கவிதைக்காரர்கள் வீதி





வலி
பாழடைந்த கோயில்
கடவுளும்
உணர்ந்தேயிருக்கிறார்
புறக்கணித்தலின் வலி!
- பெ.பாண்டியன்,காரைக்குடி.

ஏக்கம்
எத்தனையோ
மீன்களைப் பிடித்தும்
எதையும் சாப்பிடாத
ஏக்கத்தில் தவிக்கும்
தூண்டில்!
- வெ.பாலாஜி,சென்னை-93.

தவிப்பு
உட்கார மரமின்றி
உக்கிரமாய்
ஊரைச் சுற்றுகிறது
சூரியன்
- நா.கி.பிரசாத், கோவை.
குறையாதது
எத்தனை புதிய
பொம்மைகள் வாங்கினாலும்
பழைய பொம்மைகள் மீதுள்ள
பாசம் குறையாது
குழந்தைகளுக்கு!
- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

அழகு
அப்படியொன்றும்
அழகாகத் தெரியவில்லை,
குழந்தை பிடித்துவந்த
வண்ணத்துப்பூச்சி...
அவள் முகத்தையே
பார்த்துப் பழகிவிட்ட
பொம்மைக்கு!
- துங்கை செல்வா, பெரம்பலூர்.

தொலைதல்
கோயில் திருவிழாவில்
காணாமல் போன
குழந்தையை
கைபிடித்துக் கூட்டத்தில்
கூட்டிக் கொண்டு திரிகிறார்
கடவுள்.
- வி.பாரதிராஜா, முகவை.