குட்டிச்சுவர் சிந்தனைகள் : ஆல்தோட்ட பூபதி





இந்த மேட்டரை ‘தேவர் மகன்’ பட சிவாஜி சார் குரலில் நீங்கள் படித்தால் கம்பெனி பொறுப்பல்ல...
‘‘காட்டுமிராண்டி கூட்டமா? என்னப்பு சொல்ற நீ? தமிழ்நாடு முழுக்க நடிகைங்களுக்கு கோயில் கட்டுறப்போ, செங்கல்லையும் ஊதுவத்தி எலுமிச்சம்பழத்தையும் எடுத்துட்டு போயி நின்னவனுங்க யாரு? பூரா நம்ம பயலுகதேன். அட, இந்த பன்ச் பேசி டிஞ்ச் ஆகிற நடிகர்கள் கட்அவுட்களுக்கு பாலபிஷேகம் பண்ண, வீட்டுல தயிருக்கு பொறை ஊத்தின பாலைக் கொண்டு போயி மொத வரிசையில நின்னவனுங்க யாரு? பூரா நம்ம பயலுகதேன். அய்யா... இதா, இந்தா இருக்கே
யு(ச)த்தமூர்த்தி பவன்... அதுல கோஷ்டி சண்டை போட்டு கிழிஞ்சு போன வேட்டிய உடைஞ்ச மண்டைக்கு கட்டிக்கிட்டு அண்டிராயர் தெரிய ஓடி வாரது யாரு? பூரா நம்ம பயலுகதேன். ‘குவாட்டர்ல ஒரு கட்டிங்கும், கால் பிளேட் காக்கா பிரியாணியும் தரோம். வந்து கோஷம் போடுன்னா எம்ப்டி வயிறோட எக்கோ அடிக்கப் போறது யாரு? நம்ம பயலுகதேன். ஹ்ஹா... இந்தக் கூட்டத்தைப் பார்த்து காட்டுமிராண்டி கூட்டம்னு சொல்லிட்டியேப்பு, அப்போ உங்கப்பன் கூட காட்டுமிராண்டிதேன்.

1990 வரை இந்தியாவில் இருந்த பொருளாதாரப் பிரிவுகள்:
உயர்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம், பின்தங்கிய வர்க்கம்.
1990 - 2005 வரை:
உயர்தர வர்க்கம், மேல் நடுத்தர வர்க்கம், மத்திய நடுத்தர வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் பின்தங்கிய வர்க்கம்.
இப்போது:
உயர்தர வர்க்கம், மேல் நடுத்தர வர்க்கம், உயர் மத்திய நடுத்தர வர்க்கம், நடு மத்திய நடுத்தர வர்க்கம், கீழ் மத்திய நடுத்தர வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் பின்தங்கிய வர்க்கம்.
அரசு சொல்றது உங்களுக்கு ஏதாவது புரியுதா? விலைவாசி எகிறும்போது இன்னமும் நடுத்தர வர்க்கம் சில பல குட்டிகள் போடலாம். ஆனால் நமது குட்டிச்சுவரைப் பொறுத்தவரை மத்திய வர்க்கம் இரண்டே இரண்டு வகைதான். ரேஷன் கடைக்குப் போக கூச்சப்படாதவன், கூச்சப்படுறவன். அவ்வளவுதான்!




பிறக்கும்போது நமது உயரத்தில் 10% மட்டுமே இருக்கும் குழந்தைகள், நமது 100% கவனத்தை ஈர்த்துக் கொள்கிறார்கள். பேச ஆரம்பிக்கும் வயதில் நமது உயரத்தில் 20% மட்டுமே இருக்கும் மழலைகள், நமக்கு 200% மகிழ்ச்சி தருகிறார்கள். வளரும் வயதில் நம் உயரத்தில் 50% இருக்கும் குழந்தைகள் நமது கனவுகளை சாதிப்பவர்களாக 500% நம்பிக்கை அளிக்கிறார்கள். வளர்ந்து பெரியவர்களாகி நமது உயரத்தில் இருக்கும்போது, 1000% நம் கருத்துகளில் வேறுபட்டு நிற்கிறார்கள்.

வணக்கம் ஜட்ஜய்யா! 20 வருஷத்துக்கு முன்னால நடந்த மும்பை குண்டுவெடிப்பு பற்றியோ, நடிகர் சஞ்சய் தத் கைது பற்றியோ, அவரு ஒண்ணரை வருஷம் உள்ள இருந்தது பற்றியோ, இல்லை... இந்தியாவில் இருக்கும் சட்ட திட்டங்களைப் பற்றியோ உங்களுக்குத் தெரியாதது ஒண்ணும் இல்லை.
இதுல என்னான்னா யுவர் ஹானர், இந்த காவல்துறை இருக்கே... அவங்க சஞ்சய் தத் வீட்டுல தேடுதல் வேட்டை நடத்தினப்போ ‘துப்பாக்கி’ எடுத்திருக்காங்க. ஜட்ஜய்யா, இப்போ வக்கீல் வண்டுமுருகனாகிய எனது கேள்வியெல்லாம் காவல்துறை துப்பாக்கி மட்டும்தான் எடுத்துச்சா? இல்லை... வேலாயுதம், சுறா, வேட்டைக்காரன், கில்லி, திருப்பாச்சி கூட எடுத்துச்சா? மிக முக்கியமா ஜட்ஜய்யா, காவலர்கள் ‘போக்கிரி’யை எடுத்தாங்களான்னு எனக்கு தெரிஞ்சாகணும். எடுத்ததெல்லாம் ஒரிஜினல் 5.1 பிரின்ட்டா? இல்லை, தியேட்டர் பிரின்ட்டா? இதை நான் எனக்காக கேட்கவில்லை, என்னையே மலை போல நம்பி இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காகக் கேட்கிறேன். சொல்லுங்க யுவர் ஹானர்!

மொதல்ல ‘சென்னைல மட்டும்தான் வச்சு அடிக்கப் போறோம், எல்லோரும் வந்திடுங்க’ன்னு சொன்னாய்ங்க. நாங்களும் நம்பி போயிட்டோம். சேப்பாக்கம் சந்துக்குள்ள வச்சு சும்மா மெதுவாத்தான் கும்மினாங்க. அப்புறம் அப்படியே எங்களை காய்கறி லாரில ஏத்தி ஹைதராபாத்ல இறக்கி வச்சு விடிய விடியக் கசக்கி எடுத்தானுங்க. அப்போ இந்த தோனி பய, ‘மச்சான்... நமக்கும் ஒரு அடிமை சிக்கி இருக்கு’ன்னு முரளி விஜய்க்கு போன் போட, எங்களை ஒரு மீன் பாடி வண்டில ஏத்தி நேரா மொகாலில இருக்கிற ஒரு மூத்திர சந்துக்கு கூட்டிப் போனாங்க. சும்மா இல்லம்மா, சுமார் 11 பேரு... எங்களை மாங்கு மாங்குன்னு மொத்தி எடுத்துட்டாங்க. ரெண்டு பேரு செஞ்சுரி வேற. அப்புறம் கருவாட்டு லாரில ஏத்திவிட்டு டெல்லியில மூணு நாள் வச்சு மொக்கி எடுத்தாங்க. நாங்களும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது. வெக்கப்படாம அப்படியே அழ ஆரம்பிச்சிட்டோம். புரியுது... ‘இப்படி விடிய விடிய அடிச்சாங்களே... திருப்பி அடிக்கலையா’ன்னு நீங்க கேட்க வர்றது புரியுது. அடிக்கும்போது வீடு தொடைக்கிற மாப் ஸ்டிக்கை நிமுத்தி வச்ச மாதிரி இருக்கிற இஷாந்த் சர்மா சொன்னான், ‘‘டேய்... எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்க. இவனுங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவனுங்கடா’’ன்னுட்டாம்மா!



லவ் பண்ண ஆளு இல்லாம, அட... லைக் பண்ண ஆயா கூட இல்லாம, மாநகர புறாக்கூண்டு மேன்ஷன்களில் தனியே தன்னந்தனியே கஷ்டப்படும் பேச்சுலர்களுக்கு வேலைகளை எளிதாக்க சில டிப்ஸ்...
யிசனிக்கிழமை சரக்கு தினம்னா, சண்டே துவைப்பு தினம். வழக்கமா அழுக்கு தெரியாம இருக்க அடிச்சுத் துவைப்பீங்க. ஆனா, களைப்பு தெரியாம இருக்க, கல்ப்பா ஒரு கட்டிங் அடிச்சுட்டு துவைங்க.
ரிகாலைல லேட்டா எந்திரிக்கிறவங்க, அடுத்த நாள் காலையில/மாலையில போட வேண்டிய சப்பாத்திக்கு மாவ உருட்டி, தலையணைக்கு அடியில வச்சுக்கிட்டு தூங்கினா, அந்த உருண்டைய தேய்க்கிற நேரம் மிச்சம்.
லிஅயர்ன் பாக்ஸ் இல்லாத பேச்சுலர் ரூம் இல்ல. காலைல அயர்ன் பண்ணின சூடு அடங்குறதுக்குள்ள, அதுலயே ஆப்பாயில் போட்டுக்கோங்க. குளிக்க சுடுதண்ணி வைக்கும் பழக்கம் உள்ளவங்க, அதுல 200 மி.லி எடுத்து நூடுல்ஸ் போட்டுக்கோங்க.
யிமாச கடைசில சரக்கடிக்க துட்டுக்குத் தட்டுப்பாடு வர்றது சகஜம். அதனால சம்பளம் வாங்குன அன்னைக்கு வாங்கிய சரக்கு பாட்டில உண்டியலாக்கி, தினம் 5 ரூபா போட்டு வையுங்க.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...
‘‘அமெரிக்காவால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது’’ என்று சொல்லி, தன் வாயாலேயே வலை விரித்துக்கொள்ளும் ராஜபக்ஷே!