நியூஸ் வே






*  மறுபடியும் லட்சுமியும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள். ‘தாய் - மகள் பாசம் இவ்வளவு வீக்கானதா’ என்று ஆச்சரியப்படுகிறார்கள். இப்பொழுதெல்லாம் பார்ட்டிகளில் அதிகம் தென்படுகிறார் ஐஸ்வர்யா. சென்னைத் தமிழும், ஆங்கிலமும் கலந்த அவரது பேச்சுக்கு பார்ட்டிகளில் பெரும் மவுசு.

*  ‘‘என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் ஓடும்வரை நரேந்திர மோடியை பிரதமர் ஆக விடமாட்டேன்’’ என லேட்டஸ்ட்டாக சூளுரைத்து இருப்பவர் பீகார் பிரபலம் லாலு பிரசாத் யாதவ். உசுப்பேத்தியே ரணகளம் ஆக்குறாங்க!

*  ‘‘இந்தி சினிமா மாறிவிட்டது. கேமரா வுமன், ஹேர் டிரஸ்ஸர், மேக்கப் ஆர்டிஸ்ட், டிரஸ் டிசைனர், ஆர்ட் டிசைனர் என எல்லா துறைகளிலும் பெண்களை இங்கு பார்க்க முடிகிறது. தென்னிந்திய திரையுலகில் இந்த மாற்றம் வரவில்லை. பெண்களை ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லா இடங்களிலும் பார்க்கும் நிலை வர வேண்டும்’’ என பெண்ணுரிமை வாய்ஸ் கொடுத்திருக்கிறார் அசின்.

*  தமிழ்க் குரலுக்கு மாறியிருக்கும் கன்னடப் படமான ‘சந்திரா’ தவிர ஸ்ரேயாவின் கால்ஷீட் டைரியில் எந்த தமிழ்ப் படத்தின் பெயரும் இல்லை. அஜித், விஜய் என வெயிட் பண்ணி காலத்தைக் கரைக்காமல் ‘‘ஹீரோ புதுமுகமா இருந்தாலும் பரவாயில்ல, நல்ல கதை இருந்தா வாங்க...’’ என வாசல் திறந்து வைத்து காத்திருக்கிறார் ஸ்ரேயா.

*  ‘‘எதுவுமே தப்பு இல்ல... புடிச்சிப் போச்சினா எவனும் புத்தன் இல்ல...’’ என்று ‘ரணம்’ படத்தில் மறுபடியும் பரபரப்பு கிளப்பும் வரிகளை எழுதியுள்ளார் கவிஞர் சினேகன். எழுதியதோடு நிற்காமல், இந்தப் பாடலில் நைஜீரியன் ஹேர் ஸ்டைலில் மலேசிய அழகிகளுடன் நெருக்கமாக ஆட்டம் போட்டிருக்கிறார்.


*  தி.நகரில் புது வீட்டில் குடியேறி விட்டார் சிம்பு. தினமும் இரவில் ஜெய், அனூப், மகத் என சினிமா நண்பர்களோடு அரட்டைதான். வீட்டில் அவருக்கென்றே பிரத்யேக அறையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் டி.ஆர்.

*  அடுத்து உடனே இந்திப்படம் செய்வதாக இருந்த முடிவை மாற்றிக்கொண்டார் மணிரத்னம். விடுமுறைக்கு வந்திருக்கும் மகனோடு கொடைக்கானலில் சற்று ஓய்வெடுக்கிறார்.

*  ப.சிங்காரத்தின் மிக உயர்ந்த படைப்பான ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் டைரக்டர் வெற்றிமாறன். அதே போல வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ நாவலை திரைப்படமாக்குவதில் தீவிரமாக மூழ்கியிருக்கிறார் கவிஞர் ரவி சுப்பிரமணியன்.

*  லைலா மறுபடியும் நடிக்க வருகிறார். அநேகமாக பாலாவின் அடுத்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிப்பார் என்கிறார்கள்.

*  நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்ராகிம் ராவுத்தர் படம் தயாரிக்கிறார். ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என பெயரிடப்பட்டிருக்கும் படத்தை தம்பி செய்யது இப்ராகிம் இயக்குகிறார். படத்தின் ரஷ் பார்த்து திருப்தியான ராவுத்தர், ‘உழவன் மகன்’ படத்தை தயாரித்ததற்காக 25 ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் தனக்கு அணிவித்த மோதிரத்தை இயக்குனரின் விரலில் போட்டிருக்கிறார்.



*  தினமும் காலை ஐந்தரை மணிக்கே எழுந்து தெருக்கோடிக்கு வந்து பால் வாங்குவார் டி.ராஜேந்தர். ஆச்சர்யத்தில் மிரளுகிறவர்களுக்கு, தலைமுடியை சிலுப்பிக்கொண்டு சின்னதாக ஒரு புன்னகை பரிசாகக் கிடைக்கும்.

*  கவுண்டமணியின் அலுவலகத்தை செராமிக்கால் செய்யப்பட்ட யானை, ஒட்டக பொம்மைகள் அலங்கரிக்கின்றன. தினமும் தனது அலுவலக மொட்டை மாடியில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் அவர்.

*  முலாயம்சிங் யாதவை தாறுமாறாக விமர்சனம் செய்து, காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியவர், மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா. நீண்டகாலமாக தனக்கு ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு கேட்டார் அவர். ஆனால் கிடைக்கவில்லை. இப்போது இந்தப் பேச்சுகளால் அவரது அபாய ரேட்டிங் அதிகமாகிவிட்டது. இஸட் பிளஸ் கொடுத்துவிட்டார்கள்.



*  நடிகை அம்பிகாவும்  இயக்குனர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். மலையாளத்தில் அவர் இயக்கி வரும் ‘அனபெல்லா’ என்ற இந்தப் படம், ‘நிழல்’ என்ற பெயரில் தமிழ் பேச வருகிறது. மிஸ் கேரளாவான ஜெனிபர்தான் படத்தின் ஹீரோயின்.

*  இன்று சென்னை, நாளை மும்பை, நாளை மறுநாள் ஐதராபாத் என மும்மொழிப் படங்களில் பிஸியாகிவிட்டார் சத்யராஜ். இப்போது அவரது கைவசம் பத்து படங்கள். ராஜமௌலி இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளம் பேசியிருக்கின்றனர். கூட்டிக் கழித்துப் பார்த்தால், யூத் ஹீரோக்களை தூக்கி சாப்பிடும் சம்பளம்.


*  நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா, டைரக்டர் விஷ்ணுவர்தனிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்ந்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரைப் பார்த்த அஜித் கூப்பிட்டு, ‘‘நல்லா ஒர்க் பண்ணு. பெரிய டைரக்டராகவே மாறலாம். உனக்கு தகுதியிருக்கு’’ என வாழ்த்தினாராம். பூரித்துப் போய் இருக்கிறார் கீர்த்தனா.

*  டைரக்ஷன் செய்யலாம், அல்லது சொந்தப் படம் என்ற இந்த இரண்டு எண்ணங்களையும் கை விட்டு விட்டார் சிம்ரன். உணவகம் நடத்துவதில் மட்டுமே இப்போது அக்கறையாம்.

சைலன்ஸ்

மில்க் நடிகையின் கடிவாளம், தொடர்ந்து நடிகர் பெயர் கொண்ட இயக்குனரின் கையில் உள்ளதாம். நடிகையின் அத்தனை அசைவுகளையும் இயக்குனர் கண்காணித்து வருகிறார். ஆனாலும் அவரது கண்ணில் ஆந்திர மிளகாய் தூளை தூவி விட்டு தெலுங்கு நடிகருடன் நடிகை நெருக்கமாகி வருவதாக அக்கட தேசத்திலிருந்து செய்திகள் கசிகின்றன.



வெற்றிகரமாக வந்து கடைசியில் சறுக்கிய அந்த இனிஷியல் டைரக்டர், இந்தி வரை போன இன்னொரு இனிஷியல் டைரக்டர்... இரண்டு பேரும் இப்போது அந்த ‘பிரகாச’ நடிகரிடம் ஃபிரண்ட்ஷிப்பில் இல்லையாம். ‘‘எவ்வளவோ சொன்னேன், நான் சொன்னதையெல்லாம் தலையீடாக எடுத்துக்கொண்டார்கள். இப்போது பாருங்கள்... எல்லோருக்குமே வருத்தம், மார்க்கெட் டல். இனிமேல் குறைகளை திருத்திக்கொண்டால்தான் அவர்களுடன் படமே செய்வேன்’’ என நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார் நடிகர்.