காது : பம்மல் நாகராஜன்





‘‘கொஞ்ச நாளாவே காது கொஞ்சம் சரியாக் கேட்கல...’’
‘‘டாக்டர்கிட்ட காட்டேன்!’’
‘‘வயசானா பொதுவா வர்ற பிரச்னைதானே இது... இதுக்கு ஏன் டாக்டர்கிட்ட போகணும்? காசு செலவாகுமேன்னு யோசிக்கிறேன்!’’
‘‘என்ன பெரிய செலவாயிடப் போகுது? பார்த்துட்டு மாத்திரை எழுதித் தரப் போறாங்க!’’
‘‘போறேன்... போய்க் காட்டறேன்!’’
‘‘அலட்சியமா இருக்காம, போய் செக்கப் பண்ணிக்க...’’
‘‘சரி... சரி...’’
‘‘ஆமா! காது கேட்கலன்னு சொல்றே... ஆனா, நான் கேட்கிற கேள்விக்கெல்லாம் எப்படி டாண் டாண்னு பதில் சொல்றே?’’
‘‘அப்படியா சொன்னேன்?’’
‘‘ஆமா! நான் மெதுவா பேசறதுகூட கேக்குதே... உனக்குக் காதுல எந்த கோளாறுமில்லேன்னுதான் தோணுது!’’
‘‘தேங்க்ஸ்...’’
‘‘அது போகட்டும். என்கிட்ட போன வருஷம் வாங்கின ஆயிரம் ரூபாயை எப்ப திருப்பித் தரப் போறே?’’
‘‘என்னது?’’
‘‘ஆயிரம் ரூபா கடன்...’’
‘‘மட்டன் விலை ஏறிடுச்சா? நான் சாப்பிடறதில்ல...’’
‘‘மட்டன் இல்ல... கடன்!’’
‘‘கட்டணம் இல்லாம இந்தக் காலத்துல யார் வைத்தியம் பாக்கறா?’’
‘‘நாசமாப் போக...’’
‘‘பாரேன்! நீ என்னவோ சொல்றே. காதுல விழுந்து தொலைய மாட்டேங்குது. டாக்டர்கிட்ட போய்த்தான் ஆகணும் போலிருக்கு... வரட்டா?’’