டோனி போல வருமா?





ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வென்றிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு புதிய சாதனை இது. ‘டோனி போல வருமா... அவர்தான் சிறந்த கேப்டன்’ என மீடியாவும், கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு டோனியின் நிலை பரிதாபமாக இருந்தது. அப்போது இதே வாய்கள் சொன்னது என்ன?

ஆஸ்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் டெஸ்ட் தொடரை பரிதாபமாக இழந்து, இந்தியாவிலும் இங்கிலாந்திடம் உதை வாங்கியது அணி. 2-1 என்ற கணக்கில் இந்தியாவில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வென்றபோது எல்லோரும் கொந்தளித்தார்கள். ‘‘டோனியின் அதிர்ஷ்டப்பை காலியாகி விட்டது’’ என கிண்டல் செய்தார்கள். ‘‘கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன் என்று சொல்வது சுலபமாக இருக்கலாம். ஆனால் நான் என் பொறுப்புகளிலிருந்து பின்வாங்க மாட்டேன்’’ என்றார் டோனி. ‘‘இது என் தலைமைப் பதவிக்கு விடப்பட்ட சவால். எல்லாம் நன்றாகப் போகும்போது தலைவனாக இருப்பது ஈஸி. சொல்லப்போனால் அப்போது தலைவனே தேவையில்லை. தோல்வியில்தான் தலைவன் தேவைப்படுகிறான்’’ என்றார் அவர்.
சில பிரபலங்கள் அப்போது இப்படிச் சொன்னார்கள்...

மொகிந்தர் அமர்நாத்: ‘கேப்டன் பதவியில் நீடிப்பேன்’ என்று சொல்ல டோனி யார்? இந்திய அணியில் இருக்கவே அவருக்குத் தகுதியில்லை. அவரைவிட சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். டோனி கேப்டனாக இருப்பதால், அவர்களின் வாய்ப்பு பறிபோகிறது. திரும்பத் திரும்ப தோற்கும் ஒரு நபரை எதற்கு கேப்டனாக வைத்திருக்க வேண்டும்?
பிஷன்சிங் பேடி: தனது ஈகோவை திருப்திப்படுத்துவதற்காக, இந்திய கிரிக்கெட்டின் தரத்தை டோனி படுகுழியில் தள்ளிவிட்டார். அணியில் தான் தவிர்க்க முடியாதவர் என நினைத்துக் கொள்கிறார். அதனால் கிறுக்குத்தனமாக எதை எதையோ செய்கிறார். அவரை முதலில் தூக்க வேண்டும்.

கவாஸ்கர்: இந்திய அணியின் எதிர்கால நன்மைக்காக டோனியை டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும். விராட் கோஹ்லியை கேப்டன் ஆக்க வேண்டும்.
ஸ்ரீகாந்த்: கேப்டனாக டோனி பெரும் குழப்பத்தில் இருக்கிறார். நிலைமை கட்டுக்குள் இல்லாதபோது, என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டு விடுகிறார்.
இப்போது எல்லோரும் இதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டார்கள். டோனி இப்போது என்ன சொல்கிறார்? ‘‘அடுத்த தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. அதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இப்போது நாங்கள் பெற்ற சாதனை வெற்றியை இந்த இடைவெளியில் மறந்து விட்டு விமர்சனம் செய்வார்கள்’’ என்கிறார்.
இந்தியாவில் 50 கோடிப் பேர் கிரிக்கெட் பார்க்கிறார்கள் என்றால், அத்தனை பேரும் விமர்சகர்களாக இருக்கிறார்கள்; ரசிகனாக இருக்க யாரும் விரும்புவதில்லை. நூறு கோடிப் பேர் சினிமா பார்க்கிறார்கள் என்றால், அத்தனை பேரும் விமர்சகர்கள்; யாருமே ரசிகனாக சினிமா பார்ப்பதில்லை. இத்தனை விமர்சகர்கள் இருக்கும் தேசத்தில் ஹீரோக்கள் எந்த நிமிடத்திலும் ‘ஜீரோ’ ஆகலாம் என்ற விதிக்கு டோனியும் உட்பட்டவரே!
- அகஸ்டஸ்