சீஸன் சாரல் பாபனாசம் அசோக்ரமணி



பார்த்தசாரதி சபையின் ஆதரவில் நாரத கான சபாவில் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா கச்சேரி. 83 வயதில் இப்படி ஒரு குரல். அந்த சங்கீதம் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கந்தர்வ க £னம்தான். அமிர்தவர்ஷினி ராகத்தில் வர்ணம் இசை மழையாக ஓடியது. நாகை முரளிதரன் வயலினில் இசை மயக்குகிறது.

டாக்டர் உமையாள்புரம் சிவராமன் மிருதங்கம் அரங்கையே கட்டிப்  போட்டது. என்ன ஒரு நாதம் கையில்? பாலமுரளி ‘இந்தநுசு வர்ணிம்ப’ என்ற குண்டக்ரியா ராகத்தில் ‘ப்ரஹ்ம்மேந்த்ராள்’ கீர்த்தனையை அழகா பாடிவிட்டு, ஒரு அமர்க்களமான காம்போதி ராகம்  பாடி விட, நாகை முரளி பன்னீர் தெளித்தாற்போல வாசிக்க... ஆஹா! கச்சேரி களை கட்டியது.

கச்சேரியில் மெயினாக சந்திர கவுன்ஸ் ராகம். பாலமுரளி இந்த ராகத்துக்கு வைத்த பெயர் சந்திரிகா. பாலமுரளி குரலில் சந்திரனே குளிர்ந்து, நேரே இறங்கி வந்து ரசிகர்களை மகிழ்வித்தார். ‘நீ ஸாடி’ என்கிற சொந்த ஸாகித் யம். என்ன பொருத்தமான ஸ்வரங்கள். தனி ஆவர்த்தனம் ஆரம்பிக்கும்போது, உமையாள்புரம் சிவராமன் கொஞ்ச நேரம் பாட்டையே வாசிப்பது போல் ஒரு பிரமையை ஏற்படுத்தி, பிறகு தன்  கையில் உள்ள நாதத்தால், சபையோரை வேறு உலகத்திற்குக் கூட்டிச் சென்றார். குருபிரசாத் கடம் நல்ல அனுசரணை. சிந்துபைரவி யில் ஒரு அஷ்டபதி, பெஷாக் தில்லானா என்று பாலமுரளி  அளித்த இன்னிசை ஒரு வருடம் காதை விட்டு நீங்காது.

காளிதாஸர் ‘நவரத்னாமாலா’வில் சங்கீத தேவதையான சியாமளா பற்றிச் சொல்கிறார். ‘‘உலகத்திற்கு ஆனந்தத்தை ஊட்டும் சங்கீதக் கலைக்கு அனுக்கிரகம் செய்வதற்காகத்தான் சப்த ஸ்வரங்களில்  ரசித்து, ‘சரிகமபதநி’யில் களிப்பவள்’’ என்கிறார். இதைத்தான் தியாகய்யரும் ‘‘சப்த ஸ்வரத்தில் ஹ்ருதயம் லயித்து இருந்துவிட்டால் சாந்த ரசம் தானாக உண்டாகிவிடும்’’ என்கிறார். காளிதாஸர்,  ‘ம்ருதுள ஸ்வாந்த’ என்று சொல்ல, தியாகய்யர், ‘விமல ஹ்ருதய’ என்றார். அப்படி ஒரு சாந்தரஸம் வந்து விடுகிறது, டி.வி.சங்கரநாராயணன் கச்சேரியைக் கேட்டால் நமக்கு! மியூஸிக் அகாடமியில்  அவர் பாடிய கச்சேரி இன்னும் தேனாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது காதில்.

‘ராரா தேவாதி தேவா’ என்று அவர் பாடும்போது, அந்த தொனி, ‘‘தேவர்களுக்கெல்லாம் தேவன் ‘ராமன்’தான்’’ என்ற தியாகய்யர் கூற்றை உண்மையாக்குவது போல் இருந்தது. அந்த அடாணா  கீர்த்தனைக்கு கூடவே, மைசூர் நாகராஜ் வயலினில் சேர்ந்தபோது, ‘அடாடா! என்ன சங்கீதம்’ என்று தோன்றியது! சோபில்லு கீர்த்தனைக்குப் பிறகு, விஜயநாகரி ராகத்தில் பாட்டு. மைசூர் நாகராஜ்  கையில்தான் என்ன குழைவு. ‘பேஷப்பா’ என்று டி.வி.எஸ் கூறியது உண்மைதான். சாருகேசி ராகம் டி.வி.எஸ்சுக்குத்தான் சொந்தம். மன்னார்குடி ஈச்வரன் மிருதங்கத்திலும், ஸ்ரீசுந்தர குமார் கஞ்சி ராவிலும் கச்சேரியை எங்கேயோ கொண்டு போனார்கள்.

சுத்த ஸாவேரி ராகம் மெயினாகக் கேட்டு ரொம்ப நாளாச்சு. டி.வி.எஸ் பாட்டில் சுருதி சுத்தம், லயம், மனோதர்மம் எல்லாம் சொல்லி மாளாது. ‘தாரிநி தெலஸு’ கீர்த்தனை பாடிய காலப்பிரமாணம்,  அபாரம். தனி ஆவர்த்தனம் ஈச்வரார்ப்பணம்தான். மஹாதேவன் சங்கரநாராயணன், அப்பாவோடு தம்புரா போல இழைந்து பாடினார். மறக்க முடியாத கச்சேரி அது.

இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியில் சௌம்யாவின் கச்சேரி. இவர் கச்சேரிக்கு போனால் நிச்சயம் சங்கீதம் தொடர்பாக நிறைய தெரிந்துகொண்டு வரலாம். பலஹம்ஸ ராகத்தில், ‘வந்தாலும்  வரட்டும்’ கீர்த்தனைக்கு வந்ததும் வராம ஸ்வரங்களை சௌம்யாவால் மட்டும்தான் பாட முடியும். ஸ்ரீராம்குமார் வயலினில், கூடவே வாசித்தது இனிமை. ‘பலுகவேமிநா’ கீர்த்தனைக்கு டாக்டர்  எஸ்.ராமநாதன், எம்.டி.ராமநாதன் போட்ட ரெண்டு சிட்டஸ்வரத்தையும் பாடியது அழகு. ரசிகர்களுக்கு வெயிட்டான ராகத்தைக் கொடுத்து, அவர்களும் அதை அசையாம கேக்கிற அந்த காட்சி  சௌம்யா கச்சேரியில காணக் கிடைக்கும்.

யதுகுலகாம்போதி ராகத்த சௌம்யா பாடியபோது, ‘இப்படித்தான்யா அந்தக் காலத்துல நாலு மணி நேர கச்சேரியில லிஸ்ட் ஹெவியா இருக்கும்’னு குரல்  ஒன்று கேட்டது. ராகம் ரொம்ப ‘மடி’. அதை அப்படியே பிடிச்சு மடிக்கு மடி சேர்த்தார் ஸ்ரீராம்குமார். மனோஜ் சிவா பாட்ட ரசிச்சுண்டே, தலை ஆட்டிண்டு மிருதங்கம் வாசிக்கிற அழகு ஜோர்!

123வது கச்சேரி அன்னிக்கு ஸீசன்ல கே.வி.கோபாலகிருஷ்ணன் வாசித்தது. களைப்பே தெரியாம கச்சேரி ஆரம்பித்து 1, 2, 3ன்னு சொன்ன உடனே, அவர் பாட்டோட ஐக்கியம். ‘செலிமினி ஜலஜ £க்ஷி’ என்ற தியாகராஜர் கீர்த்தனை எடுப்பே ரொம்ப அழகு. கரஹரப்ரியா ராகம் அலாதி கற்பனையா இருந்தது அன்னிக்கு.அன்னிக்கு சௌம்யா அந்தக் கீர்த்தனைய பாடி, ‘பூஸுருலு’ என்று அதீ தத்துல ஸ்வரம் பாடி, தனி கேட்டு, ‘இது அலாதி சங்கீதம்’தான் என்று வியப்போடு மக்கள் மகிழ்ந்தனர்.

சுதா ரகுநாதனின் ‘சம்பூர்ணா’   சிஷீயீயீமீமீ ஜிணீதீறீமீ ஙிஷீஷீளீ  ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. அவருக்கு ‘சங்கீத கலாநிதி’ அளிக்கப்பட்டதையொட்டி, அவருடைய இசை வளர்ச்சியை பிரதி  பலிக்கும்படியாக, பல அரிய புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் அது. பிரிட்டன் துணைத்தூதர் பரத் ஜோஷி, டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா, டைரக்டர் கே.பாலசந்தர் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து  கொண்டு சுதாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். சுதா, ராஜேஷ் வைத்யா, சத்யநாராயணா இணைந்து வழங்கிய, ‘சின்னஞ்சிறு கிளியே’ பாட்டு அபாரம்.

படங்கள்: புதூர் சரவணன்,
ஏ.டி. தமிழ்வாணன்