அமலாபால் பணத்தை வச்சுதான் மனிதர்களை அளக்கிறார்... சடசடக்கும் சாமி



சர்ச்சையின் அடுத்த படம் ‘கங்காரு’. புரியாமல் விழிப்பவர்கள் சர்ச்சை என்ற இடத்தில் இயக்குனர் சாமியின் பெயரை பொருத்திக்கொள்ளலாம். ‘‘முந்தைய படங்கள் போல இல்லாமல் சாமியின் இ ந்த ‘கங்காரு’, தரமான படைப்பாக மக்கள் மனதில் இடம்பிடிக்கும்’’ என்று படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வைரமுத்துவே நற்சான்றிதழ் கொடுக்க, கோடம்பாக்கத்தில் அடிக்கிறது ஆச்சர்ய  அலை. ‘‘அப்படின்னா ‘கங்காரு’வில் வல்காரிட்டி இல்லையா?’’ என்று சாமியை கேள்வியால் திருகினோம்.

‘‘நான் எப்ப வல்காரிட்டி படம் எடுத்தேன். நான் எடுத்தது ரியாலிட்டி படங்கள்தான். ரியாலிட்டி படங்கள் எடுக்க யாருக்கும் இங்கே துணிச்சல் இல்லை. பாலசந்தர் சாரிடம் அந்த துணிச்சல் இருந்தது.  ‘தப்புத்தாளங்கள்’ படத்தில் ஒரு விபச்சாரி திருடனைக் காதலிப்பதாக கதை பண்ணியிருப்பார். அந்தக் கால கட்டத்தில் அப்படி ஒரு படம் எடுத்தது புரட்சி என்று தான் சொல்வேன். ‘கல்யாணத்துக்குப்  பிறகுதான் உறவு வச்சிக்கணும்’ என்பது சட்டமாகவும், மனநிலையாகவும் இருந்தது. எப்போ செல்வராகவன் வந்தாரோ, அப்பவே ‘ஆசைப்பட்டா அனுபவிச்சுட்டு போயிடு’ன்னு
வந்திடுச்சு...’’

‘உயிர்’, ‘சிந்துசமவெளி’ படங்களை நியாயப்படுத்துறீங்களா?‘‘ ‘உயிர்’ பார்த்துட்டு அவ்வளவு பேர் கொதிச்சாங்களே... அதுக்கு முன்னாடி அதுமாதிரி எத்தனை படங்கள் வந்தது? சத்யஜித் ரே இயக்கிய ‘சாருலதா’ என்ன கதை? கொழுந்தியாள் மீது ஆசைப் படும் அக்கா கணவர் கதைதானே மகேந்திரனோட ‘உதிரிப் பூக்கள்’. ‘ஆசை’ கதையும் அதானே? தம்பி மனைவி மேல கண் வைக்கும் அண்ணன் கதைதானே ‘வாலி’? அதுக்குப்பிறகு வந்த  ‘கலாபக் காதலா’ என்ன கதை? நான் எடுத்தது மட்டும் தப்பான படமா? சூழ்நிலை இடம்கொடுக்கும்போதுகூட தப்பு பண்ணாதீங்க என்று அட்வைஸ் பண்ற கதைதானே ‘சிந்துசமவெளி’?

‘சிந்துசமவெளி’ பார்க்க வந்தவங்களை, ‘இதைப் பார்க்காதீங்க’ன்னு ஒரு கும்பல் திருப்பி அனுப்பியது. முறையாக சென்சார் செய்யப்பட்டு, ‘வெளியிடலாம்’ என்று அனுமதி கொடுக்கப்பட்ட ஒரு  படத்தை தடுக்க யார் ரைட்ஸ் கொடுத்தது? இன்டர்நெட், செல்போன்ல பசங்க இப்போ மூழ்கிக் கிடக்கிறாங்க. பள்ளிகளிலேயே செக்ஸ் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். இல்லையென்றால் செக்ஸ்  குற்றங்கள் அதிகமாகும் ஆபத்து இருக்கிறது. என் படத்தை எதிர்க்கும் சமுதாயக் காவலர்கள் இந்த விஷயங்களில் அக்கறை காட்டட்டும்!’’தனித்து தெரிய வேண்டுமென்பதற்காகத்தான் முரண்பட்ட படங்களை எடுக்குறீங்களா?

‘‘ ‘உலகத்தில் உள்ள நல்ல மனிதர்கள் உலகத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். சில முரண்பட்ட மனிதர்களே தனக்கேற்ற மாதிரி இந்த உலகத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிற £ர்கள். இந்த உலகத்தின் முன்னேற்றம், முரண்பட்ட மனிதர்களால்தான் சாத்தியமாகிறது’ என்று யாரோ சொல்லியிருக்கிறார். மரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுந்தபோது, ‘ஏன் இது மேலே போக வில்லை’ என்று ஒருவன் யோசிச்சான். உலகம் தட்டை இல்லை உருண்டை என்று கண்டுபிடித்தான் ஒருவன். பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் முரண்பட்டு யோசித்ததால்தான் உண்டானது.  அதனால்தான் நான் முரண்பட்ட படங்களையே எடுக்கிறேன். ‘கங்காரு’வில் புது சாமியை பார்ப்பீர்கள்...’’

அப்படி என்ன கதை? ‘‘ ‘சிந்துசமவெளி’ வந்தபோது என் காரை உடைத்தார்கள். அப்போதுதான் என் அம்மா, ‘எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி ஒரு படத்தை எடுடா’ன்னு சொன்னாங்க. ‘பாசமலர்’ போல அண்ணன்  தங்கை கதையை எடுக்கும் பொறி அப்போதான் கிடைச்சது. ஒரு ஜீவன் இன்னொரு ஜீவனை மனசாலும் உடலாலும் வாழ்நாள் முழுவதும் பார்த்துக்கணும் என்பதுதான் படத்தோட  ஒன்லைன். சாய்பிரசாத் என்பவரோட கதை இது. அண்ணனாக அர்ஜுனா, தங்கையாக பிரியங்கா நடிச்சிருக்காங்க. ஹீரோவை காதலிக்கும் கேரக்டரில் ‘பேராண்மை’ வர்ஷா பண்ணியிருக்காங்க.  பாடகர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அற்புதமான 5 பாடல்களைக் கொடுத்திருக்கார் வைரமுத்து. படம் பார்த்துட்டு வர்றவங்க அன்றைக்கு இரவு தூங்கமாட்டாங்க. அப்படியொரு  அழுத்தம் நிறைந்த படமா இது இருக்கும்!’’

அமலாபாலிடம் கால்ஷீட் கேட்டீங்களாமே? ‘‘எல்லா மனிதனும், எல்லா உறவுகளையும் பணத்தை வச்சு தான் அளக்குறான். இந்த நூற்றாண்டில் பணம் என்பது அளவுகோலா இருக்கு. ‘சிந்துசமவெளி’ படத்துக்கு அமலாபால் பொருத்தமாக  இருந்தார். இந்தக் கதைக்கு அமலாபால் தேவையில்லை. அமலாபால் இப்போ பணத்தை வச்சுதான் மனிதர்களை அளக்கிறார். அவருக்கு சம்பளம் தர பட்ஜெட்டில் இடமில்லை. ஒரு லட்ச ரூபாய்  சம்பளத்தில் நடிப்பார் என்று அமலாபாலை எதிர்பார்ப்பதும் முறையில்லை. இன்னொரு படத்தில் தேவைப்படும் பட்சத்தில் கண்டிப்பா கால்ஷீட் கேட்பேன்!’’

 அமலன்