பொங்கல் வாழ்த்து ஞாபகங்கள்



அது ஒரு இனிய பதற்றம். தபால்காரரின் கையில் இருக்கிற கட்டில் நமக்கான வாழ்த்து அட்டை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு! யாருக்கு என்ன படம் போட்ட அட்டையைத் தேர்வு செய்து அனுப்புவது  என்ற தவிப்பு...! உதயசூரியனுக்குக் கீழே பொங்கும் பானைகள்... துள்ளிக் குதிக்கும் காளை மாட்டை அடிக்க குச்சியை ஓங்கும் விவசாயி...

ரஜினி, கமல், ஸ்ரீதேவி, ராதா, அம்பிகா என சினிமா  ஸ்டார்களின் விதவிதமான போஸ்கள் என குவியும் வாழ்த்து அட்டைகள் இன்று வழக்கொழிந்து விட்டன. சென்னையில் எங்கு தேடியும் ஒரு பொங்கல் வாழ்த்து அட்டைகூட வாங்க முடியவில்லை.  எஸ்.எம்.எஸ்.களிலும், இமெயில்களிலும் வந்து விழுகிற உயிரற்ற வாழ்த்துகள் வெறும் சம்பிரதாயமாகி விட்டன.
சில பிரபலங்களை அணுகி அந்த ஞாபகங்களைக் கிளறினோம்...

‘‘நானே பேப்பர்ல டிராயிங் பண்ணி ரெண்டா மடக்கி நண்பர்களுக்குக் கொடுப்பேன். எல்லா பசங்களும் என்கிட்ட வரைஞ்சு வாங்கிட்டுப் போய் ஃபிரண்ட்ஸ்க்கெல்லாம் கொடுப்பாங்க. 7ம் வகுப்புல  இசக்கிராஜன்னு ஒரு பையன் இருந்தான். எல்லா வகுப்புலயும் ரெண்டு ரெண்டு வருஷம் படிச்சதால பெரிய ஆள் மாதிரி இருப்பான். வகுப்புல அவன்தான் டான். அவனைப் பகைச்சுக்கிட்டு கிளாஸுக்கு  வரமுடியாது. பொங்கலுக்கு முன்னாடி என்னைக் கூப்பிட்டு, ‘நம்ம சாந்தி டீச்சரை சில்க் ஸ்மிதா மாதிரி வரைஞ்சு கொடு’ன்னு கேட்டான். 

பயந்துக்கிட்டே வரைஞ்சு கொடுத்தேன். அதை எங்க ஹெச்.எம் பாத்துட்டார். நேரா சாந்தி டீச்சரைக் கூப்பிட்டு அவங்க கையில பேப்பரைக் குடுத்துட்டார். அவங்க சிரிச்சுக்கிட்டே, ‘நான் இப்பிடியாடா  இருக்கேன்’னு கேட்டு, முதுகுல தட்டிட்டுப் போயிட்டாங்க. அதுக்குப் பிறகு அவங்களுக்கு சிலுக்கு டீச்சருன்னே பேரு வந்திடுச்சு.

லவ்வ சொல்றதுக்கு பொங்கல் வாழ்த்து ஒரு நல்ல வழி. பொங்கல் வாழ்த்து கொடுக்கிறதை யாரும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்க. எங்க வீட்டுக்குப் பக்கத்துல குடியிருந்த பிரபாகரன் அண்ணனும்  எதிர்வீட்டுல இருந்த கிருபா அக்காவும் மாறி மாறி பொங்கல் வாழ்த்துக் கொடுத்துக்கிட்டாங்க. காதல் வளர்ந்து இன்னைக்கு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை குட்டிகளோட சந்தே £ஷமா இருக்காங்க!’’
             
ஓவியர் ஸ்யாம்