தமிழகத்தில் ஓர் ஆச்சரிய கிராமம் காது வளர்க்கும் ஆண்கள்!



சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர்  மதுரை மெயின் ரோட்டின் சூரக்குடி பிரிவுச் சாலையில் பயணித்தால், 3 கி.மீட்டரில் இருக்கிறது செகுட்டு அய்யனார் கோயில். கோவில்பட்டி, மேட்டுப்பட்டி, பிள் ளையார் ஊருணிப்பட்டி, சூடனிப்பட்டி, மூக்கம்பட்டி என இக்கோயிலைச் சுற்றிய கிராமங்களில் 800 ப்ளஸ் வீடுகள்.

 அத்தனை வீடுகளிலும் அலசியாச்சு. காதுகளில் பெரிதாகத் துளையிடப்படாமல்  ஆண்களே இல்லை! ‘‘பரம்பரை பரம்பரையா முத்தரையர் சமூகத்தச் சேர்ந்த இந்த அஞ்சு பட்டிக்காரங்களும் காதுகள்ல ஓட்டை போட்டுக்கறோம். இதுக்குத் தனி வரலாறே இருக்கு. இப்படித் துளை போடலேன்னா பெரிய  தெய்வ குத்தமாயிரும்!’’ என திகிலாய்த் துவங்குகிறார் கிராமப் பிரமுகர் சவரிமுத்து.

‘‘வீட்டுல ஆண் குழந்தை பிறந்த ஒரு மாசத்துல காது ஓட்டை போட்டுரணும். முன்னே இதுக்குன்னு ஊருக்குள்ளே குறவங்க வருவாங்க. இப்போ ஆஸ்பத்திரில செய்யறோம். ரெண்டு காது சே £னைகள்லயும் ஓட்டை போட்டு, கட்டை வச்சு விட்டுருவாங்க. அதுக்கு அப்புறம் காரீயத்துல செஞ்ச கனமான குணுக்குகளை காதுகள்ல தொங்கவிட்டு வளர்ப்போம். நாலஞ்சு வயசுல காது ஓட்டை  பெருசானதும், குணுக்கை கழட்டிடலாம். அதுக்குப் பிறகுதான் ஒரு பய இந்த ஊருக்காரனாவே மாற முடியும். பையனுக்கு காதுல ஓட்டை போடாம விட்டுட்டா, அந்தக் குடும்பத்தையே அய்யனார்  ஒருவழி பண்ணிடுவார்’’ என்கிறார் அவர் பயபக்தியோடு!

கோவில்பட்டி குளக்கரை ஓரத்தில் குறுந்தஞ்செடிகளும், வள்ளிக் கிழங்குக் கொடிகளும் படர்ந்த வெளியில் செகுட்டு அய்யனார் வீற்றிருக்கிறார். முகப்பில் பெரிதாக இரு குதிரைகள், அய்யனாரை நோக்கிய அழகு யானை. இருபுறத்து பூத கணங்கள் கடந்து தூரத்தில் நின்றபடிதான் ஆண்களும், பெண்களும் அய்யனாரை கும்பிடலாம். காதுகளில் துளையிடப்பட்ட ஆண்களுக்கு மட்டுமே அய்யனாருக்கு அருகில் செல்லும் தகுதி உண்டு.

‘‘நூறடி தூரத்துல வேப்பமரங்கள் இருந்தாலும் கோயிலுக்குள்ள ஒரு மரமும் வளராது. ஏன்னா, இந்த அய்யனாரு ரொம்ப சுத்தம் காக்கறவரு. மரமிருந்தா பறவைகள் வந்து எச்சம் போட்டுருமில்ல’’ என அறிமுகம் தந்து வரவேற்கிறார் அய்யனார் பக்தையான நல்லம்மாள் பாட்டி. இரு பூசாரிகள் கொண்டது இந்தக் கோயில். அதில் ஒருவருக்கு நிஜப் பேரே ‘பூசாரி’தானாம். இன்னொருவர் சின்னக் கருப்பு. மாலை 6 மணிக்கு மேல் கோயிலுக்குள் நுழைய பூசாரிகள் உள்ளிட்ட எவருக்கும் அனுமதியில்லை. பக்கத்துக் குளத்தில் தண்ணீர் எடுக்கவும் தடை. இரவில் கோயிலுக்குள் நல்லெண்ணெய்  தீபம் மட்டுமே எரிகிறது. மின் வசதிக்கும் தடைதான்.

‘‘பல நூறு வருஷங்களுக்கு முன்ன வேட்டையாடுறதுதான் எங்க சமூகத் தொழிலு. அதுல ஆண்டான், ஒய்யப்பன்னு மச்சினங்க ரெண்டு பேர் வேட்டைக்குப் போனாங்க. கூடவே வேட்டை நாய் களும் போச்சு. ஒரு மானை விரட்டிட்டுப் போனதுல ஒய்யப்பன் வழி மாறிட்டாரு. வள்ளிக்கிழங்குக் கொடிகளுக்குள்ள விழுந்து மானு தப்பிச்சி புதருக்குள்ள ஓடிருச்சு. வெறுங்கையோடு வீடு திரும்பக்  கஷ்டப்பட்டுக்கிட்டு கையிலிருந்த கடப்பாரையால வள்ளிக்கிழங்கை ஒய்யப்பன் தோண்ட ஆரம்பிச்சாரு. அங்கே சுயம்புவா புதைஞ்சு கிடந்த அய்யனாரோட காதுல அந்த கடப்பாரை குத்தி, ரத்தம்  வெளியில பீய்ச்சி அடிச்சது. அது ஒய்யப்பனோட கண்ணுல பட்டு அப்பவே அவரோட பார்வை பறிபோச்சு. அந்த ரத்தத்துல தன் துண்டை நனைச்செடுத்து பக்கத்துல நின்ன நாயோட கழுத்துல கட்டி  விட்டுட்டு ஒய்யப்பன் அங்கேயே மயங்கிட்டாரு.

பாதை மாறிப்போன ஒய்யப்பனை தேடிக்கிட்டிருந்த ஆண்டானையும், ஒய்யப்பனோட பெஞ்சாதி ஒய்யம்மாளையும் அந்த நாய் அங்கே கூட்டி வந்துச்சு. பார்வை இல்லாம கிடந்த ஒய்யப்பனையும், க £துல காயம் பட்ட அய்யனார் உருவத்தையும் பார்த்ததும் சாமி குத்தம் பண்ணிட்டோம்னு அவங்களுக்குப் புரிஞ்சு போச்சு. ‘என் புருஷனுக்கு கண்ணைக் கொடுத்துக் காப்பாத்து அய்யனாரே, உன்  காதுல கடப்பாரை குத்தி ஓட்டையானதுக்காக ஏஞ் சந்ததியே காலாகாலத்துக்கும் காதுகள்ல ஓட்டை போடுறோம்... காலம் தவறாம பூசை செய்றோம்’னு கத்திக் கதறுனா ஒய்யம்மா. உடனே ஒய்யப் பனுக்கு அய்யனார் பார்வையைத் தந்தாரு. அன்னைக்குத் துவங்குன பழக்கம்தான்... இன்னைக்கும் விடாம செஞ்சிக்கிட்டிருக்கோம்’’ என்கிறார்கள் பூசாரிகள்.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் ஆண்கள் மட்டுமல்லாது, பெண்களும் காது வளர்த்தார்களாம். ‘‘பொதுவா காது வளக்குறவங்க அதுல நகை போடுவாங்க. ஆனா, இந்த ஊர் பொம்பளைங்க காதை  துளையாத் தெரியிற மாதிரிதான் விடுவோம். காது மடலுக்கு மேல தனியா காது குத்தித்தான் நகை மாட்டுவோம். அடுத்த ஊருக்கு வாக்கப்பட்டுப் போற பொண்ணுகளுக்கு இந்தக் காது ஓட்டை கஷ் டமா இருந்தது. அதனால ரெண்டு தலைமுறையா பொம்பளைங்க காது வளர்க்குறது நின்னு போச்சு’’ என்கிறார் சீனியர் பாட்டி முனியம்மாள்.

''எங்க ஊர்க்காரங்க எங்க போனாலும் காதுல இருக்குற துளையை வச்சே இந்த ஊருதான்னு மத்தவங்க கண்டுபிடிச்சிருவாங்க. பக்கத்து ஊருல சைக்கிள் வாடகை எடுக்க பிள்ளைகளை அனுப் பினா கூட, காதுல துளை இருந்தா நம்பிக் கொடுத்தனுப்புவாங்க. ஊருக்காரங்க நிறையப் பேரு நல்ல வசதியா வெளிநாடுகள்ல இருக்காங்க. அத்தனை பேருமே காதுல துளை போட்டுக்கிறதை  குறைச்சலா நினைச்சதில்லை. இந்த அடையாளம்தான் எங்க கௌரவம்’’ என்கிறார்கள் இந்த ஊர்க்காரர்கள் ஒரே குரலாக.

பொம்மை வீடு... பத்திர ஜெராக்ஸ்!

இந்த அய்யனாருக்கு வெளியூரிலும் எக்கச்சக்க பக்தர்கள் உண்டாம். ‘‘வெளியூர்க்காரங்க நெல்லும், காசும் காணிக்கையாக் கொண்டு வருவாங்க. ஏதாவது பரம்பரைச் சொத்தை இழக்க நேர்ந்தா,  பறிபோன சொத்துப் பத்திரத்தை ஜெராக்ஸ் எடுத்து வந்து அய்யனார் கோயிலுக்குள் வச்சு, ‘இந்தச் சொத்தைத் திரும்பக் கொடு’ன்னு வேண்டுதல் வைப்பாங்க. புது வீடு கட்ட ஆசைப்படுறவங்க மண்,  சிமென்ட் கலவையில் ஒரு பொம்மை வீட்டை செஞ்சு வச்சுட்டுப் போவாங்க. தங்கள் வீட்டுக்கு விஷ ஜந்துகள் அதிகம் வந்தா, பாம்பு சிலையும் செஞ்சு வைப்பாங்க. இங்க எது கேட்டாலும், எட்டு ந ள்ல கேட்டது நடக்கும்னு மக்கள் நம்பிக்கை கெட்டியா இருக்குங்க’’ என்கிறார் சூரக்குடியைச் சேர்ந்த லட்சுமி.

 செ.அபுதாகிர்
படங்கள்: பொ.பாலமுத்து
கிருஷ்ணன்