செல்வராகவன் கௌதம் மேனன் நான்





ஹீரோ மாதிரியே இருக்கிறார் ஹாரிஸ்.
‘‘என்ன, உங்களுக்கும் ஏதாவது திட்டமிருக்கா?’’ என்றால், ‘‘அய்யோ... போங்க சார்’’ என வெட்கப்படுகிறார். ‘‘அவ்வளவா தோற்றத்தில் கவனம் எடுக்க மாட்டேன். இசைக் கச்சேரிகளில் தோன்ற ஆரம்பித்ததும் ‘அடடா... இது முக்கியமாச்சே’ன்னு பட்டது. இத்தாலியிலிருந்து ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட் வந்திருந்தார். போடுகிற உடையெல்லாம் மாறிச்சு. எடை குறைப்பும் முக்கியம். ஸ்டைலை பின்பற்றப் போயி, பாடி கண்டிஷனுக்கு வந்திருச்சு. இப்ப என் உடம்பு நான் சொல்றதைக் கேட்கும்’’ , பேட்டிக்குப் போனால் டிப்ஸ் தருகிறார் ஹாரிஸ்.

‘‘ஏன்... கடைசி நேரத்தில், ‘இரண்டாம் உலகத்’திலிருந்து வெளியே வந்திட்டீங்க?’’

‘‘அந்தப் படம் ரொம்ப நாள் தயாரிப்பில் இருந்தது. ‘துப்பாக்கி’ சமயத்தில் ஆரம்பித்த படம். எனக்கு வரிசையில் மூணு படங்கள்... நிறைய வேலை. ‘திடும்’னு கொண்டாந்து கொடுத்திட்டு, ‘சீக்கிரம் முடிச்சுக் கொடுங்க’ன்னு கேட்டார். அவசர அவசரமா வேலை செய்து பழக்கமில்லை. அதனால் நானே சந்தோஷமா ‘வேற யாரையும் வச்சு பின்னணி இசை பண்ணிக்கங்க’ன்னு சொல்லி அனுப்பினேன். இப்ப படம் வெளியாகிவிட்டது. நானும் அதில் சம்பந்தப்பட்டிருக்கேன். ஒரு வார்த்தை கூட எதிராக சொல்லிப் பதிவு செய்றது நியாயமில்லை. ஆனால், எனக்கு செல்வராகவனைப் பிடிக்கும். ரொம்ப நாளாகவே என்கிட்ட கேட்டுக்கிட்டு இருந்தார். அப்புறம் நாலாவது முறையும் வந்து கேட்ட பிறகுதான் ‘சரி’ன்னு இறங்கினேன். நிறைய விஷயங்களைப் பேச வேண்டாம். யாரும் என் வேலையை குறை சொல்ல முடியாது...’’

‘‘சொல்றாங்களே... நீங்க பாடல்கள் கொடுக்க, பின்னணி இசை கோர்ப்புக்கு தாமதம் ஆகுதுன்னு...’’
‘‘எல்லாரும் தெரிஞ்சுதான் வர்றாங்க. ஒரு படத்தில் பல விஷயங்கள் இருக்கு. இப்ப ஆடியோ வியாபாரம் இருக்கிற ஒண்ணு ரெண்டு பேர்ல நானும் ஒருத்தன். படங்கள் சிலது தோற்றுப்போயிருக்கலாம். ஆனால், பாடல்கள் காலங்களைத் தாண்டி நிற்கும். நுணுக்கமாகத்தான் செய்கிறேன். இறுதியா பாடல் எப்படி வருது. எல்லோருக்கும் அது புரியுதே! 600 படங்களுக்கு மேல கீ,போர்டு வாசிச்சாச்சு. ‘மின்னலே’ உங்களுக்கு என்னோட முதல் படம். ஆனால், எனக்கு 601வது படம்.

எனக்கு படமும், பணமும் நோக்கம் கிடையாது. தரம் முக்கியம். 13 வருஷத்திற்கு 40 படங்கள்தான் செய்திருக்கேன். வருஷத்திற்கு நாலு படம் பண்ணினாலே அதிகம். செய்கிற படங்களை விட, நிராகரிக்கிற படங்கள் நிறைய. ட்விட்டர், முகநூல் திறந்தா ‘எப்ப சார் ‘கதிர்வேலன் காதல்’ பாடல்கள் ரிலீசாகும்?’னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. 50 வருஷத்திற்குப் பிறகும் என்னை ரசிக்கிற ஜெனரேஷன் எனக்கு வேணும். என்கிட்ட வர்றவங்களுக்கு என் அக்கறை புரியும்; என் உழைப்பு தெரியும். என் ரசிகர்கள் உலகெங்கிலும் இருக்காங்க. அவசரப்பட்டு அவங்களுக்கு ஏமாற்றம் தர முடியாது. என்னைப் பொறுத்தவரை சரியான திசையில் பொடிநடை போட்டாலே வெற்றி வந்திடும். தப்பான திசையில் நீங்க மூச்சிரைக்க ஓடினாலும் தோல்விதான்...’’
‘‘ ‘கார்களின் காதலன்’னு பெயர் எடுத்துட்டீங்க..?’’



‘‘இசையைத் தவிர அழகை கார்களில் மட்டும் பார்ப்பேன். நான் காரோடு சமயங்களில் பேசுவேன். கார்களை ஙிவீரீ ஙிஷீஹ்s ஜிஷீஹ்sனு சொல்வாங்க. எனக்கு விளையாட்டு, ரிலாக்ஸ் எல்லாம் அதில்தான். ஒரு டிரைவ் போயிட்டு வந்தால் நிம்மதி வரும். இப்பக்கூட ‘லாம்போகினி கலார்டா’ மாடல் வாங்கியாச்சு. அதி நவீன சூப்பர் கார். கார்களில் இதுதான் இப்ப ஜித்தன். பார்த்தவுடனே பிடிச்சுப் போச்சு. ஆனால், நான் சாதாரண ஃபேமிலியிலிருந்து வந்தவன். ஆசைப்பட்ட ஸ்கூட்டர் வாங்கக்கூட காசு இல்லாமல் இருந்தவன். முப்பது வருஷத்திற்கு முன்னாடி வரைக்கும் குடிசையில்தான் இருந்திருக்கேன். இந்தக் கார்கள் எல்லாமே ஆண்டவர் ஆசீர்வாதத்தில் எனக்கு வந்தது. அவர் மேல் வச்ச என் நம்பிக்கைக்கு அவர் திருப்பி அளித்த அன்பளிப்பு, ‘ஆண்டவனுக்கு ஸ்தோத்திரம்...’ வேற எங்கேயும் கவனம் போகாமல், கார்கள் மேலதான் விழுது. நல்லதுதானே?’’

‘‘கௌதம்,ஹாரிஸ் காம்பினேஷன் மறக்கக் கூடியதா... இனிமே நடக்குமா..?’’
‘‘என்னங்க... முறைச்சுக்கிட்டா திரியுறோம். என் வீட்டில் பிறந்தநாள், வேற விசேஷம் எதுன்னாலும் கௌதம் நிச்சயம் வருவார். அதே மாதிரி நானும் போவேன். வாய்ப்பும், நேரங்காலமும் ஒண்ணா வந்தால் மறுபடியும் சேரலாம். எங்க விருப்பம் மட்டுமில்லை... இதில் பல பேரோட ஜாதகப் பொருத்தமெல்லாம் இருக்கு. சேரக்கூடாதுன்னு தீர்மானமோ... திட்டமோ இல்லை!’’
‘‘மத்தவங்களை காது கொடுத்து கேட்பீங்களா..?’’

‘‘காரில் போகும்போது அந்த வேலைதான். நிறைய பாடல்களைக் கேட்க முடியுது. புதுமையும் இருக்கு. இமான், ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரான், அனிருத், சந்தோஷ் நாராயணன் இப்படி நல்ல சங்கீதம் இருக்கு. என்னைத் தவிர எதையும் கேட்க முடியலைன்னு சொல்லவே மாட்டேன். எங்கேயாவது யாராவது தட்டுப்பட்டால், ‘நல்லாயிருக்கு பாட்டு’ன்னு முதுகில தட்டிக் கொடுப்பேன். மத்தவங்களை பாராட்டினால் மட்டுமே நாமும் வளர முடியும்!’’

‘‘குழந்தைகள் இசைப் பக்கம் நெருங்குறாங்களா..?’’‘‘தன்னாலயே வருது. மூத்தவன் நிக்கோலஸ், பியானோ செவன்த் கிரேடு படிக்கிறான். கர்நாடக இசையில் தினமும் ஆசையா பயிற்சிக்குப் போறான். நிகிதாவுக்கு ஆறு வயசுதான். அவளுக்கு பாட விருப்பம் இருக்கும் போல. அவங்க விருப்பத்துக்கு குறுக்கே நிற்கிறதில்லை. அதுதான் பெற்றோர்களுக்கு அழகு!’’

எனக்கு செல்வராகவனைப் பிடிக்கும். ரொம்ப நாளாக கேட்ட பிறகுதான் ‘சரி’ன்னு இறங்கினேன். நிறைய விஷயங்களைப்
பேச வேண்டாம்.

, நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்