விஜய்யின் புது ஜோடி நான்!




ஜலதோஷம் பிடிக்கும் அளவிற்கு சந்தோஷ மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் அமலாபால். யெஸ்! விஜய் ஜோடியாக நடிக்கப் போகிறார். பூரிப்பில் உப்பியிருப்பார் என்று நினைத்தால் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை போல முன்பைக் காட்டிலும் சிக்கென்று இருக்கிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் தெலுங்குப் பட ஷூட்டிங்கில் இருந்தவருடன் பேசினோம். அமலாவின் பேச்சில் வார்த்தைக்கு வார்த்தை உற்சாகத் தூறல்.

நீங்கதான் ஜோடியா நடிக்கணும்னு இளைய தளபதியே சொன்னாராமே?
‘‘ஆரம்பத்துலயே வம்புக்கு இழுக்குறீங்களா. ம்ஹும்... உங்க தூண்டில்ல சிக்க மாட்டேன். டைரக்டர் விஜய் சார் எங்கிட்ட இந்த ப்ராஜெக்ட் பற்றி சொல்லி, ‘நீங்கதான் ஹீரோயின்’னு சொன்னப்போ என்னால நம்பவே முடியல. ஏன்னா ஸ்கூல் படிக்கிறப்பவே நான் விஜய் சாரோட ஃபேன். அமெரிக்கா போகும்போதெல்லாம் அங்க உள்ள ரசிகர்கள், ‘இளைய தளபதி ஜோடியா எப்போ நடிக்கப்போறீங்க’ன்னு கேட்டுட்டே இருப்பாங்க. அவரோட ஜோடியா நடிச்சிடுவேன்ங்கிற நம்பிக்கை  இருந்தது. அது இவ்வளவு சீக்கிரமா நிறைவேறும்னு நினைச்சிக்கூட பார்க்கல. ‘என்ன கதை... என்ன கேரக்டர்...’னு ரெண்டு கேள்விய நீங்க வேஸ்ட் பண்றதுக்கு முன்னாடியே சொல்லிடறேன். இன்னும் நான் கதை கேட்கல.

விஜய்க்கு நான் ஜோடி.  டைரக்டர் விஜய் ரொம்ப டேலன்ட். அவர் படத்துல ஹீரோயினுக்கும் வெயிட்டான கேரக்டர் இருக்கும். இந்த ரெண்டு விஷயமும் இருக்கும்போது கதை கேட்க வேண்டிய அவசரம் இல்ல. விஜய் சார் படம் என் கேரியரில் முக்கியமான படமா இருக்கும்!’’

விஜய்கிட்ட பேசினீங்களா... உங்ககிட்ட அவர் பேசினாரா?
‘‘இந்த இன்ஃபர்மேஷன் இப்போ ரொம்ப அவசியமா? ரெண்டு விஜய் இருக்கிறதால இளைய தளபதின்னு கேளுங்க. பூஜை அன்னிக்குத்தான் விஜய் சாரை மீட் பண்ணினேன். அவரோட ஸ்டைல், மேனரிஸம், டான்ஸ் இதையெல்லாம் லைவ்வா பார்க்கப்போறோம்ங்கிற எதிர்பார்ப்பு உள்ளுக்குள்ள எகிறிக்கிட்டு இருக்கு. அவரோட நடிக்கிற பயத்துல, ஆக்டிங்கில் சொதப்பிடக்கூடாதுங்கிற எச்சரிக்கையிலும் ஒரு பக்கம் ஸ்டெடியா நிக்கிறேன். ‘கில்லி’ எனக்கு ரொம்ப புடிக்கும். பத்து தடவையாவது பார்த்திருப்பேன். அதோட செகண்ட் பார்ட் எடுத்தா த்ரிஷா இடத்தில் நான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

தமிழ்ல விஜய் படம் தவிர, சமுத்திரகனி டைரக்ஷன்ல ஜெயம் ரவி ஜோடியா ‘நிமிர்ந்து நில்’ படத்தில நடிக்கிறேன். இந்தப் படத்தோட தெலுங்கு வெர்ஷன்ல நானி ஜோடியா நடிக்கிறேன். இந்தப் படம் ஒரு யுனிவர்சல் சப்ஜெக்ட். ஸ்ட்ராங்கான லவ்வும் சமூகத்திற்கான ஒரு மெஸேஜும் படத்தில இருக்கு. இது தவிர தெலுங்கில் ரெண்டு படங்கள்ல நான் பிஸி!’’

டைரக்டர் விஜய்யுடனான ஃபிரண்ட்ஷிப் எப்படி இருக்கு?
‘‘அவரையும் என்னையும் இணைத்து வந்த கிசுகிசுக்கள் பத்தித்தானே இவ்வளவு நாசுக்கா கேட்கிறீங்க. ஒரு திறமையான டைரக்டரா அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். நான் நல்லா நடிப்பேன்னு நினைச்சி அவர் எனக்கு வாய்ப்பு தர்றார். இத ஏன் ஒரு விஷயமா எடுத்துக்கணும்? மீடியாகாரங்க என்னைப் பற்றி நிறைய எழுதி முடிச்சிட்டாங்க. ஆயிரம் கிசுகிசுக்களை சந்தித்த அபூர்வ சிந்தாமணி நானாதான் இருப்பேன். ஆனா இப்பெல்லாம் அது பத்திக் கவலைப்படுறதில்ல. ஜாலியா எடுத்துக்கிறேன். தமிழ்ல ஒரு பழமொழி சொல்வாங்களே... அதென்ன ‘மாங்கா காச்சாதானே...’ என்று இழுத்தவரிடம், ‘‘காய்த்த மரம்தான் கல்லடிபடும்னுதானே சொல்ல வர்றீங்க?’’ என்றால், ‘‘ஆங். அதேதான்! கிசுகிசுக்கள் எவ்ளோ வருதோ, அந்த அளவுக்கு என்னோட வளர்ச்சி இருக்குன்னுதானே அர்த்தம்!’’



அப்படின்னா ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடுவீங்க போல இருக்கே?
‘‘ம். நிறைய ஊர்கள்லேர்ந்து கேட்குறாங்க. அதெல்லாம் ஓவரா தெரியும்னு நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். நல்ல படங்களா நடிக்கணும். ரொம்ப நாளைக்கு ஃபீல்டுல நிலைச்சி நிற்கணும். இதுதான் என்னோட ஆசை!’’
நிற்க அதற்குத் தக!
- அமலன்