வம்பு பேசுறவங்க வாயை மூடறது என் வேலை இல்லை!





‘பளிச்’சென்று இருக்கிறார் ஸ்ருதி. ஆச்சர்யமாக இருக்கிறது. மிகவும் பதற்றப்படுவார், சட்டென்று கோபம் வந்துவிடும், மனதில் பட்டதை யோசிக்காமல் சொல்லிவிடக் கூடியவர் என்றெல்லாம் கடந்த காலங்களில் பேசப்பட்டவரா இவர்?

‘‘எல்லாரும் நினைச்சாங்க. அப்பா இருக்கிறதால இந்தப் பொண்ணுக்கு எல்லாமே சுமுகமாக இருக்கும்னு. அப்படியெல்லாம் எனக்கு இல்லை. இப்ப இருக்கிற சினிமாவும் அப்படி இல்லை. முதல் படத்தின் பெயர் கூட (‘லக்’) எனக்கு கிடைக்கலை. அதற்கு பக்குவம் வர வேண்டி இருந்தது. எது செய்தால் சரியாக வரும்னு புரிபட ஆரம்பிச்ச நேரம்... ‘கப்பர் சிங்’ பயங்கர ஹிட். ‘ஞி ஞிணீஹ்’ பெரிய மரியாதையைக் கொண்டு வந்தது. சில சமயங்களில் சில விஷயங்கள் நாம் ஆசைப்பட்ட மாதிரியே பளிச்னு வந்து நிக்கும்ல, அப்படி இப்ப இருக்கு’’ - நீளக் கண்களில் புன்னகை பூசிச் சொல்கிறார் ஸ்ருதி.



‘‘இப்ப மாறியிருக்கிற சினிமாவை உணர்கிறீர்களா?’’
‘‘முன்னே மாதிரி எந்த டைரக்டரும் இன்னிக்கு நடிகனுக்கு கதை சொல்லாமல், ஸ்கிரிப்ட்டைக் காட்டாமல் நடின்னு சொல்ல முடியாது. இப்ப சினிமா ஒரு டீம் ஒர்க். அருமையான சிநேகிதம் நிறைஞ்ச சூழல். ‘இப்படிச் செய்யலாமா, அப்படி மாத்திக்கலாமா’ன்னு இம்ப்ரூவ் பண்றதுக்கான எல்லா முயற்சியும், சினிமாவின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடந்துக்கிட்டு இருக்கு. சொல்லப்போனால் சினிமாவின் அருமையான காலம் இப்போ வந்திருக்கு. ஒரு சினிமாவில் நான் மட்டும் நல்லா செய்திருக்கேன்னு சொன்னா, எனக்கு சந்தோஷம்தான். ஆனால், அதில் என்ன பெருமை? படமும் நல்லா இருக்கிறது முக்கியம் இல்லையா? அப்படி யோசிக்கிறவங்க நிறைஞ்சிருக்குறது இன்றைய சினிமாவுக்கு நிச்சயம் நல்லது.’’

‘‘பாடலுக்காகவும், இசைக்காகவும் சினிமாவிற்கு வந்த மாதிரி ஆரம்பத்தில் இருந்தீங்க... இன்னிக்கு நீங்க முழுநேர நடிகை!’’
‘‘இல்லையே... இப்பவும் பாடிக்கிட்டு இருக்கேன். ‘ஞி பீணீஹ்’ யில் நான் பாடின பாட்டு எல்லாரையும் கவர்ந்ததே. இசை எங்கே போகும்? அது என் கூடத்தானே இருக்கு. அதுக்கு உடம்பை ட்ரிம்மா வச்சுக்கணும், முகத்தை அழகாக வச்சுக்கணும், வெயிட் போடக்கூடாதுன்னு தேவையில்லையே. இசை என்பது என்னோட உச்சபட்ச ஆர்வம்... உயிர்... ஒண்ணா கலந்த ஆத்மா. இசையில் கரைந்து கொள்ள என்னால் எப்போ வேண்டுமானாலும் முடியும். எந்த இடத்தில் இருந்தாலும் டெடிகேஷன், ஹானஸ்ட் வேணும்னு நினைப்பேன்.
அப்பாவைப் பார்த்தீங்களா... எவ்வளவு வருஷமா அந்த ஆர்வம் இருந்து வளருது பாருங்க. அவர் செய்ததில் என்ன பெரிசா செய்திட்டேன் நான்? இப்பக்கூட எனக்கு நாளெல்லாம் ஷூட்டிங்ல இருந்திட்டு, ‘ஒரே கால் வலி... நடக்க முடியல’ன்னு இருந்தா பிடிக்குது. ரெண்டு நாள் ஷூட்டிங் போகலைன்னா என்னவோ போல இருக்கு. இப்படி நான் சொல்றதைக் கேட்டா, அப்பாவுக்குப் பிடிக்கும்.’’



‘‘கமல் ‘விஸ்வரூபம்’ மாதிரி சாகசங்களை செய்யும்போது, பணத்தை எங்கேயாவது சேர்த்து வைக்காம சினிமாவிலேயே போடுவதை மகளாக கண்டிப்பீர்களா?’’
‘‘அய்யய்யோ, அவர்கிட்ட என்ன சொல்ல முடியும்? அவர் ரொம்ப சுதந்திரமான மனிதர். எல்லார் சொல்றதையும் கேட்டுட்டு, அவர் சொந்த முடிவை மட்டுமே எடுப்பார். நேர்மை ஜெயிக்குமான்னு தெரியலை... ஆனால், நியாயம் கண்டிப்பா உலகத்துக்குப் புரியும்னு நினைப்பார். எனக்கோ, அக்ஷராவுக்கோ, அப்பாவுக்கு புத்தி சொல்ற தகுதியே கிடையாது. அவருக்கே எல்லாம் தெரியும், புரியும். தேவையில்லாத ரிஸ்க் எதுவும் அவர் எடுக்கவே மாட்டார்.’’
‘‘நீங்க பேசுவதில் உங்க வயசை விட முதிர்ச்சி தெரியுது. ஏன்?’’

‘‘அதுக்குக் காரணமும் அப்பாதான். எங்களை ஒரு கூண்டுக்குள் வச்சு வளர்க்கவே இல்லை. செய்யிறது சரி, தப்புன்னு உங்களுக்கு தெரியணும்னு சொல்வார். இருக்கிற காலகட்டத்தோட நல்லது, கெட்டதுகளை புரிஞ்சுக்கணும்னு நினைப்பார். வெளியே என்ன நடக்குதுன்னு ஜன்னலைத் திறந்து பார்க்க வைப்பார். அறிவைத் தேடிக்கிட்டே இருக்கணும்பார். ஓப்பனா, ஹானஸ்ட்டா, தெளிவா இருப்பது அவருக்குப் பிடிக்கும். எந்தக் கொள்கைகளையும் எங்க மேல திணிக்க மாட்டார். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு; அவருக்குக் கிடையாதுங்கிறது தெரிஞ்ச விஷயம். ஆபத்தின் விளிம்புவரை போய் எட்டிப் பார்க்கும் ஒரு முனைப்பு அவர்கிட்டே இருந்துகிட்டே இருக்கும். எனக்கு அப்பாவோட பல விஷயங்கள் பிடிக்கும். அப்பான்னு அதிகாரத்தோட எங்ககிட்ட ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. ஒரு நண்பன் மாதிரி, கடுமை
இல்லாத பகிர்தல் மட்டும்தான் எப்பவும்.’’



‘‘உங்க நடிப்பு மேல அப்பாவுக்கு என்ன அபிப்பிராயம்?’’
‘‘அப்பாகிட்டே கேட்கிறதை என்கிட்டே கேட்கறீங்க. ஆனாலும் அவருக்கு ‘3’ பிடிச்சது. அதில் என்னோட காமெடியை ரசிச்சார். அழுகை கூட ஈஸிதான். ஆனால் சிரிக்க வைக்கிறது பெரிய வேலைன்னு அவருக்கு எண்ணம். என்னோட ‘ஞி பீணீஹ்’ பிடிச்சது. என் ஆக்டிங் பத்தி நாலஞ்சு வார்த்தை சொன்னாலும் அதில் நான் நிறைய புரிஞ்சிக்க முடியும். நடிப்போட பல பரிமாணங்களைப் பார்த்தவர். அவர் நாலு வார்த்தை சொன்னாலும் முக்கியம்தானே!’’

‘‘அப்பா மாதிரியே... கடைசியா உங்க கிட்டே கேட்க வேண்டிய கேள்வி ஒண்ணு இருந்துக்கிட்டே இருக்கு. சித்தார்த், தனுஷ்னு உங்களைச் சுற்றி...’’
‘‘சம்பளம், நடிக்கிறது பற்றி கூட யார் வேண்டுமானாலும் கேட்கலாம். எனக்கும் அது பத்திப் பேச ரொம்ப விருப்பமா இருக்கும். ஆனால், சொந்த வாழ்க்கையைப் பத்தி கேள்வி கேட்க யாருக்கும் உரிமையே கிடையாது. வித் டியூ ரெஸ்பெக்ட்... நான் கடந்த காலத்தைப் பற்றி பேச விரும்பவில்லை. என்னைப் பத்தி பேசுறவங்க வாய்க்கெல்லாம் நான் செலபன் டேப் எடுத்து ஒட்ட முடியாது. அது என் வேலையும் இல்லை! எனக்குன்னு இருக்கிற ஒரு ஸ்பேஸில் யாரும் என்னைத் தொந்தரவு பண்ணாமல் இருக்கிறது பிடிக்கும். நான் எதை நோக்கி உழைத்தேனோ, அதற்கான பலன்களை இப்ப சினிமாவில் அனுபவிக்கிறேன். அந்த சந்தோஷமே எனக்குப் போதும்!’’
- நா.கதிர்வேலன்