கர்ணனின் கவசம்





‘‘என்னது... தஞ்சாவூருக்கா..?’’ - ஆனந்த் குரலில் குழப்பம் கலந்த அதிர்ச்சி நிரம்பி வழிந்தது.
‘‘எனக்கு ஒண்ணுமே புரியலை ஃபாஸ்ட். பொக்கிஷத்தோட வரைபட ஆரம்பம் மதுரை மீனாட்சியம்மன் கோயில்னு சொன்னீங்க. நாமளும் கோயில் முழுக்க சுத்திட்டோம். ஆனா, எந்த சிலையும் வித்தியாசமா இருக்கிற மாதிரி தெரியலை. அந்தளவுக்கு ரகசியக் குறியீட்டை மறைச்சு வச்சிருக்காங்க. அப்படியிருக்கிறப்ப நம்மோட வேலை, அந்த மர்மத்தை தெரிஞ்சுக்கறதாதானே இருக்கணும்? அதுக்கு நாம மயிலாடிக்குப் போய் பரமேஸ்வர பெருந்தச்சனைத்தானே சந்திக்கணும்? அதை விட்டுட்டு தஞ்சாவூருக்கு ஏன் போகணும்?’’

அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய ஆனந்தை சலனமில்லாமல் பார்த்தான் ஃபாஸ்ட். இவன் நிறைய யோசிக்கிறான். அது ஆபத்து. ஏராளமான வினாக்களை எழுப்புகிறான். அது சிக்கல். எண்ணற்ற திசைகளில் புத்தி வேலை செய்கிறது. அது பிரச்னை. இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் நம்மை சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவான்.
‘‘இங்க பார் ஆனந்த், பரமேஸ்வர பெருந்தச்சன் இப்ப மயிலாடில இல்லை. வெளியூர் போயிருக்கார். ஊர் திரும்ப இரண்டு, மூணு நாளாகும். இப்பத்தான் தகவல் வந்தது. அவர் வர்ற வரைக்கும் நாம என்ன பண்றது? கையை கட்டிட்டு சும்மா உட்காரலாமா?’’
‘‘வேண்டாம். அவர் எங்க இருக்காரோ, அங்க போவோம்...’’

‘‘போயி..? அவரையும் கூட்டிட்டு கோயில் கோயிலா சுத்தலாம்ங்கறீயா?’’
‘‘ஆமா. அப்பத்தான மர்மத்தை உடைக்க முடியும்?’’
‘‘சைல்டிஷா பிஹேவ் பண்ணாத ஆனந்த். நம்மகிட்ட எல்லா ரகசியத்தையும் கொட்டணும்னு பரமேஸ்வர பெருந்தச்சன் காத்துக்கிட்டு இல்லை. முதல்ல அதைப் புரிஞ்சுக்க. பல்லாயிரம் வருஷங்களா எந்த மன்னருக்கும், அரசுக்கும், மக்களுக்கும் தெரியாம பொக்கிஷத்தை ஒரு குழு பாதுகாத்துட்டு வருது. சொல்லப் போனா இப்படியொரு அமைப்பு இயங்கற விஷயமே உலகத்துக்கு தெரியாது. அப்படின்னா அவங்க எவ்வளவு கட்டுக்கோப்பா இருக்கணும்? அவங்களோட நெட்வொர்க் எவ்வளவு பலமா இருக்கணும்? அந்தக் குழுவுல எத்தனை பேர் இருக்காங்க... எங்க வாழ்றாங்க... எப்படி ஒருத்தரையொருத்தர் தொடர்பு கொள்றாங்க... எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரியுமா... இவங்களை எல்லாம் யார் ஆர்கனைஸ் பண்ணறாங்க... எல்லாரும் எப்ப, எங்க சந்திக்கிறாங்க... ஒருத்தர் செத்துட்டா அந்த இடத்துக்கு இன்னொருத்தர் எப்படி வருவாரு... வாரிசு அடிப்படைலயா, இல்லன்னா செலக்ஷன் பேஸிஸ்லயா? இந்தக் குழுவுக்கு யார் தலைவர்... எதுவுமே நமக்குத் தெரியாது...’’
ஒவ்வொரு குண்டாக ஃபாஸ்ட் வீச வீச, ஆனந்த் நிலைகுலைந்து போனான்.
‘‘பரமேஸ்வர பெருந்தச்சன் இந்தக் குழுவுல ஒருத்தர். இது மட்டும்தான் கிடைச்சிருக்கிற தகவல். ஒருவேளை நம்மகிட்ட அவர் பேச மறுத்துட்டாருன்னா? ஸோ, அந்தக் குழுவைச் சேர்ந்த மத்தவங்களையும் கண்டுபிடிப்போம். அதுக்கு தஞ்சாவூர் மாதிரி ஃபேமஸான கோயில்களுக்கு தனியா போக வேண்டியது அவசியம். ஏன்னா, ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி பெரிய கோயில் கட்டப்பட்டிருக்கு. நிச்சயம் பல பெருந்தச்சர்கள் மேற்பார்வைல தான் அந்தக் கோயில் உருவாகியிருக்கணும். அவங்கள்ல ஒருத்தர், பொக்கிஷத்தை பாதுகாக்கிற குழுவை சேர்ந்தவரா இருக்கலாம். சில அடையாளங்களை அங்க பதிச்சிருக்கலாம். நம்ம கண்களுக்கு ஒருவேளை அவை தட்டுப்படலாம்...’’
‘‘மை காட்... இவ்வளவு விஷயங்கள் இருக்கா?’’
‘‘பின்ன... பொக்கிஷத்தை அடையறது, அது குறித்து புத்தகம் எழுதறதுன்னா சும்மாவா? எகிப்துல இருக்கிற பிரமிடுகள் பத்திக் கேள்விப்பட்டிருக்கியா? கிட்டத்தட்ட மூவாயிரம், நான்காயிரம் வருஷங்களுக்கு முன்னாடி கட்டப்பட்ட அதிசயம் அது. ஆனா, ஒவ்வொரு பிரமிடும் தனக்குள்ள பல ரகசியங்களை புதைச்சு வைச்சிருக்கு. இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் யாராலயும் அந்த மர்மங்களை தெரிஞ்சுக்க முடியலை. இதை எதுக்கு சொல்றேன் தெரியுமா?’’

‘‘.......’’
‘‘தமிழக கோயில் கோபுரங்களும் ஒருவகைல பிரமிடு மாதிரி தான். அமைப்புல கொஞ்சம் வித்தியாசம் இருந்தாலும், ரகசியங்களைப் பொறுத்தவரை இரண்டும் ஒண்ணுதான். இதை உணர்த்தத்தான் மகா மேரு மாதிரியான உருவத்தை பயன்படுத்தறாங்க...’’
‘‘வாங்க...’’ - முக மலர்ச்சியுடன் ருத்ரனை ஏறிட்டாள் விஜி. விஜயலட்சுமி. ‘‘நீங்க வருவீங்கன்னு ஆயி சொன்னாங்க...’’
மூன்று முறை வலப்பக்கமாகவும், மூன்று முறை இடப்பக்கமாகவும் ஆரத்தி எடுத்தாள். ‘‘வேலைக்காரங்களுக்கு இன்னிக்கி லீவ் கொடுத்திட்டேன். வீட்ல யாருமில்லை. நீங்க நேரா பாத்ரூமுக்கு போங்க. இதோ நான் வர்றேன்...’’ என்றபடி கற்பூர ஆரத்தியை தெருவில் கொட்டினாள். உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது. தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை.
வலது காலை எடுத்து வைத்து அந்த பங்களாவுக்குள் நுழைந்தான் ருத்ரன். அது அவன் வீடு. இருபத்தைந்து வயது வரை அவன் வாழ்ந்த இல்லம். பிறந்தது, வளர்ந்தது, திருமணம் செய்து கொண்டது, குடும்பம் நடத்தியது எல்லாம் தஞ்சாவூரில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த அதே பங்களாவில்தான்.
ஆயி சொல்லுக்கு கட்டுப்பட்டு உடுத்திய பேன்ட் சட்டையுடன் அவன் வெளியேறியபோது எப்படியிருந்ததோ, அப்படியேதான் இப்போதும் பளிச்சென்று வீடு இருந்தது. விஜயலட்சுமியின் கைவண்ணம். மனைவியாக அவள் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஹாலில் தென்பட்ட படிக்கட்டு வழியாக மாடிக்கு வந்தான். பாத் டப்புடன் கூடிய குளியலறை விசாலமாக டைல்ஸுடன் பளபளத்தது. ஆளுயர நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை பார்த்தான். பரட்டைத் தலை. தாடி. அழுக்கு பேன்ட். கிரீஸ் படிந்த சட்டை.
கண்ணாடிக்கு முன்பாக தரையில் பெரிதாக பாலிதீன் கவர் விரிக்கப்பட்டிருந்தது. அதன் மீது மர ஸ்டூல். திறந்திருந்த கப்போர்டில் தெரிந்த கத்தரிக்கோலையும், ஷேவிங் செட்டையும் பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு வந்தது.

‘‘எல்லாம் தயாரா வச்சிருக்க போலிருக்கு...’’
‘‘ஆமா. பழைய உருவத்துக்கு உங்களை மாற்றச் சொல்லி ஆயியோட உத்தரவு...’’ என்றபடி ஷாம்பு போட்டு ருத்ரனின் தலையை அலசினாள். டிரையரால் தலையைக் காய வைத்தபின், ஹேர்கட் செய்ய ஆரம்பித்தாள். பிறகு ஷேவிங். அவளது ஒவ்வொரு செய்கையிலும் அன்பு நிரம்பி வழிந்ததை ருத்ரனால் உணர முடிந்தது.
‘‘புது டிரஸ் இங்க இருக்கு. குளிச்சுட்டு வாங்க. நான் பூஜைக்கு ஏற்பாடு பண்ணறேன்...’’
அவன் நிதானமாகக் குளித்து முடித்தான். பட்டு வேட்டி, வெள்ளை சட்டையில் அவன் உருவமே மாறியிருந்தது. மீசை, தாடி மழிக்கப்பட்ட மழுமழு கன்னங்கள். வெயிலுக்கு ஏற்ற ஷார்ட் கட் ஹேர் ஸ்டைல். மாடியிலிருந்து இறங்கி பூஜையறைக்கு வந்தான். ரோஜாவும், மல்லிகையும் கலந்த மணம் அவனை வரவேற்றது. சாம்பிராணியும், ஊதுவத்தியும் நாசியைக் கடந்து இதயத்தை நிரப்பியது. நடுநாயகமாக வீற்றிருந்த மூன்றடி உயர வெள்ளித் தேரையும், அதனுள் சின்னதாக இருந்த மகா மேருவையும் பார்க்கப் பார்க்க அவன் நெஞ்சம் நெகிழ்ந்தது. கண்கள் பனித்தன.
முகம் நிறைய மலர்ச்சியுடன் சாமந்திப் பூக்கூடையை அவனிடம் கொடுத்தாள் விஜி. அதை வாங்கியவன், நேராக வெள்ளித் தேருக்கு அருகிலிருந்த மரப்பெட்டியின் அருகில் வந்தான். வயலின் வைக்கும் பெட்டி போல் இருந்தது. திறந்தான்.
உள்ளே வாள். பிற்கால சோழ சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த விஜயாலய சோழன் பயன்படுத்திய அதே வாள். அதன் பிடியில் பூக்களைக் கொட்டினான். தாரா தேவியின் காயத்ரியை நூற்றியெட்டு முறை உச்சரித்தான். கற்பூரம் காண்பித்தான். கணவனும் மனைவியுமாக தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள்.
‘‘போகலாமா?’’

‘‘ம்... மேருவை எடுத்துக்குங்க...’’
வெள்ளித் தேரை நோக்கிக் குனிந்து அதனுள் இருந்த மகா மேருவை கையில் எடுத்துக் கொண்டான். உள்ளங்கைக்குள் அடக்கமாக அது புதைந்தது. தஞ்சையில் அவன் செய்ய இருக்கும் காரியத்துக்கு இந்த மகா மேருதான் உதவப் போகிறது. காரணம், அது சக்தியின் வடிவம் மட்டுமல்ல. பூட்டைத் திறப்பதற்கான சாவியும் அதுவேதான்.
‘‘வெல்கம் டூ ‘மகா மேரு’ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தாரா...’’ - புன்னகையுடன் வரவேற்றார் சட்டர்ஜி. ஹெச்.ஆர் மேனேஜர்.
‘‘தாங்க் யூ...’’ - மலர்ந்த தாரா கைகுலுக்கினாள்.
‘‘இன்னிலேந்து நீங்களும் ‘மகா மேரு’வோட அங்கத்தினரா ஆகறீங்க...’’ என்றபடி அக்ரிமென்ட்டை நீட்டினார். படித்துப் பார்த்தாள் தாரா. மின்னஞ்சலில் ஏற்கனவே பேசப்பட்ட விவரங்கள்தான். கையெழுத்திட்டு அவரிடமே கொடுத்தாள்.
‘‘சேர்மன் அமெரிக்காவுல இருக்கார். எம்.டி டெல்லில. ஸோ, ஃபார்மல் மீட்டிங் அவங்க வந்த பிறகு வச்சுக்கலாம்...’’
‘‘நோ பிராப்ளம். என் வேலையை நான் பார்க்க ஆரம்பிச்சிடறேன்...’’
‘‘தட்ஸ் குட். மிஸ்டர் பரமேஸ்வரன் உங்களை நல்லாவே எடை போட்டிருக்கார்...’’
‘‘பரமேஸ்வரனா?’’
‘‘என்ன தெரியாத மாதிரி கேட்கறீங்க? மிஸ்டர் பரமேஸ்வரன். ஓ... முழுப் பேர் சொன்னாதான் தெரியுமில்லையா? பரமேஸ்வர பெருந்தச்சன். மயிலாடியைச் சேர்ந்தவர்... அவர்தான் உங்க பயோடேட்டாவை கொடுத்ததே...’’

செருப்பில் துளை விழும் அளவுக்கு தன் கால் கட்டை விரலை அழுத்தி தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் தாரா.
‘‘பொதுவா நம்ம சேர்மன் சிபாரிசை விரும்பாதவர். ஆனா, மிஸ்டர் பரமேஸ்வரனோட ரெகமண்டேஷனை அவரால தட்ட முடியலை. அவரோட ஃபிரெண்ட், பிலாசஃபர், கைட் எல்லாமே அவர்தானே? ஸோ, யூ ஆர் அப்பாயின்டெட்...’’ - சிரித்தார் சட்டர்ஜி.
இவர் சொல்வதைப் பார்த்தால் பரமேஸ்வர பெருந்தச்சன் நம் அப்பா இல்லை போல் இருக்கிறதே...
மண்டைக்குள் பறந்த நட்சத்திரங்களை செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தாரா.
‘‘வழக்கம்போல நேத்து வந்தவர், இன்னிக்கி நீங்க ஜாயின் பண்ற விவரத்தை சொல்லிட்டு, இந்த கிஃப்ட்டை உங்ககிட்ட தரச் சொன்னார்...’’ என்றபடி பார்சலை நீட்டினார்.
வைத்த கண் வாங்காமல் அந்த பார்சலை பார்த்தாள் தாரா. செப்பேடுகளைச் சுமந்து வந்த கவர் எப்படி இருந்ததோ, அதே போல்  பார்சலும் இருந்தது. நடுக்கத்தை மறைத்தபடி அதை வாங்கிப் பிரித்தாள். சின்ன அட்டைப் பெட்டி. அதனுள் பஞ்சு. பஞ்சுக்குள் ஸ்படிகத்தாலான மேரு.
‘‘அட, நம்ம கன்சர்ன் சிம்பள். இதுமாதிரி மிஸ்டர் பரமேஸ்வரன் வேற யாருக்குமே கொடுத்ததில்லை...’’ - அதை தன் உள்ளங்கையின் மீது வைத்து அழகு பார்த்தார் சட்டர்ஜி. ‘‘சின்னதா இருந்தாலும் க்யூட். அசப்புல எகிப்து பிரமிட் மாதிரி இருந்தாலும் மகா மேரு சம்திங் ஸ்பெஷல். ஓகே தாரா. யூ கேரி ஆன். நாளை மார்னிங் ஃப்ளைட் இருக்கு. ஒரிசாவுல நீங்க டிசைன் பண்ணப் போற ஏரியாவை ஒரு பார்வை பார்த்துட்டா பிளானிங் ஈசியா இருக்கும்!’’  
அட்டெண்டர் வழிகாட்ட தன் கேபினுக்கு வந்தவள், உதட்டைக் கடித்தபடி ரிவால்விங் சேரில் அமர்ந்தாள்.
யார் இந்த பரமேஸ்வர பெருந்தச்சன்? அவருக்கும் தனக்கும் என்ன உறவு? அவர் ஏன் இந்த நிறுவனத்துக்கு தன்னை சிபாரிசு செய்ய வேண்டும்? செப்பேட்டையும், இப்போது மகா மேருவையும் அனுப்ப வேண்டும்?

கைப்பேசி ஒலித்தது. எடுத்தாள்.
‘‘ஒரிசாவுக்கு போகும்போது மறக்காம மகாமேருவைக் கொண்டு போ. அப்பத்தான் பூட்டைத் திறக்க முடியும்...’’
‘‘ஹலோ, நீங்க யாருங்க?’’
‘‘பரமேஸ்வர பெருந்தச்சன்...’’  
அந்த இனோவா மதுரை விமான நிலைய வாசலில் வந்து நின்றது. கோட், சூட் அணிந்த இளைஞன் ஓடி வந்து கதவைத் திறக்க, ராஜமாதா போல் தோற்றமளித்த அந்த மூதாட்டி இறங்கினாள். வயதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. அப்படி ஒரு கம்பீரத் தோற்றம். பச்சை நிற கைத்தறிப் புடவை. கழுத்திலும், காதிலும், மூக்கிலும் வைரம். தலையில் கொண்டை.
‘‘எல்லா ஏற்பாடும் செய்தாச்சா மனோகர்?’’
‘‘யெஸ் மேம்...’’   

இருவரும் விமானநிலையத்தினுள் நுழைந்தார்கள். சகல வசதிகளுடன் கூடிய தனி விமானம் அவர்களுக்காகக் காத்திருந்தது. ஏறினார்கள். பவ்யமாக ‘ஃபோர்ப்ஸ்’ இதழை எடுத்து அந்த மூதாட்டியிடம் நீட்டினான் மனோகர். அதில், தெற்காசியாவின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவராக அந்த மூதாட்டியும் குறிப்பிடப்பட்டிருந்தாள். அலட்சியமாக அதைப் பார்த்தவள், விமானத்தில் இருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். அவளைத் தனியாக விட்டுவிட்டு விமானத்தின் உள்ளேயே இருந்த பக்கத்து அறைக்கு மனோகர் சென்றான். ஒரிசாவை நோக்கி விமானம் டேக் ஆஃப் ஆனது. ஜன்னல் வழியே தஞ்சை பெரிய கோயில் இருக்கும் திசையை நோக்கினாள் அந்த மூதாட்டி.
அவள் எதிர்பார்த்தது போலவே அப்போது பிரகதீஸ்வரர் ஆலயத்தின் கோபுரத்தில் இருந்த ‘அந்த’ சிற்பத்தைத்தான், சூ யென் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தக் கோயிலில் எப்படி அந்த சிற்பம் வந்தது, அதை யார், ஏன் செதுக்கினார்கள் என்றுதான் ஆராயத் தொடங்கினான்.
ஏனெனில் கோயில் எழுப்பப்பட்ட காலத்தில் அதுபோன்ற உடைகளை உலகில் யாருமே அணிந்ததில்லை. பிரமிட் வடிவ கோபுரத்தில் இருந்த அந்த உருவம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் ஆங்கிலேயனின் சிற்பம்.
முக்கியமான அடையாளத்தைப் பார்த்துவிட்டான். அத்துடன் கோயிலில் வரையப்பட்ட புத்தரின் ஓவியத்தையும் தரிசித்துவிட்டால், பொக்கிஷம் இருக்கும் இடத்துக்கான வரைபடத்தை சுலபமாகக் கண்டு கொள்வான்.
இதை முறியடிப்பதற்கான திட்டத்தை விமானத்தில் பறந்தபடியே தீட்டத் தொடங்கினாள் அந்த மூதாட்டி.
அவள் வேறு யாருமல்ல. ஆயிதான். நள்ளிரவில் மீனாட்சியம்மன் கோயில் முன்னால் ருத்ரனின் தலையை உலுக்கியவளேதான்.
(தொடரும்...)