தகங்களை ஓரமாக வைத்துவிட்டு நம்மிடம் பேசினார்.

‘‘‘லைஃப் ஆஃப் பை’ படத்துக்காக நடனம் ஆடத் தெரிஞ்ச ஒரு பொண்ணைத் தேடியிருக்காங்க. கடைசியா அவங்க முயற்சி நான் படிக்கிற ஸ்ரீதேவி நித்யாலயாவுக்கு வந்து நின்னிருக்கு. அதனோட தலைவர் ஷீலா உன்னிகிருஷ்ணன்தான் என் போட்டோவை செலக்ஷனுக்கு அனுப்பியிருக்காங்க. போட்டோவைப் பார்த்து செலக்ட் பண்ணி, ஒரு சீனுக்கு நடிக்கச் சொல்லி நியூயார்க் அனுப்பி வச்சாங்க. திடீர்னு பார்த்தா, ‘தைவானுக்கு வர முடியுமா, ஒரு சின்ன மேக்கப் டெஸ்ட் இருக்கு’ன்னு சொன்னாங்க. அதற்கும் போயிருந்தோம். அதற்குப் பிறகு எல்லாத்தையும் நான் மறந்திட்டேன்.
திடீர்னு ஒரு நாள் போன். ‘நீங்க ஆங்க் லீ படத்துல நடிக்க தேர்வு செய்யப்பட்டு இருக்கீங்க’ன்னு தகவல் வந்தது. அதுவரைக்கும் விளையாட்டுப் பிள்ளை மாதிரியே இருந்தேன். நெட்ல ‘ஆங்க் லீ’ன்னு தேடினா வந்து கொட்டுற தகவல்கள் பிரமாண்டமா இருந்தது. ‘எவ்வளவு பெரிய டைரக்டர்’னு பயம் வந்திடுச்சு. ரெண்டு வாரம் ஷூட்டிங்குக்காக பாண்டிச்சேரி போயிருந்தேன். சின்ன ரோல்தான்... ஆனா, முக்கியமான கேரக்டர். இரண்டு வாரம் அந்த யூனிட்டோடு தங்கியிருந்தது ரொம்ப அருமையா இருந்தது. ஆங்க் லீ ஹாலிவுட்டே கொண்டாடற டைரக்டர். ஆனா, அதன் சுவடே இல்லாம இருக்கார். கொஞ்சம் கூட டென்ஷனே இல்லை. என்கிட்டே இருந்து என்ன வேணுமோ, அதுல தெளிவா இருக்கறார். அந்த அமைதியும், தெளிவும், அழுத்தமான ஆங்கிலமும், நம்மகிட்டே எப்படி நடிக்கணும்னு எடுத்து சொல்ற விதமும் பார்த்தப்பதான் இவ்வளவு பெரிய டைரக்டருக்கு சும்மா பெயர் வந்திடலைன்னு தெரிஞ்சது.


நான் ஆங்க் லீ படத்தில் நடிக்கிற விஷயத்தை கொஞ்சம் ரகசியமாவே வச்சிருந்தேன். பார்த்தா திடீர்னு டிரெய்லர், செய்திகள்னு வர ஆரம்பிச்சுடுச்சு. என் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் மகிழ்ச்சி. ஸ்கூல்ல டீச்சர்ஸ் பாராட்டினாங்க. எனக்குப் பெரிய சந்தோஷம். என்னுடைய ஆர்வம் எல்லாம் டான்ஸில்தான் இருந்தது. நான் ரொம்ப பிரமாதமான ஸ்டூடன்ட் இல்லை. ஆனா, ‘இது போதும்’னு சொல்ற அளவுக்கு ஆவரேஜ் ஸ்டூடன்ட். நான் இவ்வளவு தூரம் வந்ததிற்கு எங்க அம்மா கற்பகமும், அப்பா சாய்நாத்தும், அண்ணன் ப்ரவிஷும்தான் காரணம். அம்மாவுக்கு நான் பெரிய இடத்திற்கு வரணும்னு ஆசை. டான்ஸ், டான்ஸ்னு பரீட்சைக்குப் படிக்காம வந்து நிற்கும்போது அண்ணாதான் கூப்பிட்டு உட்கார வச்சு பாடம் சொல்லிக் கொடுப்பான். வீட்ல இருக்கவங்களோட ஆசீர்வாதம் இல்லாம, நாம் எங்கேயும் போய் எந்த சாதனையும் செய்ய முடியாது.

என்னவா வரணும்ங்கிற என்னோட ஆம்பிஷன் அடிக்கடி மாறிட்டே இருக்கும். விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கணும், டான்ஸர் ஆகணும்னுதான் நேத்து வரைக்கும் நினைச்சுக்கிட்டு இருந்தேன். என்னை சினிமாவில் பார்த்த பின்னாடி, நிறைய சினிமா வாய்ப்புகள் வருது. கொஞ்சம் யோசிக்கணும். சீக்கிரம் ஒரு நல்ல முடிவெடுப்பேன். சினிமாவில எனக்கு சூர்யா பிடிக்கும். அழகும், ஸ்டைலும், லுக்கும் எல்லாம் சேர்ந்து ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி தனுஷ் பிடிக்கும். நல்ல வாய்ப்பும், பெரிய பேனரும், நல்ல நடிகரும் கிடைச்சா நிச்சயம் சினிமாவைப் பத்தி யோசிப்பேன்.
எப்பவும் வீட்ல இல்லாம ஸ்கூல், டான்ஸ் பயிற்சின்னு பிஸியா ஓடுவேன். என்னை இப்ப எல்லோருக்கும் அடையாளம் தெரியுது. அதுனால என்ன... சந்தோஷம்தான். இப்படியொரு வாய்ப்பு எனக்குக் கிடைச்சதுக்கு நன்றி சொல்லணும்னா என்னைப் புரிஞ்சுக்கிற அம்மா, என்னோட டான்ஸ் மாஸ்டர்ஸ்னு நிறைய பேருக்கு சொல்லலாம். எனக்குன்னு இருக்கிற வானத்துல பறக்கணும்னு ஆசையா இருக்கு’’ என கண்கள் இரண்டும் பளபளக்கப் பேசுகிற ஷ்ரவந்தியிடம் நிறைய பக்குவம் தெரிகிறது.
ஷ்ரவந்தி பறக்க விரும்புகிற நேரம்
அழகானது.
- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்