பெத்தவங்க





‘‘யாருங்க செல்போன்ல?’’
‘‘அண்ணன்...’’
‘‘என்னவாம்?’’
‘‘அம்மாவுக்கு உடம்பு முடியலையாம்.’’
‘‘அதுக்கு..?’’
‘‘இப்ப கொஞ்சம் சிரமத்துல இருப்பாரு போல. பணம் இருபதாயிரம் ரூபாய் வேணும்னு கேட்டார்... அவர் அக்கவுன்ட்ல போடச் சொன்னார்!’’
‘‘நீங்க என்ன சொன்னீங்க?’’
‘‘காலையில முதல் வேலையா போட்டுடறேன்னு சொல்லிட்டேன்...’’
‘‘ஏங்க, உங்களுக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா? போன மாசம்தானே ஐயாயிரம் ரூபாய் அனுப்பினதா சொன்னீங்க. இப்பவும் வேணும்னு அவர் கேட்டா, நீங்க அனுப்பிடுவீங்களா? நம்மளுக்கு என்ன குடும்பம் இல்லையா... குழந்தைகள் இல்லையா?’’
‘‘விடு சர்மிளா... பெத்தவங்களை நாம வச்சுத்தான் பார்க்கலை. பார்க்கிறவங்களுக்கு உதவியாவது பண்ணுவோமே!’’
‘‘குத்திக் காட்டறீங்களா?’’
‘‘உண்மையைத்தானே சொன்னேன்!’’
இப்போது சர்மிளாவின் செல்போன் அலறியது. மறுமுனையில் அவளுடைய அண்ணன் கிருபாகரன்.
‘‘சர்மிளா... மாப்பிள்ளைக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. நம்ம அம்மாவுக்கு உடம்பு முடியலைன்னு சொன்னதுக்கு போன மாசம் ஐயாயிரம் ரூபாய் அனுப்பினார். இப்பவும் இருபதாயிரம் ரூபா அனுப்பறதா சொல்லிட்டார்.’’
போனை கட் பண்ணி விட்டு சர்மிளா ஆச்சரியத்துடன் கௌதமை ஏறிட்டாள்.
‘‘ஏங்க... எங்க அம்மா வைத்திய செலவுக்குத்தான் பணம் அனுப்பினீங்களா?’’
‘‘பெத்தவங்கள்ல உங்க அம்மா, எங்க அம்மான்னு என்ன பிரிச்சுப் பேசிக்கிட்டு... எல்லாம் ஒண்ணுதான்!’’ - இயல்பாகப் பேசின கணவனை குற்ற உணர்வோடு பார்த்தாள் சர்மிளா.