எஸ்.எம்.எஸ் எல்லாம் ஓல்டு ஃபேஷன்!



வாழ்த்து சொல்ல வெரைட்டி ‘ஆப்ஸ்’

‘‘அந்தக் காலத்துல எல்லா செல்போன்லயும் ‘எஸ்.எம்.எஸ்’னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதுல நாங்க எப்படியெல்லாம் கடலை போடுவோம் தெரியுமா?’’ என நாம் புலம்பும் நிலைமை அடுத்த  வருடமே வரலாம். யெஸ்... போஸ்ட் கார்டு, பொங்கல் வாழ்த்தையெல்லாம் போட்டுத்தள்ளிய எஸ்.எம்.எஸ் சேவைக்கும் வந்துவிட்டான் எமன்.

ஏற்கனவே, இந்தியாவில் எஸ்.எம்.எஸ் வருவாய், 20  சதவீதம் வீழ்ச்சியடைந்ததாகச் சொல்லி விரக்தியில் இருக்கின்றன செல்போன் சேவை நிறுவனங்கள். இதற்கிடையே இந்த வருடப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பரிமாறிக் கொள்ளப்பட்ட வாழ்த்து  எஸ்.எம்.எஸ்களின் எண்ணிக்கையும் எதிர்பார்ப்பைத் தொடவில்லை.

ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்ட பிறகு, உலகம் முழுக்கவே செல்போனின் பயன்பாடு நிறைய மாறியிருக்கிறது. போன்கால் என்பதே இரண்டாம் பட்சமாகும் அளவுக்கு இன்டர்நெட் பயன்பாட்டில் புகுந்து  விளையாடுகின்றன இன்றைய ஸ்மார்ட் போன்கள். அதே இன்டர்நெட் வழியாக எஸ்.எம்.எஸ் போன்ற குறுஞ்செய்திகளை அனுப்பவும் ஊர்ப்பட்ட ஆப்கள் முளைத்துவிட்டன. வாட்ஸ் ஆப், பி.பி.எம்,வீ  சாட், லைன், வைபர், ஸ்கைப் என இந்த ஆப்ஸ்கள்தான் எஸ்.எம்.எஸ் சேவைக்கு வைத்திருக்கின்றன ஆப்பு.

‘‘எதுக்கு சார் எஸ்.எம்.எஸ் அனுப்பணும்? ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்க்கும் காசு பிடிப்பாங்க. அதை ஃப்ரீ ஆக்கணும்னா தனியா கார்டு போடணும். அப்பவும் அது அன்லிமிடெட் ஃப்ரீ கிடையாது. ஒரு  நாளைக்கு 200 லோக்கல் எஸ்.எம்.எஸ்தான் ஃப்ரீ. ஸ்டேட் தாண்டினா நேஷனல் எஸ்.எம்.எஸ்... வெளிநாடுன்னா இன்டர்நேஷனல் எஸ்.எம்.எஸ். அதுக்கெல்லாம் காசு தீட்டிருவாங்க. அதோட  எஸ்.எம்.எஸ்ல சின்னதா ஒரு ஸ்மைலியை சேர்த்தா அது எம்.எம்.எஸ்ஸா மாறிடும். ஒரு எம்.எம்.எஸ் அனுப்பினா 3 ரூபா புடிச்சிருவாங்க. வாட்ஸ் ஆப் மாதிரி ஆப்கள்ல இப்படிப்பட்ட தலைவலி  எதுவும் இல்லை. பெரிய பெரிய போட்டோக்களையே அதுல சர்வ சாதாரணமா ஷேர் பண்ணிக்கலாம். அதுவும் உலகம் முழுக்க இலவசமா!’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த பி.பி.ஓ இளைஞர்  ஒருவர்.

இந்த மனப்போக்குதான் இன்று இளைஞர்கள் பலரை அவசர அவசரமாக ஸ்மார்ட்போனுக்கும் வாட்ஸ் ஆப்புக்கும் மாறச் செய்கிறது. இந்த ஆப்கள் செய்திகளை பரிமாற்றம் செய்வது செல்போன்  சேவை வழியாக அல்ல. இன்டர்நெட் வழியாக. எனவே, அன்லிமிடெட் இன்டர்நெட் கார்டு ஒன்றைப் போட்டுவிட்டால் போதும்... மற்றவை எல்லாமே இலவசம் என்றாகிவிட்டது இன்று. இந்தப் புத்த £ண்டுக் கொண்டாட்டத் தின்போது, உலகம் முழுவதும் செய்திப் பரிமாற்றத்துக்காக இணையத்தைப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட, 175 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகச்  சொல்கிறது தாய்லாந்தைச் சேர்ந்த டிடாக் நிறுவனம். அதே சமயம் 2012ம் வருடத்தில் மட்டும் பத்து லட்சம் கோடி எஸ்.எம்.எஸ்கள் பரிமாறிக் கொள்ளப்பட்ட நிலை மாறி, 2013ல் ஜஸ்ட் 15 ஆயிரம்  கோடியாக அது குறைந்துவிட்டது. எல்லாம் இந்த வாட்ஸ் ஆப் வகையறாக்கள் செய்த லீலைதான்.

இந்த ஆப்கள் மூலம் செய்திகளை நம் நண்பருக்கு அனுப்ப வேண்டுமானால், அவரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும்... நம்மிடம் உள்ள அதே ஆப் அவரிடமும் இருக்க வேண்டும்  என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் தற்போது, ‘ஃப்ரீ எஸ்.எம்.எஸ் இந்தியா’ என்ற பெயரில் வந்திருக்கும் புதிய ஆப் ஒன்று அந்தக் கட்டுக்களையும் உடைத்திருக்கிறது. இணையம்  மூலம் இலவசமாக இயங்கும் இந்த ஆப், நம் செய்திகளை சாதாரண எஸ்.எம்.எஸ்ஸாகவே மாற்றி அனுப்புகிறது. அந்தக் காலத்து நோக்கியா 1100 வைத்திருப்பவர் கூட அந்தச் செய்தியைப் பெற  முடியும்.

இந்த ஆப்களால் பாதிக்கப்படப் போவது நிச்சயம் எஸ்.எம்.எஸ் சேவை மட்டுமில்லை. இப்போதே வைபர், ஸ்கைப் போன்ற ஆப்கள் இணை யம் வழியிலான தொலைபேசி அழைப்புகளையும் சாத் தியமாக்கியுள்ளன. முகம் பார்த்துப் பேசக் கூடிய வீடியோ காலிங்கே இந்த சேவையில் இலவசம்தான். ஐ.பி அழைப்புகள் எனப்படும் இந்த முறை பிரபலமாகி விட்டால், வருங்காலத்தில் செல்பேசி  அழைப்புக்கான வருமானம் கூட கம்பெனிகளுக்குக் கிடைக்காது.

இன்ஃபோர்னா டெலிகாம்ஸ் அண்டு மீடியா என்ற நிறுவனத்தின் கணக்குப்படி, இந்த எஸ்.எம்.எஸ் பேரழிவால் கடந்த 2013ல் ஏற்பட்ட வருவாய் இழப்பு 12 கோடி அமெரிக்க டாலராம். 2014ன்  முடிவில் அந்த இழப்பு 2300 கோடி டாலராக உயரும் என்கிறார்கள் அவர்கள். எனவேதான் இந்த டெக்னாலஜி மாற்றத்தில் சிக்கி சீரழியாமல் தங்களை அப்டேட் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன உலக டெலிகாம் நிறுவனங்கள். அதன்படி, இதுவரை அவர்கள் செல்பேசி  அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளில் செலுத்தி வரும் கவனத்தை இனி இன்டர்நெட் சேவையில் செலுத்தத் திட்டமிடுகிறார்கள்.

இந்தியாவுக்குள் மட்டும் 3 கோடிப் பேர் பயன்படுத்தும் மிகப் பெரும் சாட்டிங் ஆப், வாட்ஸ் ஆப்தான். எனவே, வெறும் 20 ரூபாய் ரீசார்ஜில் வாட்ஸ் ஆப் பயன்பாட்டுக்கு மட்டுமான இன்டர்நெட் சேவையை வழங்க முன் வந்துள்ளன சில நிறுவனங்கள்!
மாறினால் தானே வாழ முடியும்!

 கோகுலவாச நவநீதன்