பொங்கல் வாழ்த்து ஞாபகங்கள் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி



‘‘அப்போதெல்லாம் பொங்கல் வரும்முன்பே பொங்கல் வாழ்த்துகள் வரத்தொடங்கி விடும். கரும்பு வாசனையும், மஞ்சள் மணமும், மண்வாசனையும் அந்த வாழ்த்து அட்டைகளோடு சேர்ந்தே  வரும். என் அப்பா கவிஞர் நெல்லை கணபதிக்கு ஏராளமான நண்பர்கள். ஒவ்வொரு பொங்கலுக்கும் மரபுக்கவிதையில் வாழ்த்தி, எங்கள் பெயரையும் சேர்த்து 500 அட்டைகளை அச்சடித்து வருவ £ர் அப்பா. கவிதை மீதும், புத்தகங்கள் மீதும், வேர்கள் மீதும் எனக்கான நேசத்துக்கு அப்பா அச்சடித்து அனுப்பிய பொங்கல் வாழ்த்துகளும் ஒரு காரணம்.


பொங்கல் வாழ்த்துகள் மூலமாக எது செய்தாலும் தனித்துவமாக அக்கறையாக செய்ய வேண்டும் என்று வாழ்வியல்பாக சொல்லிக் கொடுத்தார் அப்பா. நான், தம்பி, தங்கை மூவரும் அட்டைகளில்  பெயர் முகவரியை போட்டி போட்டுக்கொண்டு எழுதுவோம். கையெழுத்து அழகாக தெளிவாக இருக்க வேண்டும் என்பார் அப்பா. குடும்ப புகைப்படத்தோடு, என் ஓவியத்தோடு, நான் எழுதிய கவி தையோடு அப்பா பொங்கல் வாழ்த்து அச்சிட்டிருக்கிறார். ஒரு ஆண்டு பொங்கலுக்கு, கல்லூரியில் நான் அந்த ஆண்டில் பெற்ற பரிசுகளையெல்லாம் பட்டியலிட்டு அச்சடித்தார்.
அப்பாவின் பொங்கல் வாழ்த்துகள் பொங்கலுக்கான வாழ்த்து மட்டுமல்ல. இன்றும் என்றும் நான் இலக்கியத்தோடு பொங்கிப் பூரித்துப் புளகாங்கிதம் அடைவதற்கான அகரம், முதல் எழுத்து அதுத £ன்.’’ 

 வெ.நீலகண்டன்
படங்கள்:ஆர்.சி.எஸ்