சீஸன் சாரல்





‘A for Aruna’ என்று எல்.கே.ஜியில் பாடம் வைக்கலாம் போல. அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கு ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். அவர்கள் கைக் குழந்தைக்கு சாப்பிடக் கொடுக்கும்போது, அருணா சாய்ராம் பாடிய ‘மாடு மேய்க்கும் கண்ணே’ பாட்டைப் போட்டு சாப்பிட வைப்பதை நானே கண்கூடாகப் பார்த்தேன். அந்தப் பாட்டைக் கேட்டுவிட்டு மாடு எப்படி மேய்வதை மறந்து தானாகப் போய் கயிற்றைக் கட்டிக் கொண்டு நிற்கிறதோ, அப்படித்தான் குழந்தையும் அழுகையை நிறுத்தி, தானே பிடுங்கி சாப்பிட்டு விடுகிறது.

இந்த வருடம் இசை விழா தொடக்கமாக, அருணா சாய்ராம் மற்றும் கணேஷ், குமரேஷ் ஆகியோரை பாரதிய வித்யா பவன் கௌரவித்தது. அதைத் தொடர்ந்து பவனில் அருணாவின் கச்சேரி. அருணா ஒவ்வொரு ஸ்வரத்தையும் தொட்டபோது அது தேவதை போல தெய்வீகமாகத்தான் இருந்தது. வார்த்தை ஸ்பஷ்டம், ஸ்ருதி சுத்தம், நல்ல பாடாந்தரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்
அருணாவின் பாட்டைப் பற்றி. ‘மாயா மாளவ கௌளை’ வர்ணத்துக்குப் பிறகு, ‘பாகாய்ய நய்ய’ என்ற சந்திரஜோதி ராகத்தில் அமைந்த தியாகராஜர் பாட்டு. எச்.என்.பாஸ்கர் வயலின் அருமை. ஆரபி ராகத்தில் அருணா பாடிய ‘அம்பா ஸௌரம்பா’ கீர்த்தனை, ஸ்ரீசாய்கிரிதர் மிருதங்கத்தோடு நாதமயமாக ஒலித்தது.

‘வழி மறைத்திருக்குதே’ என்ற கோபாலகிருஷ்ண பாரதி பாட்டு, நெரிசலான கூட்டத்தில் முன்னால் ஆயிரம் தலைகள் மறைத்தாலும், லாஸ்ட் ரோ ஆடியன்ஸையும் லயிக்க வைத்தது. ‘மாமவது ஸ்ரீ’, ‘சேத ஸ்ரீபாலகிருஷ்ணம்’ பாடல்கள் சொக்க வைத்தன. அன்றைய ஸ்பெஷல் கல்யாணி ராகம். ‘எந்துகோ நீ மனஸு’ கீர்த்தனை பரம சுகம். ‘நான், எனது என்ற மாயையில் சிக்கி, மக்கள் எல்லோரும் செல்வந்தர்களைப் பின்பற்றித் திரிகிறார்கள். என்னைக் காப்பாற்று என்று வேண்டுகோள் வைக்கிறார்கள்’ எனப் புகார் சொல்கிறார் தியாகராஜர். தீர்க்கதரிசி அவர்! 200 வருடங்களுக்குப் பிறகு மனிதர்கள் எப்படி இருக்கப் போகிறார்கள் என்று அன்றைக்கே பாடி வைத்துப் போய்விட்டார்.


தனியில் சாய்கிரிதரும், எஸ்.வி.ரமணியும் பிரமிக்க வைத்தனர். அருணா சாய்ராம் கச்சேரியில் ஊத்துக்காடு பாட்டும், அபங்கும் இல்லாமலா? ‘மதுர மதுர’ - அடாணா பாட்டு, ‘அடா... அடா...’ என்று மக்களைத் தலையாட்ட வைத்தது. ரேவதி ராகத்தில் அருணா பாடிய துக்காராம் அபங்க் கேட்ட அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். அது பண்டரிபுரத்துக்கு அத்தனை பேரையும் கொண்டு போய், பாண்டுரங்கனை தரிசிக்க வைத்து, மறுபடியும் மயிலாப்பூரில் இறக்கி விட்டது. என்ன ஒரு தெய்வீகம். அருணா பாட்டுக்கு ஏன் இப்படி ஒரு ஆகர்ஷணம் என்று கண் கூடாகத் தெரிந்தது.
பரபரவென ஒரு கச்சேரியைக் கேட்க விரும்பினால், பரத் சுந்தர் கச்சேரிக்குப் போக வேண்டியது தான். ஸ்ரீராதாகிருஷ்ணா சங்கீர்த்தன ஸமாஜம் நடத்திய இசை விழாவில், ராக சுதா ஹாலில் பரத் கச்சேரி. இப்போதெல்லாம் இசை விழா என்று காலை 7 மணிக்கு ரசிகர்கள் வெளியில் வந்தால், இரவு 9 மணி வரைக்கும் சபாக்கள்தான் தஞ்சம். சாப்பாடு, தூக்கம், பேச்சு எல்லாவற்றுக்குமே ரொம்ப சௌகரியம். நைட் தங்க முடியாததுதான் ஒரே கஷ்டம். அதே போல நவம்பர் பாதியிலிருந்து நம் வித்வான்கள் வாத்தியத்தை எடுத்துக்கொண்டு காலை 7 மணிக்குக் கிளம்பினால், எல்லாமே ‘ரோமிங்’தான். காரோ, பைக்கோ... அதிலேயேதான் மாத்துத்துணி, இத்யாதிகள். ஒரு சபாவிலிருந்து கச்சேரி முடித்து இன்னொரு சபாவுக்கு அவசர அவசரமாகச் சென்று வர சைரன் வைத்த வண்டி இருந்தால், ரொம்ப சௌகரியம்.

அலட்டிக்காமல், சரளமாகப் பாடுகிற பரத்துக்கு விட்டல் வயலின், பாலக்காடு ரகு பேரன் அனந்த் மிருதங்கம், சுந்தர்குமார் கஞ்சிரா. ஸஹானா வர்ணம். ‘ஜானகி ரமண’ - சுத்த ஸீமந்தனி ராகத்தில், அநாயாசமான ஸ்வரப் பின்னல். ‘எவர நி’ கீர்த்தனை வேகம், பழைய கச்சேரிகளை ஞாபகப்படுத்தியது. கல்யாணி ராகம் பாடி, ‘அம்மராவம்மா’ என்று ஒவ்வொரு துளசியாகப் போட்டு அர்ச்சனை செய்தார். அனந்த் கையில்தான் என்ன ஒரு ஜாலம்! பாட்டுக்கு வாசிக்கிற அழகு, கஞ்சிராவுக்கு வழிவிட்டு, பின்பு எடுத்து வாசிக்கிற அழகு... இப்படி ஒரு இளமைப் பட்டாளம் மேடையில்!


நம்ம சங்கீத உலகில் மூன்று எழுத்து மகிமை ரொம்பப் பேர் போனது. GNB, SSI, MMI, MSS, DKP, MLV, TNK, LGJ, TNS, TVS... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதில் TVG, ஒரு மூன்று எழுத்து மாயாஜாலக்காரர். 1980களிலேயே நாரத கான சபையில் ‘ஃப்யூஷன்’ நிகழ்ச்சி நடத்தியவர். அன்றே கத்ரி கோபால்நாத், வீணை காயத்ரி என்று பல பிரபலங்களை அந்த நிகழ்ச்சியில் தந்தவர். 70 வருடங்களுக்கு மேலாக சங்கீத சேவை செய்து வருபவர். அவருக்குத் தெரியாததே இல்லை என்று சொல்லலாம். அன்று ‘சன்மார்க்க’ என்கிற இசை சமர்ப்பணத்தை தேவி நேத்தியார் பாட்டு, வரதராஜன் வயலின், பிஜு கீ-போர்டு, ஜி.ராமநாதன் சாக்ஸபோன், திருப்பணித்துரா ராதாகிருஷ்ணன் கடம், பத்மநாபன் மிருதங்கம், ராஜா டிரம்ஸ் என்று குருஜி டி.வி.ஜி., பவன் மேடையில் அளித்து ஜொலித்தார். ஆபேரி ராகத்தில் ‘நகுமோமு’ பாடி, தான் ஒரு 81 வயது இளைஞர் என்று டி.வி.ஜி. நிரூபித்தார்.

ரிஷபப்ரியா ராகத்தை வரதராஜன் வாசித்தபோது, மயிலாப்பூர் மாட வீதியில் பங்குனி விழாவின்போது, கபாலீஸ்வரர் ரிஷப வாகனத்தில் வரும் காட்சி ஞாபகம் வந்தது. இப்படி ஒரு தேனா கையில்! சாக்ஸபோன், மற்றும் கீ-போர்டில் அந்த ராகம், ரசிகர்களை மெய் மறக்கச் செய்தது. டி.வி.ஜி. அவர்களுடைய தானம், பிறகு பல்லவி piece மூணு பேரும் வாத்தியத்தில் வாசித்து (மிருதங்கமும், கடமும் தனி) முடித்தபோது, பிரளயம்தான். ராஜா கையில் டிரம்ஸ் விளையாடியது. கடைசியில் தேவி பாடிய சில ஹிந்தி பஜன்கள் மிக ரம்மியம். மொத்தத்தில் ஒரு confusion கூட இல்லாமல், மன நிம்மதி தந்த இந்த ‘Fusion’ நிகழ்ச்சி, ரொம்ப வித்தியாசம். நிறைவும் கூட!
(சாரல் தொடரும்...)