பொலிடிகல் பீட்





இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, உத்தரப் பிரதேசத்தில் மட்டுமில்லை... இந்தியா முழுக்க தலைப்புச் செய்தி ஆகிவிட்டது. கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் ஆளுங்கட்சி ஆதரவில் செயல்பட்ட மணல் மாஃபியாக்களை ஒழிக்க முயன்றதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அம்பலமாகிவிட்டது. உ.பி எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரது சஸ்பென்ஷனை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. தனது மாமாவும் எம்.பியுமான ராம்கோபால் யாதவும் இதைக் கண்டித்ததில் அப்செட் ஆகிவிட்டார் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ். இதைவிட அவருக்கு நெருக்கடி கொடுத்த விஷயம்... பஞ்சாப் மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்ததுதான்.

கடந்த 2009ம் ஆண்டு அகில இந்திய அளவில் 20வது இடம்பெற்று தேர்வு பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆன துர்கா, முதலில் பணிபுரிந்தது பஞ்சாப் மாநிலத்தில்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேக் சிங் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை திருமணம் செய்துகொண்டு, உ.பிக்கு டிரான்ஸ்பரில் வந்தார். ‘‘நேர்மையும் துணிச்சலும் மிக்க இளம் அதிகாரி அவர். தங்கள் மாநிலத்தில் வாழ வந்த மருமகளை இப்படித்தான் நடத்துவதா?’’ என கொதிக்கிறது பஞ்சாப் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம்.

தெலங்கானா சர்ச்சையில் ஒரு நல்ல விஷயம் பறி போய்விடும் போலிருக்கிறது. சட்டமன்றங்களில் மசோதாக்கள், மானிய கோரிக்கைகள் என பல புத்தகங்களை அச்சிடுவதாலும், பல நடைமுறைகளை பிரதி எடுப்பதாலும் ஏகப்பட்ட காகிதங்கள் செலவாகின்றன. எல்லாவற்றையும் மின்னணுமயமாக்கி, ‘காகிதங்கள் பயன்படுத்தாத சட்டப் பேரவை’ என்ற பெயரை முதலில் பெற இருந்தது ஆந்திர சட்டப் பேரவை. உலக வங்கியின் உதவியுடன் சுமார் 16.5 கோடி ரூபாயில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம். போராட்டங்களால் இந்தத் திட்டமும் முடங்கிவிட்டது.

‘‘குஜராத் கலவரங்களால்தான் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு உருவானது’’ என்று பேசி சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது, இப்போது அடுத்த சர்ச்சையில் சிக்கி விட்டார். பி.ஜே.பியோடு தனது கட்சியை இணைக்க ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி பேச்சு நடத்துவதைக் கேள்விப்பட்டு, ‘‘அந்தக் கட்சியில் சுவாமியைத் தவிர யார் இருக்கிறார்கள்? துப்பறியும் நிபுணர்களை வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும்’’ என ஷகீல் சொல்ல, கடுப்பில் இருக்கிறார் சுவாமி.

விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுற்றிச் சுற்றி வருகிறார் அன்னா ஹசாரே. அவரது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் பல நகரங்களில் கூட்டங்கள் நடத்துகிறார்கள். மாநிலத்தின் மோசமான சாலைகளில் பயணித்து அவருக்கு உடல்நலம் கெட்டுவிட்டது. ‘‘ஊழலைவிட இந்த சாலைகளை எதிர்க்க வேண்டும் போலிருக்கிறதே’’ என அவரது குழுவினர் இப்போது பேசுகிறார்கள்.