வாய்ப்பு : வி.சகிதா முருகன்





விவேக் முடிவெடுத்து விட்டான். எத்தனையோ இன்டர்வியூ போய் வந்தாயிற்று. கைநிறைய சான்றிதழ்கள் இருந்து என்ன பயன்? அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. எத்தனை நாள்தான் இப்படி ஏமாற்றங்களைத் தாங்கிக்கொண்டு தவிப்பது? பேசாமல் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டியது தான். வேகமாக மார்க்கெட்டுக்குக் கிளம்பினான். 

‘‘சார், வீரியமான பூச்சிக்கொல்லி மருந்து ஒரு பாட்டில் குடுங்க...’’
‘‘தம்பி! கொஞ்சம் பொறுங்க... நீங்களே பார்க்கறீங்களே, இங்கே எவ்வளவு கூட்டம்னு. கடையில் நான் மட்டும்தான் இருக்கேன். வேலைக்குக் கூட வேற ஆள் இல்ல. உங்களுக்கு முன்னாடி வந்தவங்களுக்கு குடுத்துட்டு வர்றேன்’’ - அவர் வார்த்தைகளால் மனதில் மின்னலடித்தது விவேக்கிற்கு.
‘நான் வேலை தேடி அலைகிறேன், வியாபாரம் செய்யும் இவர், ஆள் இல்லாமல் தவிக்கிறார்.’

கூட்டம் குறைந்ததும் கடை முதலாளியிடம் கேட்டான்... ‘‘சார், உங்க கடையில எனக்கு வேலை தர்றீங்களா?
பி.காம் வரைக்கும் படிச்சிருக்கேன்!’’
‘‘ஓ... தாராளமா தம்பி! படிச்சிருக்கீங்க... கணக்கு வழக்கையும் பார்த்துக்குவீங்க... நாளையில இருந்தே வேலைக்கு வந்திடுங்க!’’

‘‘நன்றி சார்’’ என்று கூறிப் புறப்பட்டவனைக் கேட்டார் கடை முதலாளி, ‘‘தம்பி, பூச்சிக்கொல்லி மருந்து கேட்டீங்களே?’’
‘‘என் மனசை அரிச்சிக்கிட்டிருந்த அவநம்பிக்கை எல்லாம் செத்துடுச்சு சார். இனி அது தேவைப்படாது!’’
என்றான்.