கைதட்டல் : கே.ஆனந்தன்




‘‘வர்ற அஞ்சாம் தேதி என் பொண்ணுக்கு கல்யாணம்... உங்க ஆர்கெஸ்ட்ராவுக்கு சார்ஜ் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. நீங்கதான் வந்து கச்சேரி நடத்தணும். மொத்த பணமும் இப்பவே அட்வான்ஸா கொடுத்துடறேன்...’’ - ஆர்கெஸ்ட்ரா நடத்தும் என் நண்பன் குமாரிடம் சொன்னார் அந்த நபர்.

‘‘ஸாரி சார்... அன்னைக்கு வேற ஒரு ப்ரோகிராம் ஏற்கனவே புக் ஆகியிருக்கு!’’ என்று அவன் தீர்மானமாக சொல்லிவிட்டான். அவர் ஏமாற்றத்தோடு வெளியேறினார்.
ஒரு மணி நேரத்தில் ஓர் கிராமத்து கும்பல் உள்ளே வந்தது. ‘‘சார்... வர்ற அஞ்சாம் தேதி எங்க ஊர்ல தேர்த் திருவிழா... உங்க ஆர்கெஸ்ட்ரா வைக்கலாம்னு ஆசைப்படறோம்’’ என்றார் ஒருவர்.

‘‘ஓ... பண்ணலாமே! சார்ஜ் 25 ஆயிரம் ரூபாய்!’’
‘‘அவ்வளவு முடியாது சார்... இருபதாயிரம் தர்றோம். வந்து பண்ணிக் கொடுங்க’’ என்றதும் சற்று யோசித்தவன், ‘‘ஓ.கே... பண்ணிடலாம்...’’ என்று அட்வான்ஸ் வாங்கிக்கொண்டான்.
முன்பு வந்தவர் முழுப் பணமும் தருவதாய்ச் சொல்லியும், பொய் சொல்லி அனுப்பியது ஏன்? அவனையே கேட்டேன்.

‘‘டேய், கல்யாணத்துல நாம என்னதான் உயிரைக் கொடுத்துப் பாடினாலும் யாரும் கவனிக்க மாட்டாங்க... ஆனா, இந்த மாதிரி திருவிழாக்கள்ல, கை கொடுத்துப் பாராட்டுவாங்க... ஊக்கம் கொடுப்பாங்க... கஷ்டம் மறந்து சந்தோஷமா இருக்கும். என்னதான் பணம் முக்கியம்னாலும் கலைஞர்களுக்கு கைதட்டலும் தேவைப்படுதுல்ல!’’ என்றான் குமார்.