தாய்லாந்து டைரி





தமிழ் சினிமா ஹீரோ, ஹீரோயின்கள் கண்ணை மூடி கனவு கண்டால், அடுத்த நொடியில் டூயட் பாடுவது பெரும்பாலும் தாய்லாந்து பீச் லொகேஷனாக இருக்கும். பட்டாயா, புக்கெட் என அதில் சில பீச்கள் இங்கு படு பாப்புலர். இங்கெல்லாம் சபலத்தோடு போய் பணத்தை இழந்து வந்த நம்ம ஊர் இளைஞர்கள் அநேகம். இந்தக் கதைகளை வைத்து தாய்லாந்தை கணித்துவிட முடியாது. இதையெல்லாம் தாண்டி, குழந்தைகள் குடும்பத்தோடு போய் ரசிக்க பரிசுத்தமான இடங்கள் தாய்லாந்தில் உண்டு. குறிப்பாக இயற்கை அன்னை பெருங்கருணையோடு படைத்த கொள்ளை அழகு பீச்கள் தாய்லாந்தில் ஸ்பெஷல். பசுமை போர்த்திய மலைகளும் பாறைகளும் பின்னிக் கிடக்கும் பீச்கள் அதிசயிக்க வைப்பவை.

அந்தமான் கடல் நமக்குச் சொந்தமாக இருக்கலாம். ஆனால் அந்தமான் கடலின் முத்து தாய்லாந்துக்கு சொந்தம். ஆம், புக்கெட் தீவுக்கு அப்படித்தான் பெயர். பவழப்பாறைகள் நிறைந்த கடற்பகுதி என்பதால் பச்சையும் நீலமும் கலந்த பளிங்கு நிறத்தில் கடல் மின்னும். 540 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருக்கும் தாய்லாந்தின் மிகப்பெரிய தீவான இதன் கரையெங்கும் வெவ்வேறு பெயர்களில் கடற்கரைகள்.

இதில் படாங் பீச் புகழ்பெற்றது. உலகின் எந்த மூலையில் தயாராகும் பொருளையும் இங்கு வாங்கலாம். இரவிலும் கூட இரைச்சலோடு இளைஞர்கள் உற்சாகம் காட்டும் இந்த பீச் அவர்களுக்கானது. கட்டா பீச் பணக்காரர்களுக்கானது. ஒரு பெரிய பாறை இந்த பீச்சை இரண்டாகப் பிரித்துக் காட்டும் அழகு, ரசனையானது! பனைமரங்களும் வெதுவெதுப்பான தண்ணீரும், அமைதியான சூழலும் உங்களைக் கடலில் குளிக்க அழைக்கும். ரவாய் பீச்சில் சூரிய அஸ்தமனக் காட்சி பிரமிக்க வைக்கும். கரோன் பீச்சில், திரைப்படங்களில் மட்டுமே பார்க்கிற துல்லியமான ஆழ்கடல் காட்சிகளை நேரில் பார்க்கலாம். அத்தனை சுத்தம்!



புக்கெட் தவிரவும் பட்டாயா, ஹுவா ஹின், க்ராபி, கோ சமூய் என ஏராளமான கடற்கரை பிரதேசங்கள் தாய்லாந்தில் உண்டு. குடும்பத்தோடு படகுகளில் சென்று ரசிக்கும் பீச் லொகேஷன்கள் சில; சாகச விளையாட்டுகளில் ஈடுபட இளைஞர்கள் வரும் பீச்கள் பல. டைவிங், ஸ்னோர்க்லிங், சர்ஃபிங், ஸீ கயாகிங் என எல்லாவற்றுக்கும் மிகச் சிறந்த உபகரணங்களோடு கடல் காத்திருக்கிறது.

தாய்லாந்தில் தங்குமிடமும் உணவும் அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி கிடைப்பது ஆரோக்கியமான விஷயம். புக்கெட்டில் இருக்கும் காஸ்ட்லி ரிஸார்ட்ஸ்களுக்கு மத்தியில் தரமான ஒரு பட்ஜெட் ஹோட்டலையும் பார்க்க முடியும். அநேகமாக அனைத்து சுற்றுலா தலங்களிலும் கொஞ்சம் மெனக்கெட்டு தேடினால், இந்திய உணவகங்களைக் கண்டுபிடித்துவிடலாம். பாங்காக்கில் நிறைய உண்டு. இட்லி, நெய் தோசை கூட கிடைக்கிறது. ‘தாய் உணவு’ கிட்டத்தட்ட இந்திய உணவு போலத்தான். அவர்களின் ‘ஜாஸ்மின் ரைஸ்’ நம்ம ஊர் சீரக சம்பாவை விட மென்மையாக இருக்கிறது; ருசிக்கிறது. ஆனாலும் அரிசி சாதத்துடன் சாம்பார், வத்தக்குழம்பு, ரசம் என கலந்து சாப்பிடும் பக்குவம் அங்கு இல்லை. தேங்காய் பாலைக் கொதிக்கவிட்டு, அதில்தான் பல அயிட்டங்களை சமைக்கிறார்கள். அந்த வாசனை உங்களுக்குப் பழகினால், தாய் உணவை வெளுத்துக் கட்டுவது சாத்தியம். இல்லாதவர்கள், அங்கு மலிவாகக் கிடைக்கும் மங்குஸ்தான், துரியன், பப்பாளி பழங்களில் பசியாறிக் கொள்ள வேண்டியதுதான்!  



எப்படிச் செல்வது?
இந்தியர்களுக்கு திடீரென நினைத்துக்கொண்டு தாய்லாந்து சென்று விடலாம் என்பது வசதி. அங்கே விமான நிலையத்தில் போய் இறங்கியதுமே விசா பெற்றுக் கொள்ளலாம். ஆறு மாதங்களுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட், திரும்பி வர விமான டிக்கெட், கையில் செலவுக்கு சுமார் இருபதாயிரம் ரூபாய் அளவுக்கு பணம் இருப்பதற்கு அத்தாட்சி, தாய்லாந்தில் தங்குவதற்கு இடம் பதிவு செய்ததற்கான ரசீது ஆகியவை இருந்தால் போதும். ஒரு மாத காலத்துக்கு விசா கொடுக்கிறார்கள். (சென்னையிலிருந்தும் விசா எடுத்துக்கொண்டு போகலாம்.) தாய்லாந்து கரன்சியை ‘பாட்’ என அழைக்கிறார்கள். விசா கட்டணம் ஆயிரம் பாட். (நம்ம ஊர் மதிப்பில் 2000 ரூபாய்.)

சுற்றுலாதான் தாய்லாந்தின் அட்சய பாத்திரம் என்பதால், ‘டூரிஸ்ட் போலீஸ்’ என தனியாக போலீஸில் ஒரு பிரிவு உண்டு. முக்கிய சுற்றுலாத் தலங்களில் இவர்கள் இருக்கிறார்கள். பொதுவாக தாய்லாந்து மக்கள் ஆங்கிலத்தில் வீக் என்றாலும், சுற்றுலா போலீஸார் ஓரளவு புரிந்துகொண்டு பேசுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுகிறார்கள். சமீபகாலமாக தாய்லாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் இந்த வேலைக்கு எடுக்கிறது அந்த அரசு.

மேலும் விபரங்களுக்கு:
www.tourismthailand.org
email: tatmumbai@tat.or.th

ஷாப்பிங்!
தாய்லாந்து செல்லும் பலரும் பெருமளவில் ஷாப்பிங் செய்கிறார்கள். நம்ம ஊர்க்காரர்கள் பலரும் விரும்பி வாங்குவது 40 இன்ச் எல்.சி.டி டிவி. இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் விலையில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய் வித்தியாசம். அதிகம் பேர் இப்படி வாங்குவதால், முன்னணி டி.வி நிறுவனங்கள் பலவும் விமான நிலையங்களுக்கு அருகே ஷோரூம் திறந்திருக்கின்றன.

தாய்லாந்தின் இன்னொரு அட்ராக்ஷன் துணி வகைகள். மால்களின் தேசம் அது. நம்ம ஊரின் நான்கைந்து மால்களை ஒன்றாகச் சேர்த்தது போன்ற ஷாப்பிங் மால்கள் அங்கே நிறைய. எம்.பி.கே, பிளாட்டினம் என பாங்காக்கின் மால்களில் எப்போதும் தள்ளுபடி உண்டு. பிளாட்டினம் மாலுக்கு எதிரே, நம்ம ஊர் பாண்டி பஜார் போல ‘பிராதுநாம் மார்க்கெட்’டில் வீதிக்கடைகளும் உண்டு. ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள்! நம்ம ஊர் மதிப்பில் நூற்றைம்பது ரூபாயில் தரமான ஒரு ஷர்ட் வாங்குவது இங்கு சாத்தியம். குழந்தைகள், பெண்கள், இளைஞர்களுக்கான துணி வகைகள் ஏராளம். பேரம் பேசும் திறமை இருந்தால், சல்லிசாக வாங்கலாம். நம்ம ஊர் இரண்டு ரூபாய் அங்கே ஒரு ரூபாய் என்பது நினைவில் இருக்க வேண்டும்!