அஜித்தும் விஜய்யும் வேற லெவல்ல இருக்காங்க!





சினிமா என்னும் பரமபத ஆட்டத்தில் மீண்டும் ஏணிப்படியில் நிற்கிறது இயக்குனர் எழிலின் கட்டம். ‘மனங்கொத்திப் பறவை’ மூலம் வெற்றிக்கனியை சுவைத்தவர், அடுத்து ‘தேசிங்கு ராஜா’வை இயக்குகிறார். ‘‘நான் இப்போ சக்சஸ் சீட்டில் இருப்பதற்குக் காரணமே, புதிதாக வந்திருக்கும் இயக்குனர்கள்தான். சின்ன பட்ஜெட்டில் நல்ல சினிமாவைக் கொடுத்து லாபமும் எடுக்க முடியும்னு ஒரு டிரெண்டை அவங்கதானே உருவாக்கியிருக்காங்க’’ - படு ஷார்ப்பாகப் பேசுகிறார் மனிதர்.

‘‘நல்ல படங்கள் தொடர்ந்து வந்த சமயத்தில், ஹீரோவைப் பார்க்காமல் நல்ல படமான்னு மட்டும் பார்த்து டிக்கெட் ரிசர்வ் பண்ற அளவுக்கு ஆடியன்ஸோட ரசனையும் ஒரு படி உயர்ந்து இருந்துச்சு. களமிறங்க இதுதான் கரெக்டான நேரம்னு நினைச்சு ‘மனங்கொத்திப் பறவை’ கதையை நிறைய தயாரிப்பாளர்கள்கிட்ட சொன்னேன். ‘பெரிய ஹீரோ இல்லாம, புதுமுகத்தை வச்சு படம் எடுக்கறது தற்கொலைக்கு சமம்’னு சிலர் ஒதுங்கிப் போனாங்க. பல பேர் என்னையே பயமுறுத்தினாங்க. நண்பர்களை துணைக்கு அழைச்சுக்கிட்டு நானே தயாரிச்சேன். நம்பிக்கை வெற்றியைக் கொடுத்துச்சு. சரியான ரூட்லதான் போறோம்னு முடிவு பண்ணின நிமிஷத்தில், ‘தேசிங்கு ராஜா’ கதைக்கான பொறி விழுந்தது’’ - சக்ஸஸ் ஃபார்முலாவை கண்டெடுத்தது போன்ற சந்தோஷம் எழில் முகத்தில்.



‘‘இன்னிக்கு பல கிராமங்களில் நடக்கும் கொலை சம்பவங்களின் பின்னணியைப் பார்த்தால், ரொம்ப அற்பமா இருக்கும். ‘குவார்ட்டருக்காகவெல்லாம் கொலை நடக்குது’ன்னு பேப்பர் பார்த்துப் புலம்புவோம். ஆனா, கொலையானவனுக்கு கொலை செய்தவன் நிறைய உதவி செஞ்சிருப்பான். ‘அப்படியெல்லாம் செஞ்ச நமக்கு கேட்டதை வாங்கித் தரலையே’ங்கற எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமே அவனுக்குள்ள வன்மமா மாறி, கொலை வரைக்கும் போக வைக்குது.

உணர்ச்சிவசப்பட்டு செய்யற சின்ன தவறு எவ்வளவோ பாதிப்புகளை ஏற்படுத்துது. தலைமுறை கடந்தும் அந்தப் பகை நெருப்பு, ஊதி ஊதி பெருசாக்கப்படுது. பழிவாங்கும் உணர்ச்சியும் சங்கிலித் தொடரா தொடருது. இப்படி விரோதம், காழ்ப்புணர்வுகள் நிறைஞ்ச கிளியூர், புலியூர் என்கிற இரண்டு கிராமங்களில் நடக்கும் கதைதான் ‘தேசிங்கு ராஜா’. கேட்கிறதுக்கு டெர்ரரா தெரியும். ஆனா, பக்கா காமெடியுடன் நல்ல மெசேஜ் சொல்ற படமாவும் இது இருக்கும்.’’
‘‘இதுல விமலுக்கும் பிந்துமாதவிக்கும் என்ன வேலை?’’

‘‘இதயக்கனி. ஹீரோ விமலோட கேரக்டர் பேரு இதுதான். படத்துல அவர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். யாராவது எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினால் கூட பாக்கெட்டில் இருக்குற பணம், கையில கட்டியிருக்குற வாட்ச்னு எல்லாத்தையும் கொடுத்துட்டு உருகற ஆளு. சிட்டியில் படிப்பை முடிச்சிட்டு ஊருக்கு வர்ற ஹீரோயின் பிந்துமாதவி. இவங்க ரெண்டு பேருக்கும் பாலம் போடுற ஒரு காதல். இவங்கள சுத்தி சிங்கம்புலி, சூரி, சிங்கமுத்து, வெண்ணிற ஆடை மூர்த்தின்னு சிரிக்க சிரிக்க நகரும் திரைக்கதை, படத்தை செம ஸ்பீடா கொண்டு போகும். இமானோட இசை, சூரஜ் ஒளிப்பதிவு, காமெடி மணக்கும் ராஜசேகரோட வசனம்னு மொத்த டெக்னீஷியன்களோட ஒத்துழைப்புடனும் ‘தேசிங்கு ராஜா’ கம்பீரமா உருவாகியிருக்கான்.’’



‘‘கதைக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி தெரியுதே?’’
‘‘சின்னதா ஒரு தொடர்பு இருக்கு. குதிரையில போய் தேசிங்குராஜா ஒரு பொண்ண தூக்கிட்டு வர்ற மாதிரி, ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் பிந்துமாதவியை நம்ம ஹீரோ எப்படி வெளில கொண்டுட்டு வர்றார்னு கதையில் ஒரு லைன் இருக்கு. என்னோட சொந்த ஊரான கயத்தூர், திட்டச்சேரின்னு தஞ்சாவூரை சுற்றியுள்ள கிராமங்களில்தான் மொத்த ஷூட்டிங்கையும் நடத்தியிருக்கேன்.’’
‘‘ ‘தீபாவளி’ படத்துக்கு பிறகு கேப் விழுந்ததற்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தராதது தான் காரணமா?’’

‘‘அது தோல்விப் படம்னு யார் சொன்னது. அந்தப் படத்தை வாங்கின விநியோகஸ்தர்கள்கிட்ட கேளுங்க... அது சம்பாதிச்சு கொடுத்ததைச் சொல்வாங்க. அடுத்ததா காவிரி டெல்டா விவசாயிகளின் பிரச்னையை மையா வச்சு ஒரு கதையை உருவாக்கினேன். ஒரு கட்டத்தில் அது கம்யூனிசம் பேசுற மாதிரி இருந்தது. இன்னொரு கட்டத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் மாதிரி போச்சு. பிரசார நெடியோ, அரசியலோ தலை காட்டினா தேவையில்லாத பிரச்னையில் மாட்டிக்குவோமேன்னு நினைச்சு, அந்தக் கதையை அப்படியே வச்சிட்டு வேற ரெண்டு கதைகளை எழுதினேன். இந்தக் குழப்பத்துலயே ரெண்டு வருஷம் வீணா போச்சு.’’



‘‘விஜய், அஜித்துடன் மறுபடியும் கை கோர்க்கும் ஆசை இல்லையா?’’
‘‘நிச்சயமா இருக்கு. சின்சியாரிட்டி, உண்மையான உழைப்பு இருந்தா கண்டிப்பா சினிமா நம்மைக் காப்பாற்றும். உண்மையா இல்லாட்டி, சினிமா நம்மைத் தூக்கி வெளில போட்டிடும். எங்கிட்ட உண்மை இருக்கு. விஜய், அஜித்தை வச்சு நான் படம் பண்றப்ப அவங்க ஒரு ஸ்டேஜில் இருந்தாங்க. ஆனா ரெண்டு பேருமே இப்போ வேற வேற உயரத்துக்குப் போயிட்டாங்க. ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரண்டு சிகரங்கள் அஜித்தும், விஜய்யும்தான். அவங்களோட கைகோர்க்க இன்னொரு சந்தர்ப்பம் அமையும்னு நம்புறேன்!’’
- அமலன்