சொன்னா புரியாது : சினிமா விமர்சனம்




காலம் முழுக்க ஜாலி பேச்சுலராக வாழ ஆசைப்படும் டப்பிங் கலைஞர் சிவாவுக்கு, டி.வி தொகுப்பாளினி வசுந்தராவுடன் நிச்சயமாகிறது. ஆயிரம் பொய் சொல்லியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்த திட்டமிடும் அவருக்கு வசுந்தராவின் இன்னொரு முகம் அதிர்ச்சியளிக்கிறது. வசுந்தரா ஏற்படுத்தும் அதிர்ச்சி என்ன? சிவாவின் முயற்சி என்னாகிறது என்று ‘சொல்லாமலே புரியும்’ மீதி கதைதான் ‘சொன்னா புரியாது’ க்ளைமேக்ஸ்.

சிவாவுக்கு வழக்கம் போல நண்பர்களைக் கலாய்ப்பது, பெண்களிடம் கடலை போடுவதுதான் வேலை. டப்பிங் கலைஞர் என்பதால், படம் முழுக்க அவர் பேசிக்கொண்டே இருப்பது பொருந்தி விடுகிறது. ஜாக்கி சான் படத்துக்கு டப்பிங் பேசும்போது, ‘‘பெட்டி எங்கே?’’ என்று வில்லன் கேட்க, ‘‘இந்தக் கல்யாணத்தில எனக்கு சுத்தமா இஷ்டமில்லை’’ என சிவா சொந்த டயலாக் பேசி சொதப்புவது, டிஸ்கவரி சேனலில் வரும் குரங்குக்கு காதல் வசனம் பேசுவது என ரெக்கார்டிங் தியேட்டர் காட்சிகள் கலகல.

கல்யாணத்தை நிறுத்துவதற்காக கப்சா விடும் இடங்களிலும் சிவா டிஸ்டிங்ஷன் வாங்குகிறார். குறிப்பாக, கிரிக்கெட் விளையாடும்போது படாத இடத்தில் பந்து பட்டுவிட்டதாக அவர் விவரிப்பது, அவருக்கே உரித்தான காமெடி ஸ்டைல்!
ஆன்மிகப் பற்றுடன் சாதுவாக வந்து, ஒரு கட்டத்தில் ‘அடிப்பாவி’ எனுமளவுக்கு கேரக்டரில் ட்விஸ்ட் கொடுக்கிறார் வசுந்த்ரா. ஆனால், ஏனோ ஆங்காங்கே டல் தோற்றம். நாயகன் மீது காதல் வந்த பின் வசுந்தரா காட்டும் ரொமான்ஸ் லுக், ஈர்ப்பு. ஆனால், எப்போதும் போல சிவா காதல் காட்சிகளில் ஃபெயில் மார்க் வாங்கி தடுமாறுகிறார்.



சிவாவுக்கு கல்யாணமாகி விட்டால், கடலை போடுவதில் போட்டி ஒழியும் என்பதற்காக அவரது கல்யாணத்தை முடித்து வைக்கப் போராடும் சிவாவின் நண்பராக பிளேடு சங்கர்... சைடு டிஷ்ஷை எடுத்துத் தின்றதற்காக காதலியைப் பிரியும் குண்டு பையன்... கால்கட்டு டாட் காம் ஓனராக மனோபாலா... கட்டுப்பாடான கிராமத்துத் தலைவராக சிங்கமுத்து... அடிக்கடி காவி உடுத்தி சிவாவை மிரட்டும் அம்மா மீரா கிருஷ்ணன்... பாடியே மகளை வெறுப்பேற்றும் வசுந்தராவின் அப்பா ஆர்.எஸ்.சிவாஜி என எல்லா கேரக்டர்களும் காமெடி பந்தியில் வைத்த சிரிப்பு டிஷ்கள்தான்.

‘தமிழ்ப் படத்தின்’ மிச்ச மீதி வசனங்கள் போல் இடைவேளைக்குப் பிறகும் நீளும் சிவாவின் அலப்பறை ஒரு கட்டத்தில் அலுப்பை ஏற்படுத்துகிறது. விரல் நுனியில் லேட்டஸ்ட் டெக்னாலஜியை வைத்தபடி வலம் வரும் சிவாவின் பாட்டி கேரக்டர், ஓவர் டோஸ். ஃபிளாஷ்பேக் சொல்லும்போது கீழே குனிந்து பார்ப்பது, கழற்றி வைத்த கண்ணாடியைப் போட்டுக்கொள்ளச் சொல்வது என சில ஐடியாக்கள் ஃபிரஷ். காமெடி இழையோடும் கதையில் கவலை ரேகை ஓடும் க்ளைமேக்ஸ், ஒட்டாத செயற்கை.

புதியவர் யதீஷ் மஹாதேவின் இசையில் பாடல்கள், பின்னணி சுமார் ரகம். ஒளிப்பதிவிலும் பளிச் அம்சங்கள் மிஸ். இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ், என்னதான் காமெடியை மட்டுமே நம்பியிருந்தாலும் நாடகத் தனத்தைத் தவிர்த்திருக்கலாமே.

கொஞ்சம் கூடுதல் ரசனையோடு இருந்திருந்தால், ‘சொன்னா புரியாது’ இன்னும் இனித்திருக்கும்!
- குங்குமம் விமர்சனக் குழு