பட்டத்துயானை : சினிமா விமர்சனம்




எல்லோருக்கும் தெரிந்த ஃபார்முலா. கொஞ்சமும் மூளையைக் கசக்காத சின்னக் கதை. அந்த சின்னக் கதையை அறிய விருப்பமா? ஒரு ஊரில் ஒரு சமையல் கான்ட்ராக்டர் சந்தானம். சந்தோஷமாகப் போகும் அவர் வாழ்க்கையில் மாற்றம் செய்ய வந்து சேரும் விஷால் அண்ட் கோ. ஓட்டல் வைக்க வந்த இடத்தில் சந்தானத்தின் பணப்பையையும், நாயகி ஐஸ்வர்யாவிடம் மனசையும் தொலைக்கிறார் விஷால். லோக்கல் தாதாவை ஐஸ்வர்யாவின் அப்பா முறைக்க, சேருகிறது பகை. ஹீரோயினைக் காப்பாற்ற சாதா விஷால், ‘பட்டத்து யானை’யாகி தாதாக்களை காலில் போட்டு மிதிப்பதுதான் மீதிக் கதை.

‘மலைக்கோட்டை’க்குப் பிறகு விஷாலுடன் இயக்குனர் பூபதி பாண்டியன் சேர்ந்திருக்கிறார். முன்பாதி காமெடி, பின்பாதி ஆக்ஷன் என கலந்தடித்து ‘பட்டத்து யானை’யில் பவனி வந்திருக்கிறார் விஷால். ‘முதலாளி... முதலாளி...’ என்று பம்மிப் பம்மி கொடுக்கும் யோசனைகள் எல்லாமே சந்தானத்துக்கு ஆப்பு வைத்து அவரை அம்போவாக்கும் காட்சிகளில் சிரிப்பு, நிஜமாகவே சிறப்பு! ‘‘என்னால முடியல சாமி... நீங்களே தோளில் தாங்குங்க’’ என பொறுப்பை சந்தானத்தின் தலையில் போட்டு நிம்மதியாய் இருக்கிறார் பூபதி பாண்டியன். கொஞ்சமும் ஹீரோ இமேஜ் பார்க்காமல் அதற்கு விஷாலும் உதவியிருக்கிறார். யானைப்பசிக்கு சோளப்பொரியைக் கொடுத்தால் அவர் என்ன செய்வார் பாவம்! விஷால் நடிப்பில் தேறி நாளாகிவிட்டது. பருவம் வந்த பிறகும் பயிர் செய்யாவிட்டால் எப்படி சார்?

இதிலும் காமெடி ஏரியாவில் பிச்சு உதறுகிறார் சந்தானம். கெட்டப், கேரக்டர் இரண்டிலுமே மாறுபட்ட சந்தானமாக வழக்கத்தைத் தாண்டி அதிகமாகவே ரசிக்க வைக்கிறார். ‘‘யார்ரா இவன் கலர் ஜெராக்ஸ் எடுத்த காட்சில்லா மாதிரி...’’ என வில்லனையே கலாய்க்கும் சந்தானத்தின் டைமிங் நக்கல், கலக்கல்! அப்பா பூங்காவனத்தின் (அதுவும் சந்தானம்தான்) போட்டோவை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு சந்தானம் அவர் புகழ் பாடுவதும் காமெடி சரவெடி!

நாயகியாக ஐஸ்வர்யா அர்ஜுன். சின்னக் குழந்தை... ஒண்ணும் சொல்லக் கூடாது. எனிவே... நடிப்பு ப்ளஸ் வனப்பை அடுத்த படத்திலாவது எதிர்பார்க்கலாமா? விஷாலின் நண்பர்களாக ஜெகன் வகையறா கலகலப்பு. மயில்சாமி கொஞ்ச நேரமே வந்தாலும் ரொம்ப நேரம் சிரிக்க வைக்கிறார்.



திடீரென, ‘‘அவன் சாதாரண ஆள் இல்லை... மூணு கொலை பண்ணிட்டு மதுரை ஜெயிலில் இருந்தவன்’’ என விஷாலின் ஃபிளாஷ்பேக் விரியும்போதே, ‘அடப் போங்கப்பா’ என்று அலுத்துக்கொள்கிறது ஆடியன்ஸ் ஏரியா. தாதாவாக ஜான் விஜய்யை எல்லாம் நம்ப முடியவில்லை. அத்தனை மிரட்டல், விரட்டல், உருட்டலோடு வரும் தாதா கூட்டம் நம்மைக் கூட பயமுறுத்தவில்லை. நாற்பது வருடமாகப் பழகி வரும் வழக்கமான திரைக்கதை பாணியை கொஞ்சம் மாற்றியிருக்கலாம். தாதாக்கள் ஆளுக்கு ஆள் உறுமியபடி எஸ்.யூ.வியில் போய்க்கொண்டே இருக்கிறார்கள். திடீர் திடீர் என்று ஹீரோவும் சந்தானமும் வந்து போகிறார்கள். சந்தானத்தின் வரவைத்தான் நாம் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியிருக்கிறது.

தமன் இசை என்னவோ ஆந்திராவில் தூள் பறக்கிறது என்கிறார்கள். ஆனால், இங்கே... பழகிய பழைய டியூன்களைத்தான் தருகிறார். இது எந்தப் பாட்டின் டியூன் என யோசிப்பதற்குள் பாடும் பாட்டை மறக்கிறோம்.
‘பட்டத்து யானை’ சிரித்துக் கொண்டே நடக்கிறது.
- குங்குமம் விமர்சனக் குழு