இந்தியாவை 50 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்!





இந்தியாவின் 29வது மாநிலமாக உதயமாகப் போகிறது தெலங்கானா. ஐம்பது ஆண்டு கால மக்கள் போராட்டத்தை மதித்து, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டது காங்கிரஸ் அரசு. ‘‘இதைச் செய்திருக்காவிட்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவில் காங்கிரஸ் ஒன்றுமில்லாமல் ஆகியிருக்கும். தேர்தல் நிர்ப்பந்தங்களுக்காக இந்தப் பிரிவினையைச் செய்திருக்கிறது காங்கிரஸ்’’ என எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. இதற்கு ஏற்றபடி, ‘‘காங்கிரஸைக் காப்பாற்ற நாங்கள் விஷம் குடிக்கிறோம்’’ எனச் சொல்கிறார் கடலோர ஆந்திரா காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர். எதிர்ப்பவர்களும் ஆதரிப்பவர்களும் சொல்லும் விஷயம் ஒன்றுதான்... ‘‘இந்தப் பிரிவினை இந்திய வரைபடத்தில் இன்னும் பல புதிய கோடுகளை உருவாக்கிவிடும்!’’

இந்தியாவில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதைந்ததற்கு முக்கியமான காரணம், சகிப்புத்தன்மை குறைந்ததுதான்! பெரிய குடும்பங்களில் சிலர் அதிகம் உழைப்பார்கள்; சிலர் கொஞ்சம் உழைப்பார்கள்; சிலர் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். ஒருவர் உழைப்பில் இன்னொருவர் உட்கார்ந்து சாப்பிடுவதை நெருங்கிய உறவுகளிலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மொழி வேறு; பண்பாடு வேறு; வாழ்க்கைமுறை வேறு என இருக்கும் மக்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்?

தெலங்கானா உதயம், பல பழைய கோரிக்கைகளைக் கிளறி விட்டிருக்கிறது; புதிய குரல்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ‘மேற்கு வங்காளத்தைப் பிரித்து, டார்ஜிலிங்கை தலைநகராக வைத்து கூர்க்காலாந்து மாநிலத்தை உருவாக்க வேண்டும்’ என்ற போராட்டம் உடனடியாக தீவிரம் அடைந்திருக்கிறது. இதுவரை 1200 பேரை பலிகொண்ட போராட்டம் இது. உத்தரப் பிரதேசத்தை பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட், அவாத், ஹரித் பிரதேசம் என நான்காகப் பிரிக்க வேண்டும் என்று ஏற்கனவே மாயாவதி முதல்வராக இருந்தபோது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது. அது மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. இதேபோல மகாராஷ்டிராவைப் பிரித்து விதர்பா, அசாமைப் பிரித்து போடோலேண்ட், ஒடிஷாவைப் பிரித்து காம்தாபூர், கர்நாடகாவைப் பிரித்து கூர்க் என பட்டியல் நீள்கிறது.

இந்தப் பிரிவினைகளால் விரோதங்கள் மேலும் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம். இயற்கை வளங்களுக்காகவும், நிலத்துக்காகவும் மீண்டும் மீண்டும் மோதல்கள் எழக்கூடாது. அண்டை மாநில உறவு என்பது, அண்டை தேசங்களின் பகையைவிட மோசமானதாக மாறி வருகிறது. சண்டிகரை பொதுத் தலைநகராக வைத்திருக்கும் பஞ்சாப்பும் ஹரியானாவும் காலம் காலமாக மோதிக் கொள்கின்றன. இப்போதுகூட ‘நியூ சண்டிகர்’ என்ற பெயரில் சண்டிகருக்கு வடக்கே ஒரு துணை நகரத்தை நிர்மாணிக்க பஞ்சாப் முயற்சி செய்கிறது. ‘‘சண்டிகரின் பேரைக் கெடுத்தால் நடக்கறதே வேற... நீங்க மூட்டை, முடிச்சுகளை எடுத்துக்கொண்டு கிளம்புங்க’’ என கொதிக்கிறார் ஹரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராக அழிச்சாட்டியம் பண்ணுகிறது கேரளா. சென்னை மாகாணத்துக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் போடப்பட்ட ஒப்பந்தமே செல்லாது என வாதம் செய்கிறது. தெலங்கானாவுக்கும் ஆந்திராவுக்குமே இப்படி நேரக்கூடும். கிருஷ்ணாவும் கோதாவரியும்தான் ஒட்டுமொத்த ஆந்திரத்தை வளம் கொழிக்கச் செய்யும் நதிகள். கிருஷ்ணா ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 68 சதவீதம் தெலங்கானாவில் இருக்கிறது; ஆனால் கிருஷ்ணா நீரில் 32 சதவீதம்தான் அந்தப் பகுதியின் பாசனத் தேவைகளுக்குப் போகிறது. 70 சதவீதம் எங்களுக்கு வேண்டும் என தெலங்கானா போராட்டக் குழு சொல்கிறது. கோதாவரியிலும் இதேபோல சர்ச்சை இருக்கிறது. இரண்டு தரப்புக்கும் நீர்ப் பங்கீடு பிரச்னை பெரிதாக வெடிக்கக்கூடும்.



எனினும் ‘சிறிய மாநிலங்களே பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவும்’ என்கிறார்கள் நிர்வாகவியல் நிபுணர்கள். இந்தியாவில் 29 மாநிலங்கள் என்றால், ஐரோப்பிய யூனியனில் 28 நாடுகள் இருக்கின்றன. உலகின் உச்சபட்ச பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளும் இதில் அடக்கம். ஐரோப்பிய யூனியனில் ஒரு தேசத்தின் சராசரி மக்கள்தொகை 1 கோடியே 80 லட்சம். அமெரிக்காவில் 50 மாகாணங்கள் இருக்கின்றன; ஒரு மாகாணத்தின் சராசரி மக்கள்தொகை 62 லட்சம். ஆனால் இந்தியாவிலோ ஒரு மாநிலத்தின் சராசரி மக்கள்தொகை 4 கோடியே 20 லட்சம். இதில் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 20 கோடி பேர் இருக்கிறார்கள். எப்படி நிர்வகிக்க முடியும்?

சிறிய மாநிலங்கள்தான் இங்கே வளர்ச்சி காட்டுகின்றன. ஹரியானா, பஞ்சாப், கோவா என இதற்கு உதாரணங்களை பட்டியல் போடலாம். இப்படிக் கணக்கிட்டு, ‘‘அமெரிக்கா போல இந்தியாவையும் ஐம்பது மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். அப்போதுதான் நிர்வாகம் மேம்படும்’’ என்கிறார்கள் நிபுணர்கள்.

சிறிய மாநிலங்களில் மக்களின் குரல் சீக்கிரமே ஆள்பவர்களை எட்டும். அதிகாரத்தின் காதுகள் தூரப் போய்விடாது. ஆள்பவர்களும் ஆளப்படுகிறவர்களும் நெருக்கமாக இருப்பார்கள். அதனால் மக்கள்விரோத முடிவுகள் எடுக்க முடியாது. வெவ்வேறு இனக்குழுக்கள் சிறிய மாநிலங்களில் இருக்காது; எனவே ஒருவரை தாஜா செய்ய இன்னொருவருக்கு அநீதி இழைக்கும் போக்கு இருக்காது.

மகாராஷ்டிரா வளர்ந்த மாநிலம். அதில்தான் இருக்கிறது விதர்பா. மகாராஷ்டிராவின் கனிம வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு விதர்பாவில் இருக்கிறது; மழைக் காடுகளில் 75 சதவீதம் இங்குதான் இருக்கிறது; மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தியும் இங்குதான் நடக்கிறது. ஆனால் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும் இங்குதான்! இவர்களின் ஓலம் மும்பையில் இருக்கும் சட்டமன்றத்தை எட்டாதபோது, எப்படி இணைந்திருப்பது சாத்தியம்?
- அகஸ்டஸ்