உலக சினிமா என்று தனியாக ஒன்று இல்லை





விரல்விழிக் கலைஞன், செழியன். ஒளிப்பதிவாளராக, எழுத்தாளராக தொடர்ந்து தரமான படைப்புகளை தரும் செழியன், ‘பரதேசி’யில் இன்னும் உயரம் தொட்டிருக்கிறார். ‘டீ’ சொல்லிவிட்டு உட்கார்ந்தால், ஆஸ்கர் விருதுகளிலிருந்து பாலா வரை செழியனிடம் எதுவும் பேசலாம். அப்படியொரு சந்திப்புதான் இதுவும்!

‘‘உலக சினிமா பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்கள். தமிழில் உலக சினிமா சாத்தியமா?’’
‘‘நிச்சயம் சாத்தியம் இருக்கிறது. உலக சினிமா என்று தனியாக ஒரு சினிமா இல்லை. அந்தந்த நாட்டுக்கான சினிமாதான் இருக்கிறது. அவரவர் கலாசாரமும் வாழ்க்கையும் வணிகத்துக்கான சமரசங்கள் இன்றி தனித்துவத்துடன் திரைப்படம் ஆகும்போது, அதுதான் உலகம் முழுமைக்குமான சினிமா ஆகிறது. அது போல தமிழுக்கே உரிய தனித்துவத்துடன் நமக்கான சமன்பாடுகளை விடுத்து ஒரு படத்தை எடுத்தால் அதுதான் உலக சினிமா.’’



‘‘பாலாவுடன் ‘பரதேசி’ அனுபவம்...’’
‘‘ஈரான் இயக்குனர் சமீரா மக்மல்பஃப் படம் எடுக்கும்போது, அவரது சகோதரர் ஒளிப்பதிவாளர். சகோதரியும் சித்தியும் உதவி இயக்குனர்கள். அப்பா திரைக்கதை ஆசிரியர். ஒரு குடும்பமே சேர்ந்து படம் எடுப்பார்கள். நம் வீட்டில் கல்யாணம் நடந்தால் எல்லா வேலையும் எடுத்துப் போட்டு பார்ப்போம் இல்லையா? அதுபோல நம்ம படம் என்று உரிமையுடனும் அக்கறையுடனும் நான் பணிபுரிந்த படம்தான் ‘பரதேசி’.
படப்பிடிப்பில் இருந்த ஒவ்வொரு கணமும் அனுபவம்தான். காட்சியை காகிதத்தில் படிக்கும்போது சாதாரணமாக இருக்கும். நடிகர்களும் சாதாரணமாக வந்து நிற்பார்கள். ஒவ்வொரு டேக்கிலும் ஒரு மாற்றம் வந்துகொண்டே இருக்கும். பத்தாவது டேக்கில், ‘நாம் படித்த காட்சியா இது?’ என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கும். ‘இங்க இருந்து இதுவரைக்கும் ஓகே... இனி இப்படிச் செய்!’ என்று முகபாவங்களை ஓர் இசைக்கோர்வை போல் இயற்றுவார். அதெல்லாம் இனிமையான அனுபவம்.’’

‘‘எல்லா விமர்சனத்திலும் ‘செழியன் செழியன்’ என்கிறார்கள். ‘பரதேசி’யில் இந்த அளவுக்கு நீங்கள் வெளிப்பட்டது எப்படி?’’
‘‘என்னை நூறு சதவீதம் ஈடுபடுத்திக்கொள்வதற்கும், முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்குமான சுதந்திரம் இருந்தது. முழுத் திரைக்கதையையும் படிக்கக் கொடுத்தார். நம் மூதாதையரின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறோம் என்கிற பொறுப்புணர்வும் இருந்தது. சரியான கதை, நேர்த்தியான இயக்குனர், திறமையான படத்தொகுப்பு, அற்புதமான கலை இயக்கம், திறமையான நடிகர்கள் என எல்லாம் சரியாக இருப்பதால் ஒளிப்பதிவும் சரியாக இருக்கிறது.’’



‘‘வழக்கமாக பாலா படம் என்றால் 300 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும். இவ்வளவு பெரிய படம் 90 நாளில் முடிந்தது எப்படி?’’
‘‘கணக்கு 90 நாட்கள். ஆனால் முறையாக படப்பிடிப்பு நடந்தது 70 நாட்கள்தான். வேலை நடக்கும்போது கவனமாக இருப்பார். அவ்வளவுதான். மற்ற நேரங்களில் படப்பிடிப்பில் இருக்கிற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார். தினம் ஏதாவது காமெடி நடந்து கொண்டே இருக்கும்.
‘பாலா பன்னிரெண்டு மணிக்கு வருவார்’, ‘ஒரு நாளுக்கு ரெண்டு ஷாட்தான் எடுப்பார்’ என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், தினமும் அதிகாலையில் முதல் ஆளாகப் படப்பிடிப்புக்கு வந்தார். ஒளி மீதான அக்கறை வந்து, ஸ்டில் கேமராவில் படங்கள் எல்லாம் எடுத்தார். படத்தின் விளம்பரத்திற்காகப் பயன்படுத்திய பல படங்கள் அவர் எடுத்ததுதான்.
என்ன வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார். எந்தக் குழப்பமும் இருக்காது. ஐநூறு பேருக்குமேல் துணை நடிகர்கள், அகேலா, ஜிம்மி ஜிப், ஹெலிகாப்டர் என்று எல்லா உபகரணங்களையும் வைத்துக்கொண்டு மூன்றே நாட்களில் அந்த க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டது.’’

‘‘உங்களுக்குள் இருக்கிற கவிஞரும், எழுத்தாளரும், ஒளிப்பதிவாளருக்கு எப்படி உதவுகிறார்கள்?’’
‘‘ஒளிப்பதிவு வெறும் அறிவியல். ஒரு வகையில் கணிதம். அதனோடு உணர்வுகள் சேரும்போதுதான் அது கலையாகிறது. என் இலக்கியப் பரிச்சயம் அதற்கு உதவுகிறது. ஒரு முறை ஆவணப்படம் எடுக்கையில் வயதான ஒரு புகைப்படக் கலைஞரை சந்தித்தேன். அவரது வீட்டில் வீணை இருந்தது. ‘வாசிப்பீர்களா’ என்று கேட்டேன். ‘இசை கற்றுக் கொள்ளும்போதுதான் உன் போட்டோகிராபி முழுமையடையும்’னு அவர் சொன்னார். அதற்குப் பிறகு நான் இசையும் கற்றுக்கொண்டேன். சம்பாதிக்கிற ஒளிப்பதிவாளர் எனக்குள் இருக்கிற கவிஞரையும் எழுத்தாளரையும் பத்திரமாக பார்த்துக்கொள்கிறார். அதற்குப் பலனாக இருவரும் ஒளிப்பதிவாளருக்குப் பலமாக இருக்கிறார்கள்.’’

‘‘இயக்குனராவது எப்போது?’’
‘‘பி.சி.ஸ்ரீராம் திரைமொழியைக் கற்றுக் கொடுத்தார். பாலாஜி சக்திவேல் என்னை முன்மொழிந்தார். பாலா வழி மொழிந்திருக்கிறார். தமிழ் சினிமாவின் வலிமையான மூன்று ஆளுமைகளின் அருகிலிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒளிப்பதிவே இப்போதுதான் துவங்கி இருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள். நிச்சயம் வருகிறேன்.’’
- நா.கதிர்வேலன்