எனக்கு கேன்சர்தான்! : கனகா




‘கரகாட்டக்காரன்’ 365வது நாள் ஷீல்டு ஒட்டடை படிந்து ஒரு ஓரத்தில் இருக்க, அமைதியை அப்பிக்கொண்டு நிற்கிறது கனகாவின் அபிராமபுரம் வீடு. கடந்த வாரம் முழுக்க கனகாவின் இறப்புச் செய்தியும் மறுப்புச் செய்தியும்தான் மீடியாக்களின் ஹைலைட். இத்தனை ஆக்டிவாக இருக்கும் ஒருவருக்கு கேன்சர், மரணம், இறுதிக் காலகட்ட நிகழ்வு என கலர்கலராக கதைகள் கிளம்பியது விந்தை + விநோதம்!
‘‘என்னதான் ஆச்சு மேடம்’’ என நெருங்கிப் பேசினோம்...

‘‘இந்த நியூஸ் எப்படிப் பரவுச்சுன்னே தெரியல. புரளி பரப்பிய அந்த நல்ல உள்ளத்துக்கு என் வாழ்த்துகள். அந்தச் செய்தி வந்ததால் என் மேல் ரசிகர்கள் இன்னும் பிரியம் வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது. எனக்கு அந்தச் செய்தியில அதிர்ச்சி எதுவும் ஏற்படலை. இறப்பு பத்தின பயமும் எனக்கில்ல. என் அம்மா இறந்தப்பவே எல்லா வலிகளையும் அனுபவிச்சிட்டேன். உலகமே இருண்டு போயிட்டதாவும், எல்லாத்தையும் இழந்து கையறு நிலையில நிற்கிற மாதிரியும் உணர்ந்த நாள் அது. அதோட வச்சிப் பார்த்தா நான் இறந்துபோனதா வந்த இந்த செய்தி என்னை ஒரு இன்ச் கூட அசைச்சுப் பார்க்கலை. மனுஷனா பிறந்த எல்லாருமே ஒரு நாள் மண்ணுக்குப் போய்த்தான் தீரணும். ‘எங்கிட்ட பணம் இருக்கு... இந்த வாழ்க்கையை நிரந்தமாக்கிக்குவேன்’னு எவனாலும் சொல்ல முடியாது.’’ - தெளிவாகவே பேசுகிறார் கனகா.

‘‘ஆலப்புழை போய் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கிட்டதா சொன்னாங்களே?’’
‘‘எனக்கு கேன்சர்ங்கறது உண்மைதான்’’ என்று சிரித்தபடி பேச்சில் இடைவெளி விட்டவர், ‘‘என்னோட ராசிதான் கேன்சர் (கடக ராசி) மற்றபடி எனக்கு கேன்சர், சர்க்கரை நோய்னு எதுவுமே இல்லை. ஆலப்புழையில் சிகிச்சை பார்க்கவும் இல்லை. அந்த ஊர்ல அஷிதான்னு ஒரு ஃபிரண்ட் இருக்கா. ஆலப்புழைக்கும் எனக்கும் சம்பந்தம் அவ்வளவுதான். அவங்க வீட்டுக்குப் போயே பல வருஷமாச்சு. உண்மை அப்படி யிருக்கும்போது, அங்கே ஒரு கனகா எப்படி போனாள் என்றுதான் நானும் யோசிக்கிறேன்.’’
‘‘ஏன் இந்தத் தனிமை?’’



‘‘நானும் இங்கேதானே இருக்கேன். காட்டுல இல்லையே? தனியா இருக்கிற உணர்வு எனக்கு வந்ததில்லை. எனக்கு நாற்பது வயசாச்சுங்க. என்னோட உறவுன்னு சொல்லிக்க செல்லப் பிராணிகள் இருக்கு. பூனைகள், முயல்கள், அணில்கள் வளர்க்கறேன். சாப்பாடு இல்லாத மனுஷனுக்குக் கூட, இன்னொரு மனுஷன் சாப்பாடு போட்டுருவான்... ஆனா, வாயில்லா இந்த ஜீவன்களின் வயிற்றை யார் நிரப்புறது? கடவுள் நல்ல சந்தர்ப்பத்தை அமைச்சுக் கொடுத்தா, ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு நினைக்கிறேன்.’’
‘‘மனநிலை பாதித்து நீங்கள் தனியே பேசியபடி செல்வதாகவும், கோபப்படுவதாகவும் சொல்கிறார்களே?’’

‘‘பயங்கர காமெடியா இருக்குங்க. நான் யாரை பிய்த்துப் பிடுங்கினேன்... அப்படிச் சொல்ல? கபாலீஸ்வரர் கோயிலுக்கு நடந்தே போகும்போது, போன் வந்தால் ஹெட்போனில் பேசிக்கிட்டே போவேன். இதைப் பார்த்துட்டு தனியா பேசுறதா நினைச்சுக்கிட்டா, நான் என்ன சொல்றது? அப்புறம் யாருக்குத்தான் கோபம் வராது. கோபம் இல்லைன்னா, ஒண்ணு சாதுவா இருக்கணும்... இல்லைன்னா பொணமா இருக்கணும். நானும் சாதாரண மனுஷிதானே? எனக்கு கோபம் வரக்கூடாதா?’’

‘‘வீட்டு வாசலில் ஏகப்பட்ட சாமி படங்கள்... காரில் சங்குகள்... என்ன மாதிரி மாற்றம் இது?’’
‘‘வடபழநி கோயிலுக்குப் போகும்போதெல்லாம், ‘அக்கா பசிக்குதே’ன்னு சாமி படத்தை நீட்டி சின்னப் பசங்க வாங்கச் சொல்லுவாங்க. அப்படி வாங்கி வந்த படங்களைத்தான் இங்க வச்சிருக்கேன். அந்த சங்கு, மகாபலிபுரம் போயிருந்தப்போ வாங்கினது. மற்றபடி ஆவி, பில்லி சூனியத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.’’

‘‘நீங்கள் நடித்த படங்களைப் பார்ப்பதுண்டா? குறிப்பா ‘கரகாட்டக்காரன்’?’’
‘‘இப்போ எல்லாமே அட்வான்ஸ்டு. இந்தக் காலத்தில் அதைப் பத்திப் பேசிட்டிருந்தா எப்படி? ம்... அந்த மரண வதந்தி பரவின அன்னிக்கு ராமராஜன் சார் உடனே போன் பண்ணி விசாரிச்சார். பாவம், அவரும் இடையில ஒரு விபத்தினால கஷ்டப்பட்டார். வலியை அனுபவிச்சவங்களுக்குத்தான் இன்னொருத்தரோட வலி புரியும். ஒரு காலத்தில் பெரிய ஸ்டார்களோட நடிச்சவதான் நான். ஹீரோயினா நடிக்கிற வரைக்கும் நடிக்கிறதுங்கற கொள்கையோட இருந்தேன். கடைசியா ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில் மட்டும்தான் ஹீரோயினா நடிக்கல. அம்மா துணை இல்லாம நான் ஷூட்டிங் போனதே இல்லை. அவங்களோட இறப்புக்குப் பிறகு, ஷூட்டிங் ஸ்பாட்லயே அவங்க ஞாபகம் வந்து மைண்ட் அப்செட் ஆகிடும். அதனாலேயே வாய்ப்புகளைத் தட்டிக் கழிச்சேன். இனிமே நல்ல கேரக்டர்கள் வந்தா நடிக்க ரெடி!’’
- அமலன்
படங்கள்: புதூர் சரவணன்