ஆபரேஷனால் குண்டாகுமா நாய்?





எங்கள் வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த ஆண் நாய்க்குட்டி உள்ளது. ‘அது வளர்ந்து விட்டது. சீக்கிரம் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து விடுங்கள்’ என்று நண்பர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அந்த ஆபரேஷன் செய்தால், நடக்க முடியாத அளவுக்கு நாய் குண்டாகி விடும் என்கிறார்கள் இன்னும் சிலர். உண்மையில் கு.க ஆபரேஷன் நாய்களை குண்டாக்குமா என்ன?

பதில் சொல்கிறார் டாக்டர் இளஞ்சேரன் (முதன்மை மருத்துவர், பன்முக மருத்துவமனை, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை.)
நாய்களுக்கு செய்யப்படும் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் அவற்றைக் குண்டாக்குவதில்லை. ஆபரேஷனுக்குப் பின்பு அய்யோ பாவம் என்று எஜமானர்கள் தங்கள் நாய்க்குத் தரும் அதீத கவனிப்புதான் உடல் பெருத்துப் போகக் காரணம். பொதுவாக தெரு நாய்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தால் கூட, அது நடப்பதைக் குறைத்துக் கொண்டு ரெஸ்ட் எடுக்கும். அந்தப் பழக்கம் அப்படியே பழகிப் போவதால்தான் தெருநாய்களுக்குக்கூட இன்று உடல் பருமன் அதிகரித்துவிட்டது. ஆனால், வீட்டு நாய்க்கு இதே மாதிரி உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க நம்மால் முடியும். ஆபரேஷன் முடிந்ததும் அதற்கு சிறப்பு உணவுகள் எதுவும் கொடுக்காமல் நார்மல் டயட்டில் விடுங்கள். அது சோர்ந்து படுத்தாலும் விடாப்பிடியாக வாக்கிங் அழைத்துப் போய் உடற்பயிற்சி கொடுங்கள். ஆபரேஷனுக்குப் பின்பான சில நாட்களுக்கு மட்டும் இதைச் செய்தால் போதும். ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் உங்கள் நாயைத் தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம்!

ஐ.டி.ஐ முடித்து சில ஆண்டுகள் என் மகன் துபாயில் வேலை பார்த்தான். அதிக வேலை... குறைந்த சம்பளம் என்று கம்பெனி செய்த கொடுமைகளால் திரும்பி விட்டான். ‘நல்ல கம்பெனி’ என்று பொய் சொன்ன ஏஜென்டை நம்பி, கட்டிய பணம் பறிபோய்விட்டது. ஆனால், ‘திரும்பவும் அங்கே போனாத்தான் சம்பாதிக்க முடியும்’ என முயற்சித்துக் கொண்டிருக்கிறான். மீண்டும் ஏமாறாமல் இருக்க வழி உள்ளதா?
- எம்.உமாமகேஸ்வரி, சென்னை.
பதில் சொல்கிறார் நிஜாமுதீன் அன்வர் (மனிதவளத்துறை இயக்குனர், எமிரேட்ஸ் ஓவர்சீஸ் ரெக்ரூட்மென்ட் கன்சல்டன்சி, சென்னை.)

வெளிநாட்டு வேலை விஷயத்தில் நிகழ்ந்த கடந்த கால மோசடிகளுக்குக் காரணம் பணத்துக்கு ஆசைப்படும் சில இடைத்தரகர்களே தவிர, வேலை வழங்கும் நிறுவனங்கள் அல்ல. இந்தப் பிரச்னையைத் தவிர்ப்பதற்காகவே தற்போது பல அரபு நாட்டு முன்னணி நிறுவனங்கள், தாங்களே பணியாட்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. இதற்கென உலகின் பல பகுதிகளிலும் அவர்களே அலுவலகங்களைத் திறந்திருக்கிறார்கள். (எங்களது நிறுவனமும் அப்படிப்பட்டதே!)

இன்னும் சில நிறுவனங்கள் அந்தந்த நாட்டு அரசாங்கம் மூலமாகவே தங்களுக்கு வேண்டிய ஆட்களைத் தேர்வு செய்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை ‘ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்’ என்னும் தமிழக அரசு நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு உதவுகிறது. அங்கு பெயர் பதிவு செய்திருந்தால், வெளிநாடுகளில் தகுதிக்கேற்ற வேலை வரும்போது அனுப்பி வைக்கிறார்கள். இந்த நிறுவனத்தை 044-225 02267/22505886 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இது தவிர, தனியார் நிறுவனங்களும் வெளிநாடுகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்து அனுப்புகின்றன. அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் செல்வதே பாதுகாப்பானது.

நாங்கள் மெக்டன் குரூப் என்ற நிறுவனத்துக்கு ஆட்களைத் தேர்வு செய்து, பயிற்சியும் கொடுத்து அனுப்புகிறோம். அந்தப் பயிற்சிக்கு மட்டும் கட்டணம் உண்டு. பயிற்சி முடிவதற்குள் விசா உள்ளிட்ட மற்ற விஷயங்கள் இறுதியாகி விடும். அந்தச் செலவுகளை நிறுவனமே ஏற்கும். முதல் தடவை செல்கிறவர் என்றால் ஒருவழிப் பயணத்துக்குரிய கட்டணம் மட்டும் சம்பந்தப்பட்டவர் செலுத்த வேண்டியிருக்கும். மற்றபடி எந்தக் கட்டணமும் இல்லை.   cv@ercindia.in  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, அல்லது 044-42614246 என்ற எண்ணிலோ எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.