வேலைக்குப் போகாதீர்கள்!





மகிழ்ச்சியோடு ஒரு வேலையைச் செய்யும்போது, அதன் விளைவு நேர்த்தியாக இருக்கும்.
- அரிஸ்டாட்டில்

நீங்கள் உங்கள் பணி தொடர்பாக ஒரு பிரமுகரையோ அல்லது உங்களைவிட உயர்நிலையில் இருப்பவரையோ முதன் முதலாக சந்திக்கப் போகிறீர்கள். இந்தக் கட்டத்தில் இந்தச் சந்திப்பைப் பற்றி உடன் பணிபுரிபவர்கள் நிறைய முன் அனுமானங்களை ஏற்படுத்துவார்கள்.
நீங்கள் சந்திக்கப் போகும் நபர் கோபக்காரர்... அவருக்கு இப்படிப் பேசினால் பிடிக்காது... அப்படிப் பேசினால் பிடிக்காது... எளிதில் மூட் அவுட் ஆகி விடுவார். இப்படி பல சாத்தியங்களை உங்கள் மண்டைக்குள் திணிக்கப் பார்ப்பார்கள். நீங்களும் அந்த முன் அனுமானங்களை சுமந்து அவரைப் பார்க்கச் செல்வீர்கள்.
இந்த முன் அனுமானங்கள் எப்படிக் கிடைத்திருக்கும்? யாரோ ஒருவருக்கு அந்த பிரமுகரால் சில அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அதன் மூலம், ‘இவர் இப்படித்தான்’ என முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆனால், யாருக்கோ, எப்போதோ, எந்தச் சூழலிலோ ஏற்பட்ட அனுபவம் இப்போதும் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. தவிர, இது போன்ற விவரிப்புகளில் பாதித் தகவல்தான் வந்து சேரும். தன் பக்கக் குறைகளை யாரும் வெளியில் சொல்ல மாட்டார்கள். அவர் திட்டிவிட்டார் என்பதையே பெரிதாகச் சொல்வார்கள். எதற்கு திட்டினார்? சொல்ல மாட்டார்கள். இதுவே சராசரி மனித இயல்பு. எனவே, முன் அனுமானங்களில் பெரும்பாலும் உண்மை இருக்காது.

ஒருவேளை அதெல்லாம் உண்மையாக இருந்தால் கூட என்ன செய்ய முடியும்?
அவர் என்ன நினைப்பார், இவர் என்ன நினைப்பார் என்று அவர் நினைக்க வேண்டியதையும் நீங்களாகவே யூகிக்க முயன்று, சிரமப்பட்டு கூடுதல் பளுவைச் சேர்க்க வேண்டியதில்லை. இயல்பாக இருங்கள். அவர் என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும். அவர் நினைப்பதையும் சேர்த்து நாமாக நினைத்து நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும்? அவருக்காக நினைக்கத்தான் அவர் இருக்கிறாரே... நமக்கு எதற்கு அந்த எக்ஸ்ட்ரா வேலை? அந்த வேலையை நாம் செய்யும்போது, சில சமயம் அவர் நினைக்காததையும் சேர்த்து நாம் நினைப்போம். அதனால் பதற்றம்தான் மிஞ்சும்.



நீங்கள் அங்கே சென்றிருப்பது உங்களுக்கும், அவருக்கும் உள்ள பொதுவான பணி காரணமாக. அவர் எப்படி நமக்கு முக்கியமோ, அந்த அளவு நாமும் அவருக்கு முக்கியம்தான். நமது பணியும் அவருக்கு முக்கியம்தான்.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். எல்லாருமே ரத்தமும் சதையுமான மனிதர்கள்தான்... நம்மைப் போல! எனவே, சக மனிதனைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. அப்படியே அச்சம் இருப்பினும், அதை நீங்கள் வெளிப்படுத்தினால்தானே எதிரில் இருப்பவர் உணர்வார்! உங்களை மீறி உங்கள் உணர்வுகள் வெளிவந்தால், நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம்.

எனவே, அவரை எப்படி சமாளிப்பது, மூடுக்குத் தகுந்த மாதிரி எப்படிப் பேசுவது போன்றவற்றையே நினைத்து, முக்கியமான வேலையில் கோட்டை விட்டுவிட வேண்டாம். முன் அனுமானங்களில் பிரமாதமாக ஈடுபட்டு, கற்பனைக்கு அதிக வேலை கொடுத்து, எதற்காகச் சென்றோமோ அதில் கோட்டை விட்டுவிட்டால், பின்னர் அதை சரி செய்வதற்கு போராடப்போவதும் நீங்கள்தான்.

வேலையில் ஏதாவது தப்பு நடந்து விட்டால் அதைத்தான் எல்லோரும் குறை சொல்வார்களே தவிர, ‘‘ஆஹா, நீ யூகித்தது மாதிரியே எல்லாம் நடந்தது’’ என்று பாராட்ட மாட்டார்கள். எனவே, வேலையில் காட்ட வேண்டிய உங்கள் புத்திசாலித்தனத்தையும் உழைப்பையும் வெட்டி வேலையில் காட்டி வீணாக்காதீர்கள்.

இதுபோன்ற புதியவர்களைச் சந்திக்கும்போதும் சரி, புது வேலையில் ஈடுபடும்போதும் சரி... இதன் எதிர் விளைவுகள் எப்படி அமையும் என்று ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எதையும் கணிக்க இயலாது. வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப பணியாற்றுவதே புத்திசாலித்தனம். பிரதான வேலையை மறந்து விட்டு, பில்ட் அப் வேலைகளில் கவனம் செலுத்தி கெட்ட பேர் வாங்கியவர்கள் அநேகம். இன்னொன்று... தங்கள் பணியில் தாங்களே திருப்தி அடையாதவர்கள்தான், இப்படி அடுத்தவர்களைப் பார்த்து நடுக்கம் கொள்வார்கள்.
நீங்கள் சக பணியாளர் ஒருவரின் வீட்டில் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சி ஒன்றிற்குச் செல்கிறீர்கள். அவர் உங்களைப் போலவே பலரையும் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பார். அந்த விழாவில் நீங்கள் ஒருவரை சந்திக்கிறீர்கள். அவர் யாரென்றால், உங்களுடன் பணிபுரிந்து, தற்போது அந்த நிறுவனத்தின் வேறு கிளைக்கு மாறுதல் பெற்றுச் சென்றுவிட்ட உங்களது பழைய மேனேஜர்... அல்லது பாஸ்... அல்லது ஏதாவது ஒரு உயர் பதவியில் இருப்பவர்.

இது மாதிரியான தற்செயல் சந்திப்புகளில் உங்களை பணி தொடர்பாக கேள்விகள் கேட்டு யாரும் சிரமத்துக்குள்ளாக்க மாட்டார்கள்தான். எல்லாருமே நிகழ்ச்சியில் ஈடுபட்டு சிறிது மாறுதலான மனநிலையில் இருக்கலாம் என்று வந்திருப்பார்கள்தான். ஆனால் வழக்கமான நலம் விசாரித்த பிறகு, சிறிய அரட்டைகளுக்குப் பிறகு, இயல்பாகவே பேச்சு உங்களது பணி உலகத்தைத் தொட்டு விடும். ஏனென்றால், பணி ரீதியான உறவைத் தவிர அவருக்கும் உங்களுக்கும் இடையே வேறு என்ன இருக்கிறது?

எனவே, பணி ரீதியாக உங்களை விசாரிக்கக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. அந்த உயர் அதிகாரி தற்போதைய உங்கள் அலுவலகத்தில் முன்னர் பணி புரிந்த காலத்தில் சில வேலைகளைத் துவக்கிவிட்டுச் சென்றிருக்கலாம். தான் அங்கிருந்து சென்ற பிறகு அவற்றின் தற்போதைய நிலை என்ன... தான் அந்த பணி இடத்தை விட்டுச்செல்லும்போது நிலைமைகள் இப்படி இப்படி இருந்தது... தற்போது எப்படி இருக்கிறது... லாபம், விற்பனை, சாதனைகள்... போன்றவை தற்போது எப்படி... இது போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ளத்தான் 99% விரும்புவார். கண்டிப்பாக பேச்சு இந்தத் திசையில்தான் செல்லும். ஒருவேளை இந்தத் தகவல்கள் அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் கூட, அவற்றை உங்கள் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள அவர் விரும்பலாம்.

இது கலந்தாய்வு அல்ல... விசாரணையும் அல்ல. முற்றிலும் அன் அஃபிஷியலான கேள்விகள். இதற்கு நீங்கள் சரியான பதில் சொல்லவில்லை... அல்லது மழுப்பலான பதில் அளித்தீர்கள்... சமாளித்தீர்கள்... நடித்தீர்கள்... என்றாலும்கூட ஒன்றும் நடக்கப் போவதில்லை. உங்களது தப்பான பதில்களுக்காக யாரும் உங்களை ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஏனென்றால், நீங்கள் முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறீர்கள்.



என்றாலும்கூட, கேள்வி கேட்டவர் தன் மனதுக்குள் உங்களைப் பற்றி ‘என்னடா இது, என்ன கேட்டாலும் தெரியாதுங்கறான்... அரைகுறையா சொல்றான்... முழிக்கிறான்...’ என்றெல்லாம் நினைப்பார். அவர் மதிப்பீட்டில் ஒரு அங்குலம் நீங்கள் கீழே நகர்ந்திருக்கக்கூடும்.

இந்நிலையில் எதிர்காலத்தில் அவரே திரும்பவும் உங்கள் கிளைக்கு வரலாம்... அல்லது, நீங்கள் அவரது கிளைக்கு பணி புரியச் செல்லலாம். அவர் உங்களது பதவி உயர்வு, ஊதியம்... போன்றவற்றைத் தீர்மானிக்கிற இடத்திற்கு வரலாம். குறைந்தபட்சம் யாராவது உங்களைப் பற்றி கருத்து கேட்டால், சொல்லக் கூடிய இடத்திலாவது இருக்கலாம். வாய்ப்புகள்..!

நீங்கள் பதிலுக்காகத் திணறிக்கொண்டிருந்த பரிதாபமான காட்சிகள், அப்போது சிறிது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எந்தச் சூழலில் கேள்விகள் கேட்டோம் என்பதை பெரும்பாலும் யாரும் நினைவு வைத்திருக்க மாட்டார்கள். நீங்கள் பேந்தப் பேந்த விழித்த காட்சிதான் அவர்கள் முன் டிஜிட்டல் எஃபெக்ட்டில் ஓடும். டாண் டாண் என்று பதில் சொன்ன முகங்கள்தான் அப்போது நல்ல மதிப்பெண்களைப் பெறும். எனவே, உங்கள் தொழில் சார்ந்த அடிப்படையான விஷயங்களை எப்போதும் விரல் நுனியில் வைத்திருங்கள். இது தொழில் சார்ந்த உங்கள் அக்கறையைக் காட்டுவதாகவும் அமையும்.
இது உங்களுக்கு கம்பீரத்தையும் பெருமையையும் கொடுக்கும்.
(வேலை வரும்...)