நியூஸ் வே




மிர்ச்சி சிவாவும், பிரேம்ஜியும் ரொம்பவும் நெருங்கிய நண்பர்களாகி விட்டார்கள். திடீரென்று பிரேம்ஜியை வரச் சொல்லி லேட்டஸ்ட் மாடல் ஐ போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார் சிவா. காமெடி பிரேம்ஜிக்கு சிவாவின் அன்பைப் பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. என்ன ஒரு முரண்!
ரொம்ப நாளைக்குப் பிறகு வடிவேலு நடித்த படத்தை எடிட் செய்து போட்டுப் பார்க்கப் போகிறார்கள். ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதை சரிசெய்த பின்னர்தான் அடுத்த கட்ட ஷூட்டிங். வடிவேலுவின் கவனம் அந்த அளவுக்கு அந்தப் படத்தில் இருக்கிறது.

ஹீரோக்கள் வட்டாரத்தில் எல்லா நடிகர்களும் பொறாமைப்படுகிற நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார் விஜய் சேதுபதி. கிட்டத்தட்ட 2015 வரை கால்ஷீட் டைரி நிரப்பப்பட்டிருக்கிறது. எல்லாமே வகைவகையான வித்தியாசப் படங்கள்.

இரண்டு வருஷத்திற்குப் பிறகு மறுபடியும் மேக்கப் போட ஆரம்பித்துவிட்டார் சுந்தர்.சி. நல்ல கதை அகப்பட்டதால் இந்த முடிவு. அனேகமாக அதில் வடிவேலு நடிக்கக்கூடும். வின்னர்..?

மிஷ்கின் நெடுங்காலத்திற்குப் பிறகு ‘தங்க மீன்கள்’ சிறப்புக் காட்சிக்குத்தான் வந்திருந்தார். அப்படியும் யாரிடமும் அதிகமாக பேசவில்லை. அணுகிய டைரக்டர்களிடமும், நண்பர்களிடமும் இறுக்கமாக கை கொடுத்ததோடு சரி. வித்தியாச இயக்குநர்...



நல்ல நடிகராக இருந்து திடீர் திடீரென்று காணாமல் போவார் ராஜ்கிரண். அவரை ஒரு படத்தில் இணைய வைப்பதே பெரும்பாடாக இருக்கும். கேரக்டரில் சமாதானம் அடைய நிறைய நேரம் எடுத்துக் கொள்வார். இதனாலேயே அதிகம் தலைகாட்டாமல் இருந்த ராஜ்கிரணை வெற்றிமாறன் ஒரு ஸ்கிரிப்ட் சொல்லி, அரை மணி நேரத்தில் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். அதுதான் தனுஷ் நடிக்கும் ‘வேட்டைசாமி’.

நடிகைகளைப் பொறுத்தவரை குத்துப்பாட்டு என்பது துட்டுப்பாட்டாக ஆகிவிட்டது. பிரபுதேவா இயக்கும் ‘ராம்போ ராஜ்குமார்’ இந்திப் படத்தில் சார்மி 10 லட்சம் ரூபாயும் ‘மதகஜ ராஜா’வில் ஆடியிருக்கும் சதா 5 லட்சம் ரூபாயும் சம்பளமாக வாங்கியிருக்கிறார்கள்.

அமோகாவை ஞாபகம் இருக்கிறதா? ‘ஜேஜே’ படத்தில் அறிமுகமானவர், இப்போது நிஷா கோத்தாரியாக மாறியிருக்கிறார். வாய்ப்புகள் வற்றிய நிலையில் ‘படம் பேசும்’ படத்தில் காட்டுவாசி உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார்.

நீது சந்திரா பெரிதும் நம்பியிருந்த ‘ஆதிபகவன்’ கைகொடுக்காததால், இந்தி வாய்ப்புகளுக்காக வலை வீசிக்கொண்டிருக்கிறார். பார்ட்டிகள், ஃபேஷன் ஷோக்கள் எதையும் விடுவதில்லை.

மலையாளத்தில் ஐந்து டைரக்டர்கள் சேர்ந்து ஒரு படம் டைரக்ட் செய்து வெற்றி பெற்றதைப் பார்த்து தமிழிலும் அந்த முயற்சியில் இறங்கலாமா என டைரக்டர் யூனியன் யோசிக்கிறது. சர்க்குலர் விட்டு, ‘இது சாத்தியமா’ எனக் கேட்டிருக்கிறார்கள். எங்கே அழகா ஒரு லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்!

இயக்குனர் விஜய்க்கு மும்பையில் ஒரு அலுவலகம் இருக்கிறது. தனது விளம்பரப் படங்களின் நிர்வாக அலுவல்களுக்காக மட்டும் அதைப் பயன்படுத்துகிறார்.


முப்பது வயதாகி விட்டதை லண்டனில் வைத்துக் கொண்டாடுகிறார் தனுஷ். ஏற்கனவே மனைவி, குழந்தைகளை அங்கே அனுப்பி வைத்துவிட்டு, நண்பர்கள் அனிருத், சிவகார்த்திகேயன் துணையுடன் ஃப்ளைட் ஏறிவிட்டார். ‘ராஞ்சானா’ வெற்றியை அங்கே வைத்துத்தான் கொண்டாடுகிறார். இந்தியில் முதல் படத்திலேயே 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்றால் சும்மாவா!

தனுஷ் பற்றி இன்னொரு விஷயமும் சொல்வதற்கு இருக்கிறது... நண்பர்களையெல்லாம் டைரக்டர் ஆக்கும் முடிவுக்கு வந்துவிட்டார் தனுஷ். இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் அவரது ஆஸ்தான கேமராமேன் வேல்ராஜ். ‘பொல்லாதவன்’, ‘3’, ‘ஆடுகளம்’ என வேலை பார்த்த நட்புதான் காரணம். இதற்குமுன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படம் வெளியாகிக் கொண்டிருந்தது. எல்லாவற்றுக்கும் பிரேக் விட்டு கதையில் ஒன்றிவிட்டார் வேல்ராஜ்.

டாப்ஸி இன்றைக்கும் சென்னைக்கு வந்தால், ஷூட்டிங் இல்லாத நாட்களில் ஹோட்டலில் ட்ராப் செய்வது ஆர்யாதான். இல்லாவிட்டாலும் யாரையாவது அனுப்பி வைக்கிறார். நிச்சயமாக நல்ல ஃப்ரண்ட்ஷிப் மட்டும்தான். இவ்வளவு நட்புரீதியான நாயகனை தமிழ் சினிமா கண்டதில்லை என்கிறார்கள்.

இரண்டு ஹீரோயின்கள் கதை என்றாலும் முகம் சுளிக்காமல் கால்ஷீட் கொடுக்கிறார் டாப்ஸி. ‘கங்கா’வில் அஞ்சலியுடனும், ‘ஆரம்பம்’ படத்தில் நயன்தாராவுடனும் சேர்ந்து நடித்திருப்பவரிடம் துளியும் ஈகோ இல்லையாம்.

காதலாகி கசிந்துருகிக் கொண்டிருக்கிறார் ‘தில்லு முல்லு’ நாயகி இஷா தல்வார். அவரது காதல் தமிழ் மொழி மீதுதான். தமிழ் ஆசிரியரை ஸ்பெஷலாக நியமித்து, தமிழ் கற்று வருகிறார்.

சைலன்ஸ்

காதல் ஸ்பெஷல் டைரக்டரை வைத்து நடிப்பதாக இருந்த வெப்ப நடிகரின் படம் ஏனோ பூஜையோடு நிற்கிறது. ஒன்லைன் கேட்டு சமாதானம் ஆனவர், அடுத்த லைனுக்கு வரவில்லை என்கிறார்கள். வீட்டில் குழந்தைகளோடு இருக்கிற ஹீரோவை பார்த்தால் அவர் அந்த டைரக்டரின் படத்தில் நடிக்கப்போவதாகத் தோன்றவில்லை என்கிறார்கள். அடுத்து பிக்ஸ் செய்து வைத்திருக்கும் டைரக்டர் கதை தயாரிப்பில் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் கட்டாய விடுப்பு மாதிரி கட்டாய லீவு. அடடா!

நடிகனின் தாத்தா ஓகே சொல்லாத காரணத்தால் கல்யாணமும் நடக்கவில்லை, தமிழிலும் படங்கள் இல்லை. லீன் பீரியடில் இருந்தாலும், வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கிறார் ஒல்லி நடிகை. மற்ற நடிகைகளாக இருந்தால் கிட்டத்தட்ட துவண்டு போயிருப்பார்கள். அம்மா அருகே இருந்து அரவணைப்பதால் அடுத்த கட்டத்திற்கு இந்திக்குப்போக நினைத்திருக்கிறார் நடிகை.

தங்க மங்கையாகிவிட்டார் அனுஷ்கா. ‘ருத்ரம்மாதேவி’ சரித்திரப் படத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான அசல் தங்க நகைகளை அணிந்து நடிக்கிறார்.

அஞ்சலியின் இப்போதைய அவசர தேவை, உடம்பில் ஒரு சுற்று குறைப்பது. அதற்காக தீவிர யோகா, ஜிம் என தினமும் இரண்டு மணி நேரம் ஒதுக்கி உழைக்கிறார்.