ஜெய்சங்கர் வேடத்திற்கு ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்





'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என்று வர்ணிக்கப்பட்ட ஜெய்சங்கர், மக்கள் திலகத்துடன் அமர்ந்திருக்கும் இந்தப் படத்தை, ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜய்சங்கரிடம் காட்டியபோது, ‘‘அட... சூப்பர் படம்ல’’ என முகத்தில் ஆச்சர்யம் மலர பேச ஆரம்பித்தார்.

‘‘சத்யா ஸ்கிரீன்ஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘கன்னிப்பெண்’ படத்தில் அப்பாதான் ஹீரோ. அந்தப் படத்தோட தொடக்கவிழாவிற்கு எம்.ஜி.ஆர் வந்து வாழ்த்தினார். அப்போது எடுத்த படம்தான் இது. சில வேளைகளில் சின்னச் சின்ன உரசல்கள் வந்திருந்தாலும் அப்பா மீது எம்.ஜி.ஆரும், எம்.ஜி.ஆர் மீது அப்பாவும் மிகவும் பிரியமாக இருந்தார்கள். எம்.ஜி.ஆரை ‘கிரேட் ஹீரோ’ என்று அப்பா புகழ்ந்து பேசுவார். அதேபோல் அப்பாவின் உடம்பு பற்றி எம்.ஜி.ஆர் பாராட்டிப் பேசுவார். ‘நேச்சுரலாவே உங்களோட உடம்பு கட்டுக்கோப்பா இருக்கு. இன்னும் உடற்பயிற்சியெல்லாம் செய்து நல்லா வச்சுக்குங்க ஜெய்’னு அப்பாவுக்கு ஆலோசனை சொல்வார்.

அதேமாதிரி ஜானகி அம்மாவுக்கு எங்க அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி பேசுவார். ‘பசங்களை நல்லா படிக்க வைங்க’ன்னு அன்பா சொல்வார். அப்பாவோட கல்யாண ரிசப்ஷனுக்கு எம்.ஜி.ஆர் வந்து வாழ்த்தியதுடன், அப்பாவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து விருந்து சாப்பிட்டுட்டுத்தான் போனார். எம்.ஜி.ஆர் தமிழக முதல்வரா ஆனதும், நடிகர் சங்கம் சார்பில் அவருக்குப் பாராட்டு விழா நடத்தினாங்க. அப்போ எம்.ஜி.ஆருக்காக பெரிய மாலை ஆர்டர் பண்ணியிருந்தார் அப்பா. கிட்டத்தட்ட நூறு கிலோ இருந்ததா சொன்னாங்க. நாலு பேரு சேர்ந்து மேடைக்குத் தூக்கிட்டு வந்தாங்க. அதை எம்.ஜி.ஆர் கழுத்தில் அப்பா போட்டபோது அவரோட முகத்தில் அவ்வளவு மலர்ச்சி.

‘தானே’, ‘நிலம்’னு இப்போ வர்ற புயல்கள் மாதிரி எம்.ஜி.ஆர் முதலமைச்சரா இருந்தப்பவும் ஒரு பயங்கரமான புயல் வந்து தமிழ்நாட்டைத் தாக்கியது. நாகப்பட்டினம் கடலோரப் பகுதிகளில் நிறைய சேதம் ஏற்பட்டுச்சாம். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்து, புயல் நிவாரண உதவித்தொகை கொடுத்திருக்கிறார் அப்பா.

ஒருமுறை எம்.ஜி.ஆருக்காக அப்பா விட்டுக் கொடுத்தும் இருக்கார். ஏ.வி.எம் நிறுவனம் ‘அன்பே வா’ படத்தைத் தயாரித்தபோது முதல்ல ஹீரோவா அப்பாதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடிப்பதாக இருந்தது. அந்தக் கதையில் நடிக்க எம்.ஜி.ஆர் விரும்பியிருக்கார். அப்பாகிட்ட இதுபற்றிப் பேசினதும், மறுபேச்சே இல்லாம அப்பா ஓ.கே சொல்லிட்டார். ‘நான் அந்தப் படத்தில இல்லையே’ன்னு வருத்தமெல்லாம் படாமல், எம்.ஜி.ஆர் அந்தப் படத்தில் நடித்ததற்காக சந்தோஷப்பட்டார்.’’
- அமலன்
படம் உதவி: ஞானம்