பவர்கட் பிரச்னைக்கு டாட்டா!





மீண்டும் மிரட்டுகிறது மின்வெட்டு. கோடை நெருங்கும் நேரத்தில் மின் உற்பத்தி தாறுமாறாகக் குறைய... பல மணி நேர பவர்கட்டால் ஸ்தம்பித்து நிற்கின்றன தொழிற்சாலைகள். தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தவித்துப் போயிருக்கிறார்கள். இதனால் எழும் எரிச்சலே, குடும்பப் பிரச்னைகள் முதல் தெருமுனைச் சண்டைகள், டிராஃபிக் வயலன்ஸ் வரை அனைத்துக்கும் காரணமாகிறது. மின்வெட்டை ஒரு சீரியஸான சமூகப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு, அதற்காக உழைத்து, தீர்வும் கண்டிருக்கிறார் அனிதா சிரோன்மணி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியையான இவர், வெறும் சமையலறைக் கழிவுகளைப் பயன்படுத்தி அமைத்திருக்கும் மின்சாரத் தயாரிப்பு செட்டப் மூலம் கடந்த 6 மாதங்களாக 20 தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன!

‘‘மின்சாரத் தட்டுப்பாட்டால இன்னிக்கு விவசாயிகள் கலங்குறாங்க... உற்பத்தியாளர்கள் திணறுறாங்க... வருமானம் பாதிச்சு தொழிலாளர்கள் கொதிக்கறாங்க... ஆனா, இப்படி அத்தியாவசியமா தேவைப்படுற மின்சாரத்தை தினம் தினம் நாம கூட்டிப் பெருக்கி குப்பையில கொட்டுறோம்ங்கிறதுதான் உண்மை’’ - முகத்தில் அறைகிறது அனிதா சொல்லும் உண்மை. மக்களோடு மக்களாகி களப்பணியில் கரைந்திருக்கும் இவரது தோற்றம் படு சிம்பிள். கைகளில் தவழும் லேப்டாப் மட்டும் இல்லையென்றால் ஒரு பேராசிரியையாக இவரை அடையாளம் காண்பது ரொம்பக் கஷ்டம்!
‘‘பல்கலைக்கழகத்தில் பேராசிரியை ஆகி 23 வருஷம் ஆச்சு. 30 வருஷத்துக்கு முன்னாடி நாம படிச்ச அறிவியலைத் தாண்டி, இன்னிக்கு உலகம் எவ்வளவோ வளர்ந்துடுச்சு. அந்த வளர்ச்சி நம்ம சமூகத்தை எட்டியிருக்கான்னு யோசிப்பேன். எட்டலைன்னா நான் முயற்சி எடுத்து அந்தத் தொழில்நுட்பங்களை இங்கே எடுத்துட்டு வரணும்... அதன் மூலமா மக்களுக்கு உதவணும்னு நினைப்பேன். நான் மட்டுமில்லாம, என் கணவரும் பையனும் கூட இதே மாதிரி ஆராய்ச்சி எண்ணம் கொண்டவங்களா இருந்தது என் பாக்கியம். வளர்ந்து வர்ற நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மக்களின் பொதுப் பிரச்னைகளுக்கும், நோய்களுக்கும் தீர்வு காண்றதைப் பற்றித்தான் நாங்க மூணு பேருமே ஆராய்ச்சி பண்றோம்’’ என்கிற அனிதா, ‘என்ன செய்கிறோம் என்பதை விட அதை எப்படிச் செய்கிறோம் என்பதில்தான் நானோ தொழில்நுட்பம் உள்ளது’ என்கிறார்.



‘‘சமையலறைக் கழிவுகள்ல இருந்து பயோகேஸ் உற்பத்தி பண்ற கான்செப்ட் காலம் காலமா இருக்குறது தான். ஆனா, அதை எவ்வளவுக்கு எவ்வளவு எளிமைப்படுத்த முடியுமோ, அதை நான் செய்திருக்கேன். அதுதான் இதுல புதுசு. வெறும் பிளாஸ்டிக் டிரம்கள்ல கழிவுகளை சேகரிச்சு, நொதிக்க வச்சு, அதுல இருந்து வெளிப்படுற மீத்தேன் வாயுவை எரிபொருளா சேமிக்கிறோம். இந்த பயோ கேஸை ஜெனரேட்டர்ல கனெக்ட் பண்ணி ஓட விட்டா மின்சாரம் கிடைச்சுடும். அவ்வளவுதான் விஷயம். இதுக்கு ஆகிற செலவு ரொம்ப ரொம்ப கம்மி’’ என்கிற அனிதா, இந்தப் ப்ராஜெக்ட்டை நிஜமாக்கிக் காட்டியிருப்பது செக்காணூரணி கிராமத்தில். அந்தப் பக்கம் அதிகம் கிடைக்கிற கோழிக்கழிவுகளைப் பயன்படுத்தி பயோகேஸ் உற்பத்தி செய்ததால், அது அங்கே 20 தெரு விளக்குகளை எரிய வைத்துக் கொண்டிருக்கிறது. இது தவிர, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், கேம்ப் அலுவலகத்திலும் கூட குதிரை சாணத்தைக் கொண்டு பயோ கேஸ் செட்டப்பை அமைத்திருக்கிறார் இவர்.

‘‘ஒவ்வொரு வீட்டுலயும் இந்த மாதிரி பயோகேஸ் மின்சார உற்பத்தி செஞ்சா குப்பையைக் கொட்டவேண்டிய அவசியம் இருக்காது. இதுல பயன்படுற கழிவுகள் கடைசியா நல்ல இயற்கை உரமா மாறிடுறதால மின்சாரம், சமையல் எரிவாயு, உரம்னு மூணு தேவைகள் நிறைவேறும்’’ - ஆவலோடு தன் ஆக்கபூர்வமான கனவுகளை விவரிக்கும் அனிதா, நானோ தொழில் நுட்பம் கொண்டு மேலும் சில சாதனைகளையும் செய்திருக்கிறார்.



‘‘நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைஞ்ச செலவில் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும். வெறிநாய்க் கடிக்கும் கால்நடைகளைத் தாக்குற காணை நோய்க்கும் கூட இதன் மூலம் மருந்து கண்டுபிடிச்சிருக்கேன். சீக்கிரமே அது பயன்பாட்டுக்கும் வரப் போகுது. 10 ஆயிரம் லிட்டர் சாக்கடைத் தண்ணீர்ல ஒரு லிட்டர் நானோ திரவத்தைத் தெளிச்சுட்டா போதும்... ரெண்டே நிமிஷத்துல சாக்கடைத் தண்ணீர் சுத்தமாகிடும். இந்தத் தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். வீடுகள்ல தோட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டுல இதை வெற்றி கரமா செயல்படுத்தியிருக்கோம். சீக்கிரமே உயர் நீதிமன்ற கேன்டீன்லயும் செயல்படுத்தப் போறோம். பிளாஸ்டிக் கழிவுகளையும் மறு சுழற்சி செய்து எரிவாயு எடுக்கலாம். ஆனா, இந்த எரிவாயுவை நம்ம எல்.பி.ஜி ஸ்டவ்வில் பயன்படுத்தும்போது சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கு. இந்தத் திட்டத்தைப் பெரிய அளவில் செயல்படுத்தினால் வேலையில்லா பட்டதாரிகள் நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’’ - விஞ்ஞானக் கரம் கொண்டு ஜனங்களின் எல்லா துயரையும் துடைக்கும் வேகம் தெரிகிறது அனிதா சிரோன்மணியின் வார்த்தைகளில்.
நாளையைப் பற்றிய நம்பிக்கை பிறக்கிறது நமக்கு!
- ஆர்.ஜெயலெட்சுமி
படங்கள்: ஜி.டி.மணி