சீத்தா... அப்ரூஸ்... பீலா...



கதர் யாகூத்... சந்தைக்கிளி... சாண்டிரோஸ்... இதெல்லாம் என்ன?

‘‘சீத்தா சோந்து நிக்குது பாரு... கழுத்தை நீவி வுடுப்பா! அப்ரூஸ் முள்ளை துணியால மூடிக் கட்டு... கதர் யாகூத்தை வெளியில விட்டா மத்ததை எல்லாம் விரட்டுமப்பா... மூடிப்போடு! பாதாமையும்  அக்ரூட்டையும் பீலாவுக்கு பிரிச்சுப் போடுப்பா...’’  வாத்தியார் இடுகிற கட்டளையை சுழன்று சுழன்று செயலாக்குகிறார்கள் சிஷ்யப் பிள்ளைகள்.

 சர்ஹாவும், ஹீரியும், ஜாவாவும் பஞ்சாரத்தின் இடைவெளியில், கோபமும் உக்கிரமும் பொங்கும் கண் களை நுழைத்து எதிரிகளைத் தேடுகிறார்கள். அந்த ஒலியும் ஒளியும் ஒரு போர்க்களத்தின் சூழலை உருவாக்குகிறது. ‘‘அடுத்த மாசம் தஞ்சாவூர்ல டோர்னமென்ட் நடக்குது... அதுக்காகத்தான் பிள் ளைகளை தயார் பண்ணிக்கிட்டிருக்கோம்’’ என்று சிரிக்கிறார் வாத்தியார் ஜாபர்கான்பேட்டை தட்சிணாமூர்த்தி.

தட்சிணாமூர்த்தியைப் போல ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சண்டைச் சேவல் வாத்தியார்கள் சென்னையில் இருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இவர்களிடம் பாடம் பயின்று சண்டைச்  சேவலை வளர்க்கிறார்கள். தமிழகத்தில் எங்கு சேவல் சண்டை நடந்தாலும் சென்னை சேவல்களே பதக்கங்களை கொத்தி வருகின்றன. இங்கு மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சண்டைக்கோழிகள்  இருப்பதாகச் சொல்கிறார்கள்.

‘‘சென்னைக்குள்ள சண்டை விட தடை விதிச்சிருக்காங்க. தஞ்சாவூர், ஆர்.கே. பேட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, சேலம், மதுரை மாதிரி பல ஊர்கள்ல அரசாங்க அனுமதியோட டோர்னமென்டுகள்  நடக்குது. எல்லாத்துலயும் சென்னையோட ஆதிக்கம்தான். இன்னைக்கு களத்துல தாங்கி நிக்குற நல்ல ஹைபிரிடு சண்டைக்கோழி வாங்கணும்னா சென்னைக்குத்தான் வந்தாகணும்...’’  சேவலுக்கு  சுடுநீர் ஒத்தடம் கொடுத்தபடி பேசுகிறார் தட்சிணாமூர்த்தி.

சேவல் சண்டை தமிழர் மரபில் ஊறிய கலை. போரில்லாத காலங்களில், யுத்த உணர்ச்சி குன்றாமலிருக்க அரசர்கள் சேவல்களையும், எருதுகளையும் மோத விட்டு ரசித்தார்கள். பிறகு அது மக் களின் பொழுதுபோக்காக மாறியது. ஒரு கட்டத்தில் அதில் சூதாட்டம் கலக்க, விபரீதம் உருவானது. மரபை மீறி ஊக்கமருந்துகளும், குறுக்கு வழிகளும் உள்ளே புகுந்தன. விளைவாக, மிருகவதைத்  தடுப்புச் சட்டத்தின் கீழ் சேவல் சண்டை கொண்டு வரப்பட்டது. கடும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சில ஊர்களில் மட்டும் இப்போது டோர்னமென்டுகள் நடத்தப்படுகின்றன. இவற்றை இலக்கு வைத்தும்,  விற்பனை நோக்கத்துடனும் ஏராளமானோர் சென்னையில் சண்டைச் சேவல் வளர்க்கிறார்கள்.

‘‘இலங்கை, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், மியான்மர், பாலஸ்தீனத்தில எல்லாம் சேவல் சண்டை இருக்கு. அந்தக் கலை பிறந்த தமிழகத்துல மட்டும் தடை... வீர உணர்ச்சியை வெளிக் க £ட்டுற விளையாட்டு இது. ஒரு சிலர் இதை சூதாட்டமாக்க, ஒட்டுமொத்தமா இந்தக் கலைக்கே தடை போட்டுட்டாங்க. கோயில்கள்ல தினமும் பல நூறு ஆடுகளும், சேவல்களும் பலி கொடுக்கப்படுது.  அதையெல்லாம் கேள்வி கேக்குறதில்லை. சேவல்களை நாங்க வேற்று உயிரினமா பாக்குறதில்லை.

ஒவ்வொருத்தனுக்கும் அதுதான் உயிரு. பெத்த பிள்ளைகளுக்கு இணையா பாத்துப் பாத்து வளக் குறோம். அதுமேல சின்ன கீறல் விழுந்தா கூட எங்க மனசு துடிக்கும். கரடி வித்தையை கராத்தே ஆக்குன மாதிரி, மான்கொம்பு சண்டையை குங்பூ ஆக்குன மாதிரி, கிட்டிப்புல்லை கிரிக்கெட் ஆக் குன மாதிரி... யாராவது வெளிநாட்டுக்காரன் கோழிச்சண்டையை வேற வடிவத்துல கொண்டு வந்தா இங்கே கொண்டாடுவாங்க. நம்ம பாரம்பரியத்தை யாரும் மதிக்கிறதே இல்லை...’’  வருத்தமா கப் பேசுகிற தட்சிணாமூர்த்தி, பத்துக்கும் மேற்பட்ட சேவல்களை வளர்க்கிறார். இவரது வாத்தியார் எம்.எம்.டி.ஏ ராஜ். ராஜின் வாத்தியார் தாம்பாளத்தட்டுக்காரர். குருகுல மரபைப் போல நீள்கிறது இ ந்த உறவு.

‘‘பெத்தவங்களுக்குக் கொடுக்கிறதை விட வாத்தியார்களுக்கு அதிக மரியாதை கொடுப்பாங்க. அவர் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை. ஒவ்வொரு வாத்தியாருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அவங்களுக்குப்  பின்னாடி ஏகப்பட்ட சிஷ்யமார் இருப்பாங்க. பெரம்பூர் நாயுடு, வண்ணாரப்பேட்டை துளசி, புஷ்பநாதன், பெரம்பூர் பிரபா, மயிலாப்பூர் கன்னையன், ஆறுமுகம், கோடம்பாக்கம் துரை, கொருக் குப்பேட்டை பெரியசாமி... இவங்கள்லாம் பெரிய வாத்தியாருங்க. இன்னைக்கு இருக்கிற எல்லா வாத்தியாருங்களுக்கும் இவங்க தான் குரு. பேரைச் சொன்னாலே எல்லாரும் எழுந்து நிப்பாங்க.  சேவலைத் தேர்ந்தெடுக்கிறது, பயிற்சி குடுக்கிறது, அடிபட்டா வைத்தியம் பண்றதுன்னு எல்லா நுணுக்கத்தையும் இவங்கதான் கத்துக் கொடுப்பாங்க...’’ என்கிறார் தட்சிணாமூர்த்தி.

‘‘குங்பூ, கராத்தே, வர்மம், மல்யுத்தம், ஜூடோ... இந்த எல்லாக் கலையும் சேந்ததுதான் சேவல் சண்டை. எல்லா சேவலையும் சண்டைக்கு விட முடியாது. எவ்வளவு அடி வாங்கினாலும் ஓடாம  களத்துலயே நிக்குற சேவலுக்கு ‘ஜமீன்’னு பேரு. அந்த மாதிரி சேவலை, அதோட வம்சத்துலயே பெறந்த கோழியோட இணையவிட்டு ‘பிரீட்’ பண்ணுவோம். பிறக்குற குஞ்சுல எது சண்டைக்கு நி க்கும்னு மூணு மாசத்துல தெரிஞ்சுடும். கண்ணு கருவிழி கடுகு மாதிரி சின்னதா இருக்கணும். வாலும் விரலும் விரிஞ்சிருக்கணும். கால்தண்டும், கழுத்தும் சின்னதா இருக்கணும். பாடி   க்ஷி  ஷேப்புல இருக்கணும். இதெல்லாம் பாத்துத்தான் தேர்ந்தெடுப்போம்...’’ என்கிறார் தயா. இவரும் வாத்தியார்தான்.

இணை தேடத் தொடங்கும்போதுதான் சேவலின் போர்க்குணம் விழிக்கும். அத்தருணத்தில் சேவல்களைப் பிரித்து பயிற்சியை ஆரம்பிக்கிறார்கள். ‘‘கம்பு, கேழ்வரகு, அரிசிதான் தீனி. கொஞ்சம் கெ £ஞ்சமா பயிற்சியை ஆரம்பிப்போம். முதல்ல டிரையல். ரெண்டு சேவலை பக்கத்துல பக்கத்துல நிறுத்துவோம். ரெண்டும் ஆக்ரோஷமா பாத்து கெக்கலிக்கும். தாவிக் கொத்தும். நடைப் பயிற்சி, நீச்சல்  பயிற்சி, ஓட்டப்பயிற்சி கொடுப்போம். போட்டிக்கு கொஞ்ச நாள் முன்னாடி, ‘தயார் தீனி’ போடுவோம்.

பாதாம், பிஸ்தா, அக்ரூட், திராட்சை, அத்திப்பழம், வெள்ளரி விதை, தர்ப்பூசணி விதை, கஜூர்காய்  எல்லாத்தையும் போட்டு இடிச்சு, உருண்டையா உருட்டி நூறு கிராம் கொடுப்போம். மதியம் ஆட்டு மண்ணீரல். சாயங்காலம் ரொட்டி மாவு. 36 வகையான தானியங்களை மாவா அரைச்சு அதிமது ரம், நத்தைச்சூரின்னு சில மூலிகைகளைச் சேத்து முட்டையோட வெள்ளைக்கருவையும் சேத்துப் பிசைஞ்சு உருட்டிக் கொடுத்திருவோம். அதுபோக ஒத்தடம்... வெண்ணெய் ஒத்தடம், சுடுதண்ணி  ஒத்தடம், ஐஸ் ஒத்தடம்னு பல ஒத்தடங்கள் இருக்கு. கோழியோட தன்மையைப் பாத்து தரணும்...’’ என்கிறார் தட்சிணாமூர்த்தி.

‘‘கதர்னு ஒரு ரகம் இருக்கு. அதுதான் களத்துல நின்னு பேசும். தூமாஸ், ஜாவா, அசில், பத்துக்கொண்டை, டேபிள் ஃபைட்டர், கால்பஸ்ரான்னு நிறைய இருக்கு’’ என்கிறார் தயா. 

‘‘சேவல் வளர்க்கிறவங்க எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டாங்க. எந்த கெட்ட பழக்கமும் இருக்காது. சேவல்தான் அவங்களுக்கு வாழ்க்கை. அதனாலயே பல வீடுகள்ல சேவல் வளர்க்க ஆதரவு  கொடுக்கிறாங்க. நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சுட்டு சேவல்களை தூக்கிட்டுத் திரிஞ்சப்போ எங்க வீட்டுல கொஞ்சம் வருத்தப்பட்டாங்க. இப்போ என்னைவிட அவங்க ஆர்வமா இருக்காங்க.  வீட்டுல புள்ளைக்கு பேர் வைக்கிற மாதிரி சேவலுக்கும் பேர் வச்சுக் கூப்பிடுவாங்க. ரிவர்ஸ் கியர், சைலன்ஸர், என்ஃபீல்டு, சிம்ரன் (ஸ்லிம்மா இருக்குமாம்), அட்டகத்தி, மேக்னட்னு நிறைய பேர்கள்  இருக்கு...’’ என்று சிரிக்கிறார் ரகுநாத்.

டோர்னமென்ட்களில் நிறைய கட்டுப்பாடுகள். முதலில் சேவல்களுக்கு மருத்துவப் பரிசோதனை. ஆரோக்கியமில்லாத சேவலுக்கு அனுமதியில்லை. அடுத்து ‘முள்’ செக்கப். கோழிக்கு அதன் கூர்மைய £ன கட்டை விரல்தான் ஆயுதம். முள் போல வளர்த்து வைத்திருப்பார்கள். அதில் விஷம் தடவியுள்ளார்களா என்று பார்ப்பார்கள். அடுத்து சண்டைதான். பயந்து ஓடிவிட்டால் தோற்றதாக பொருள்.  அப்படி ஓடும் சேவலை, அங்கேயே வந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். மூக்கை மண்ணில் வைத்துவிட்டால் தோல்வி. அது பெருமையான தோல்வி. இரண்டும் சளைக்காமல் களத்தில் நின்றால்  டிரா.

‘‘சென்னையிலதான் சண்டைச்சேவல்கள் நிறைய இருக்கு. ஜல்லிக்கட்டுக்கே நிபந்தனையோட கோர்ட் அனுமதி கொடுத்திருக்கு. அதுமாதிரி சென்னையில சேவல் சண்டைக்கும் அனுமதி கொடுக்கலாம்.  இது நம்மோட பாரம்பரியம். நமக்கான அடையாளம். அதை அழியவிடக் கூடாது...’’  தன் செல்லச் சேவலை வருடியபடி சொல்கிறார் தட்சிணாமூர்த்தி.

 வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்